தமிழகம்

அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது ஒரு நபர் விசாரணை ஆணையம்.

78views
அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் அறிக்கை தாக்கல் செய்து ஆலோசனையில் ஈடுபட்டார். கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய அரசு சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் அதிமுக ஆட்சியில், நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்ற திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, தஞ்சை, சேலம், வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சகம் ரூ.5,390 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் தற்போது அளிக்கப்பட்ட தொகை ரூ.3,969 கோடி ஆகும். ஒன்றிய அமைச்சகத்தில் இருந்து ரூ.1,421 கோடி வர வேண்டி உள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் தியாகராய நகரில் மழைநீர் தேங்கி நின்றது. சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்றது. அதை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றும் இதை விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக முதலமைச்சரிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர், ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக அறிக்கை கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!