உலகம்

சிங்கப்பூரில் ‘ஈடுபடு இமயம் தொடு’ நிகழ்ச்சி

390views
வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையின் ஏற்பாட்டில், ‘ஈடுபடு இமயம் தொடு’ என்ற தலைப்பில் நகைச்சுவைச் சொற்பொழிவு ஏப்ரல் 11 அன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சமூகத் தலைவர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், மாணவர்கள், சங்க உறுப்பினர்கள் உட்பட ஏறக்குறைய 350 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
வரவேற்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர் பட்டயக் கணக்காளர் முனைவர் மு. அ. காதர், இவ்வாண்டு தமிழ்மொழி விழாவின் கருப்பொருளான ஈடுபாட்டின் முக்கியத்தை எடுத்துரைத்தார்.
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் கடந்த 15 ஆண்டுகளில் 150 நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஈடுபாடு என்றும் முனைவர் காதர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் தமிழ் முரசு நாளிதழ் துணை ஆசிரியர் சபா. முத்து நடராஜன் ‘ஈடுபாடு’ என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்.
இளையர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் மகாலெட்சுமி, செல்வராஜ் விஷாலினி, மோகன் ஹரிவர்த்னி, சுந்தரவடிவேல் ப்ரபவ் இணைந்து ‘மொழி எதற்கு? தமிழ் எதற்கு?’ என்ற அங்கத்தை மிக சிறப்பாகப் படைத்தார்கள்.
மூத்த பாடகர் இசைக்கலைஞர் இர்ஃபானுல்லா பாடிய சிறப்புப் பாடல் இடம்பெற்றது. அத்துடன், பொதுக் கல்வி உயர்நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற ரேஹான் ராஜ் முகமது என்ற மாணவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் அங்கமும் இடம்பெற்றது.

‘பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்றுக் கொடுப்பதைப் பரிசாகப் பார்க்கிறேன்’ என்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற நியமன உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு தமிழ்மொழியின் அவசியத்தை எடுத்துரைத்தார்.  தம்மால் தமிழில் உரையாட முடிந்ததால் தமிழ் மட்டும் தெரிந்த பெண் நோயாளி ஒருவரின் உடல்நலம் தேறி வந்த அனுபவக் கதையை விளக்கினார் டாக்டர் ஹரேஷ்.  “மொழி என்பது தகவல் பரிமாற்றிக் கொள்ள பயன்படுத்தப்படும் கருவி மட்டுமன்று, அது வலிமையான பாலம்,” என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியின்போது, 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டூழியம் செய்து சமூக நல பணிகளில் ஈடுபட்டு இருக்கின்ற எழுத்தாளரும் இதழாசிரியருமான ‘புதிய நிலா’ மு. ஜஹாங்கீருக்கு “ஜமாலியன் விருது” வழங்கப்பட்டது.

புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர், தொலைக்காட்சிப் புகழ் நகைச்சுவை நாவலர் புலவர் மா. இராமலிங்கம் ‘ஈடுபடு இமயம் தொடு’ என்ற தலைப்பில் நகைச்சுவை மிகுந்த சொற்பொழிவை வழங்கினார். ஈடுபாடு இருந்தால் இமயத்தை தொடலாம் என்று குறிப்பிட்டு பேசினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் அப்துல் மாலிக் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
கல்வி சார்ந்த சமூக நலப்பணிகளை ஆற்றி வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) நடத்திய இந்நிகழ்ச்சி, சங்கத்தின் 152வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!