தமிழகம்

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மீனுக்காக விரித்த வலையில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு – பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டது

51views
மதுரை திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் முழுவதும் நிரம்பி காட்சியளிக்கிறது. இந்த கண்மாயின் அருகே உள்ள விளாச்சேரி, முனியாண்டிபுரம் பகுதியில் உள்ள சிலர் கண்மாய் பகுதியில் தினந்தோறும் வலை விரித்து மீன் பிடித்து வருகின்றனர்.
வழக்கமாக மாலை வேலைகளில் தண்ணீருக்குள் வலை விரித்து மறுநாள் காலை வலையில் சிக்கிய மீன்களை எடுப்பது வழக்கம். இதே போல் நேற்று மாலை மீன் பிடிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கண்மாய்க்குள் வலை விரித்து வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வலையில் உள்ள மீன்களை எடுப்பதற்காக வலையை மேல்நோக்கி இழுத்த போது வலைக்குள் பத்தடி நீள மலைப்பாம்பு சிக்கி உள்ளது கண்டு அதிர்ச்சியுற்றனர்.
மலைப்பாம்பு சிக்கிய தகவல் காட்டு தீயாய் அப்பகுதியில் பரவ மலைப்பாம்பை காண அப்பகுதி மக்கள் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது அதனைத் தொடர்ந்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான சமூக ஆர்வலர் சகாதேவன் என்பவருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சகாதேவன் வலையில் இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார்.
தொடர்ந்து., வனத்துறைக்கு தகவல் அளித்து மலைப்பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள மலைப்பகுதியில் பாம்பை கொண்டு சென்று விட்டனர். இதேபோல் கடந்த மாதமும் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டி பகுதியில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.
வைகை ஆற்றில் தொடர்ந்து நீர் திறப்பு இருப்பதால் வைகை அணையில் இருந்து மலைப்பாம்பு வந்திருக்கலாம் எனவும் மேலும் அதிகளவில் மலைப்பாம்புகள் இப்பகுதியில் இருக்கலாம் எனவும் சமூக அலுவலர்கள் தெரிவித்தனர். மீனுக்காக விரித்த வலையில் மலைப்பாம்பு சிக்கிய சம்பவம் விளாச்சேரி, முனியாண்டிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!