தமிழகம்

சிவகாசி மாநகராட்சி கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – திமுக கவுன்சிலர் மீது, மதிமுக கவுன்சிலர் காவல் நிலையத்தில் புகார்

46views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை. இந்த நிலையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா தலைமையில், சிவகாசி பகுதியைச் சேர்ந்த 24 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கருத்து கேட்பு கூட்டத்தில் காரசாரமாக விவாதம் நடந்தது. அப்போது பாஜக கவுன்சிலர் குமரி பாஸ்கருக்கும், மதிமுக கவுன்சிலர் ராஜேஷிற்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் பாஜக கவுன்சிலருக்கு ஆதரவாக, திமுக கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் வெயில்ராஜ், மதிமுக கவுன்சிலர் ராஜேஷை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது கருத்து கேட்பு கூட்டத்திலிருந்து வெளியேறிய ராஷேஸை, வெயில்ராஜ் தாக்க முயன்றார். இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதனையடுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும், தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியதாகவும் திமுக கவுன்சிலர் வெயில்ராஜ் மீது, மதிமுக கவுன்சிலர் ராஜேஷ் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி கருத்து கேட்பு கூட்டத்தில் மதிமுக கவுன்சிலரை, கூட்டணி கட்சியான திமுக கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரே தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!