உலகம்உலகம்செய்திகள்

‘அதிகாரத்தில் பங்கு தருகிறோம்; வன்முறையைக் கைவிடுங்கள்’: தலிபான்களுக்கு ஆப்கன் அரசு கோரிக்கை

50views

அதிகாரத்தில் பங்கு தருகிறோம்; வன்முறையைக் கைவிடுங்கள் என மத்தியஸ்தர்கள் மூலம் ஆப்கன் அரசு தலிபான்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறுகிய காலத்தில் 10 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். குந்தூஸ், தலூக்கான், ஷேபேர்கான், ஜரான்ஜ், சமங்கன், ஃபாரா, கஸ்னி உள்ளிட்ட 10 மாகாணங்களை தலிபான்கள் வசம் சென்றுவிட்டது.

இந்நிலையில், கத்தாரில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான சர்வதேச ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரிட்டன், உஸ்பெகிஸ்தான், கத்தார் நாட்டுப் பிரதிநிதிகளும், ஐ.நா சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, ஆப்கானிஸ்தான் சார்பில் மத்தியஸ்தம் பேசும் கத்தாரின் வாயிலாக, தலிபான்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் பங்கு அளிக்கிறோம் ஆனால், வன்முறையைக் கைவிடுங்கள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், காபூல் – காந்தஹாரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை தலிபான்கள் ஆக்கரமிக்கத் தொடங்கிவிட்டனர். மொத்தம் 34 மாகாணங்களில் 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் தலிபான் தீவிரவாதிகளிடம் சென்றுவிட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!