தமிழகம்

ராஜபாளையம் அருகே கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

58views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கோரி ஏஐசி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் நாளை(திங்கட்கிழமை) முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது‌.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தறிக்கூடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடப்படும். ஒப்பந்தம் 12.8.21 வரை முடிவடைந்துவிட்டது. ஒப்பந்தம் முடிந்து 18 மாதங்கள் ஆகியும் இதுவரை கூலி உயர்வு வழங்கவில்லை‌. ‌தற்போது ஒப்பந்த கூலி உயர்வு கோரி கடந்த ஜன‌.20ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் கூலி உயர்வு வழங்க முன்வரவில்லை. இதையடுத்து தளவாய்புரம் ஜீவா நகரில் சனிக்கிழமை சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் விசைத்தறி தொழிலாளர்களுக்கான மகாசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மூன்று கட்டமாக அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்க முன் வராததால் அவர்களை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள் அனைவரும் (நாளை) திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக மகாசபை கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவித்தனர். கூட்டத்தில் சிஐடியூ, தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், கைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர், ராசு, ஏஐடியுசி சார்பில் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்‌.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!