ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட் நாட்டில் இருந்து 53 அகதிகளுடன் படகு ஒன்று அட்லாண்டிக் கடல் வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் நோக்கத்தோடு கடந்த வாரம் படகு ஒன்று புறப்பட்டது. அந்த படகு ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகளுக்கு 220 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்பெயின் கடற்படையினர் விபத்துக்குள்ளான படகு மூழ்கிய இடத்திற்கு சென்றனர்.
அங்கு விபத்துக்குள்ளான படகின் பாகங்களை பிடித்துக்கொண்டு ஒரே ஒரு பெண் மட்டுமே உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். அந்த பெண்ணை மீட்ட ஸ்பெயின் கடற்படையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஞ்சிய 52 பேரும் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் ஸ்பெயின் கடற்படையினர் மாயமானவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.