இலக்கியம்சிறுகதை

டாய்புண்

282views
அந்தி சாய்ந்த நேரம். கதிரவன் படுக்கைக்கு செல்ல சந்திரன் காவலுக்கு பொறுப்பேற்றான். மூன்று வயதான செல்ல பிள்ளை பிபுவோடு அப்பா ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார். பிபுவுக்கு எல்லா குழந்தைகளை போல பல நிறங்களான பந்துகளோடு விளையாடுவது மிகவும் அதிகமாக பிடிக்கும் ஒன்று.
அப்பா மஞ்சள் நிற பந்தை எடுத்து பிபுவிடம் உருட்டி விடுவார். பிபு பிடித்த அந்த பந்தை மீண்டும் அப்பாவை நோக்கி உருட்டி அல்லது தூக்கி எறிவான். ஒருமுறை அப்பா செய்வது போல அப்படியே செய்வான். மறுமுறை திருப்பி எறியாமல் பந்தை எடுத்துக் கொண்டு வேறு இடத்திற்கு ஓடிடுவான். பின்னர் அப்பா அவனைத் தொடர்ந்து ஓடி பிடிக்க முயற்சிப்பார்; அப்பாவின் பிடியில் அகப்படாமல் தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது, பிபுவின் மழலை சிரிப்பில் வீடே மகிழ்ச்சியில் மிதந்தது. அந்த வீட்டில் மகிழ்ச்சி மகிழ்ச்சியாகவே இருந்தது.
பிபு ஏதேனும் சுழலும் பொருட்களை கண்டால் கண் இமைக்காது பார்ப்பான். மின்விசிறி, சுழலும் சக்கரங்கள்… இப்படி சுற்றும் அனைத்தையும் கண் சிமிட்டாமல் சுற்றும் பூமியை வியப்புடன் பார்ப்பது போலவே பார்த்து ரசிப்பான். ஒரு முறை பிபுவும் அப்பாவும் திருவிழாக்கு சென்றிருந்த போது அங்கு அழுது அடம்பிடித்து அவன் வாங்கிய ஒரு பொருள்தான் காத்தாடி. அந்த காத்தாடியை ‘காத்தாடி’ என்று உச்சரிக்க தெரியாத மழலை அவன் ‘டீட்டாலி’ என்று பெயரிட்டு அழைத்தான். ஒரு வேளை ஆங்கில எழுத்தில் வரும் ‘T’ வடிவில் இருப்பதால் தானோ என்னவோ அவன் இந்த பெயரை சூட்டி அழைத்து மகிழ்ந்தான்.
கையில் சுழற்றி மேலே பறக்க விடும் ஒரு காத்தாடி அதாவது ஒற்றைகுச்சி இரண்டு இறக்கை இருக்கும் அல்லவா! அதுதான். அந்த காத்தாடியில் இருக்கும் குச்சியை உள்ளங்கையில் வைத்து முன்பின்னாக சுழற்றி மேல்னோக்கிய அழுத்தம் கொடுத்து, உள்ளங்கையில் இருந்து விசிறியை எடுத்து விட்டால் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
எங்கோ தூரத்தில் ஆகாயத்தில் சுற்றிச் சென்று கொண்டிருக்கும் ஒரு ஹெலிகாப்டர் முழுவதும் கண்ணில் தெரியாமல், அதன் அச்சோடு கூடிய இறக்கை மட்டும் சுற்றுவதை பார்ப்பது போலவே இருக்கும். சில சமயம் விசிறியை முடுக்கி விடும்போது அது பிஞ்சு பாலகனை சுற்றி வரும். அது சுற்றி சுழன்று செல்லும் திசையெல்லாம் பிபுவும் தன் தலையை சுற்றி சுற்றி ஹை டீட்டாலி ஹை… என்று பின் தொடர்ந்து கொண்டே செல்வான். அப்போது அவனோடு சேர்ந்து அவனுடைய கைகள் இரண்டும் ஒன்றை ஒன்று தட்டி உணர்ச்சிபூர்வமாக கர ஒலியை எழுப்பும்.

