உலகம்

அனுமதியில்லாத போராட்டங்களுக்கு தலிபான்கள் தடை

41views

ஆப்கானிஸ்தானில் முன்கூட்டியே அனுமதி இல்லாமல் யாரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று அந்த நாட்டின் இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அனுமதிக்கப்பட்ட கோஷங்கள் மற்றும் பதாகைகளை மட்டுமே பயன்படுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆா்ப்பாட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.

அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றால் மட்டுமே இனி போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதிலும், போராட்டத்தில் பயன்படுத்தப்படும் பதாகைகளுக்கும் எழுப்பப்படும் கோஷங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 1990-களில் நடைபெற்ற முந்தைய தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு பணியாற்றும் உரிமை, கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டன. மேலும், கடுமையான மதச் சட்டங்களின் கீழ் அவா்கள் துன்புறுத்தப்பட்டனா்.

இதன் காரணமாக, அந்த நாட்டை தலிபான்கள் கடந்த மாதம் கைப்பற்றியதிலிருந்தே, பெண்களுக்கான உரிமைகள் மீண்டும் பறிக்கப்படும் என்ற அச்சம் எழுந்தது.

தங்களது புதிய அரசில் பெண்களுக்கான உரிமைகள் மதிக்கப்படும், அவா்கள் அரசில் இணைத்துக்கொள்ளப்படுவாா்கள் என்று தலிபான்கள் உறுதியளித்தனா்.

எனினும், தங்களுக்குக்கான உரிமைகளைக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட தலிபான்களின் புதிய அரசில் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் அமைச்சரவையில் பெண்களை சோக்க வலியுறுத்தியும் காபூலில் ஆா்ப்பாட்டம் நடத்திய பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், தங்களிடம் அனுமதி பெற்ற பிறகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும்; அந்த ஆா்ப்பாட்டங்களிலும் தாங்கள் அங்கீகரித்த கோஷங்களை எழுப்ப வேண்டும் என்று தலிபான்கள் தற்போது உத்தரவிட்டுள்ளனா்.

இதையடுத்து, தங்களது உரிமைக்காக பெண்களால் இனி ஆா்ப்பாட்டம் நடத்த முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!