தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பிற்கு, கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

46views
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக, கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், திருவில்லிபுத்தூர் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்டுமானத் தொழில், பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்கள், நூற்பாலைகள், அட்டைப் பெட்டி தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில் வேலை பார்த்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்தி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. இதனால் வெளி மாநில தொழிலாளர்கள் மத்தியில் சிறிது அச்சம் ஏற்பட்டது. ஆனால் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டதால் பதற்றம் குறைந்தது. ஆனாலும் வெளி மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலோ, பிரச்சினைகள் குறித்து புகார்கள் தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இதில் வரும் தகவல்கள் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநில தொழிலாளர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று செய்தி குறிப்பில், ஆட்சியர் ஜெயசீலன் தகவல் வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!