பெரியவர்கள் சிறு பிள்ளைகளோடு விளையாடும்போது, மழலையில் மயங்கி அவர்களும் சிறுவர்களாக மாறிவிடுவார்கள் அல்லவா! அதுபோல, அன்று அப்பாவும் மயங்கி அந்த காத்தாடி விடுவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். இப்படி ஒன்று நடந்தது என்று சரித்திரமும் இல்லை. எங்கும் எதிலும் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை.
ஆசையோடு வாங்கி வந்து ஆனந்தத்தோடு விளையாடிய அந்த காத்தாடியை எடுத்து, அந்த அறையின் சீலிங்கை தொடவேண்டும் என்பதை இலக்காக நிர்ணயத்து, மழலை மகிழவே அவன் முன்னே சற்று தொலைவில் வைத்து அப்பா அந்த காத்தாடியை சுழற்றி முடுக்கி விட்டார்.
ஊர்க்குருவி ஒன்று சிறகை விரித்து வான் நோக்கி பறந்தது போல, அந்த காத்தாடியும் பறந்து சென்று சீலிங்கை தொடுவதை பார்ப்பதற்கு ஆவலுடன் இருவரும் காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராமல் துரதிஷ்டவசமாக, பாதியில் திரும்பி வந்து பிஞ்சு பாலகன் பிபுவின் கண்களுக்கு கீழ் கன்னங்களுக்கு மேல் ஒரு கீறலிட்டு சட்டென்று கீழ் விழுந்தது. இட்ட கீறலில் இருந்து இரத்தம் வழிந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் கன்னத்தில் ஒரு கீறல் விழ குடும்பமே சொல்வதற்கியலாத சோகத்தில் மூழ்கியது. வழிந்த இரத்தத்தை துடைத்து கீரலின் உள்ளே பார்க்க வெள்ளை என்றால் வெள்ளை; அப்படியொரு வெள்ளை; அவனுடைய எலும்போ நரம்போ தெரிவது பார்த்து அப்பா நடுநடுங்கி போனார். அன்றுதான் ஈன்ற தாயின் இரத்தத்தில் இருந்து உருவான பிபுவின் இரத்தத்தில் ஒரு சொட்டு நம்மை தாங்கி சுமந்துக் கொண்டிருக்கும் பூமித் தாய்க்கு காணிக்கையாக்கினான்.
பிறகு அவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கூட்டி சென்று வந்தனர். பின்னர் சில பல நாட்கள் கடந்து அந்த புண் ஆறியும் ஆறா தழும்பாக மாறிபோனது.
“என்னை மன்னிச்சுடுடா சாமி. அந்த வலிய எப்படிதான் நீ, பொறுத்துக்கிட்டியோ?” அப்பா பிபுவை பார்க்கும் போதெல்லாம் இந்த பீலிங்க்ஸ்தான்.
“இப்படி செய்திட்டேனே, முட்டாள்தனமாக பண்ணிட்டேனே! என்னால தானே இந்த பிஞ்சு முகத்தில இப்படி ஒரு தழும்பு”. வள்ளுவர் ஐயா அவர்கள், நாட்கள் செல்ல செல்ல உடம்பில் ஏற்பட்ட புண்கள் ஆறிவிடும் என்றார். ஆனால் எப்போது தான் இந்த தழும்பு மாறுமோ? என்றைக்கு தான் இந்த தழும்பு மறையுமோ? என்று அப்பாவின் மனதிற்குள் அணையா நெருப்பு புகைந்து கொண்டே இருந்தது.
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அப்பாவின் முகத்தை பார்த்து விழித்து எழுந்தவுடன் பிபு அப்பாவை கட்டி அணைத்து உம் உம்… என்று முத்தம் கொடுப்பான். ஆனால் ஆசையோடு பிபு தந்த முத்தத்தில் மகிழ்ந்த அப்பவுக்கு, அந்த நேரத்தில் கறுக்கரிவாள் கொண்டு கரகர, கரகர… என்று அவருடைய இதயத்தை அறுப்பது போலவே தோன்றியதாம்.
ப. பிரபாகரன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!