சிறுகதை

வாரிசு

366views
திருமண வீட்டில் சமையலை முடித்துவிட்டு அலுத்துப்போய் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் கணபதி. அப்பாடா என்று சேரில் அமர்ந்தவர் மனைவியிடம் கூறினார், “லஷ்மி! இந்த சமையல்காரப் பொழைப்பு என்னோட போகட்டும், நம்ம பையனை பெரிய இன்ஜினீயர் ஆக்கணும்.”
“ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். இப்படி அடுப்புல வெந்து சாகிற பொழைப்பு உங்க பரம்பரையில உங்களோட முடியட்டும்” என்றாள் லக்ஷ்மி.
நாட்கள் ஓடின. மகன் ஹரி பிளஸ்2-வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தான்.
“ஏம்பா எந்த காலேஜ்ல இன்ஜினீயரிங் அப்ளிகேஷன் வாங்கியிருக்க?” என்று கேட்டார் கணபதி
“மன்னிச்சிருங்கப்பா. நான் இன்ஜினீயரிங் படிக்க விரும்பலை.”
மகன் கூறியதும் பதறிப் போனார் கணபதி. தன் கனவை மகன் சிதைத்துவிடுவானோ என்று பதறியது அவர் மனம்.
“ஹரி! நீ இன்ஜினீயரிங் படிக்கணும்கறது அப்பாவோட கனவுப்பா. அதை கலைச்சிடாதடா கண்ணா” மகனிடம் வாஞ்சையுடன் கூறினார்.
தாழ்ந்த குரலில் தந்தைக்கு பதில் கூறினான் ஹரி.. “அப்பா.. இன்ஜினீயர் படிப்பு ஒரு காலத்துல பெரிய படிப்புதான். இல்லைன்னு சொல்லல. ஆனா இப்ப தெருவுக்குத் தெரு இன்ஜினீயரிங் காலேஜ் மலிஞ்சு போச்சு. இன்ஜினீயர்களுக்கு வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பா ஆயிடுச்சுப்பா.”
“சரி, வேற என்ன படிக்கலாம்னு இருக்க?”
“கேட்டரிங் டெக்னாலஜி.”
மகன் சொன்னதும் தூக்கி வாரிப் போட்டது கணபதிக்கு.

“ஏம்பா இந்த சமையல் வேலை என்னோட போகட்டும்னு நானும் உங்க அம்மாவும் நெனைக்கிறோம், நீ என்னடான்னா வாழையடி வாழையா இந்தப் பொழைப்புக்கே வரணும்னு துடிக்கிறியே?”
“அப்பா சமையல்னா கேவலமாப்பா? ஊருல கேட்டுப் பாருங்க கணபதி சமையலப் பத்தி. உங்க சமையல்னா ஊர் சனம் ஒன்பது பந்தி கழிஞ்சும் காத்திருந்து சாப்பிட்டுட்டு போகும். ருசியா சமைக்க உங்களைப்போல ஒண்ணு ரெண்டு பேர்தாம்பா ஊர்ல இருக்காங்க. உங்க சமையல் கலை உங்களோட அழிஞ்சுபோயிடக் கூடாது.அதுக்கு வாரிசா நான் வரணும். அதுக்காகத்தான் கேட்டரிங் டெக்னாலஜி படிக்கறேன்.
ஏட்டுப் படிப்போட உங்க அனுபவ பாடமும் சேர்ந்தா நாட்டிலேயே நான் பெரிய சமையல் கலைஞனா ஆயிடுவேன். ஆயிரம் இன்ஜினீ யர்கள் எளிதா உருவாகிடுவாங்க. ஆனா வாய்க்கு ருசியா சமைக்க ஒரு கணபதி உருவாகிறது ரொம்ப கஷ்டம்பா. நான் ஒரு கணபதியா உருவாக விரும்புறேன்”
என்றவாறு கேட்டரிங் படிப்புக்கான விண்ணப்ப படிவத்தை தந்தையின் காலில் வைத்து வணங்கினான் ஹரி.
“ரொம்ப நல்லா வருவப்பா” என்று கண்ணீர் மல்க மகனை ஆசீர்வதித்தார் கணபதி.
மண்ணச்சநல்லூர் பாலசந்தர்

10 Comments

  1. Super. எதார்த்தமான சூழ்நிலை அப்படியே படமாக்கி , கதையாக்கி உள்ளீர்கள். அருமை வாழ்த்துகள்

  2. மிகச் சரியன,புத்திசாலித்தனமான முடிவு.

  3. ‘வாரிசு’களால் ‘கணபதி’கள் வாழ்கிறார்கள். Good promo!

  4. படிக்கின்ற பொழுது மனதுக்கு இதமாக இருந்தது

    சரியான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறீர்கள்

    முடிவு திருப்திகரமாக இருந்தது

    இந்த காலத்துப் பிள்ளைகளை எந்த இடத்திலும் திணிக்காமல் அவர் விருப்பத்திற்கு விடுவது தான் சாலைச் சிறந்தது

    பாலச்சந்தருக்கு பாராட்டுக்கள்

  5. யதார்த்தமான உண்மை. இன்றைய இளைஞர்கள் கண் மூடி தனமாக படிப்பது அவசியம் இல்லை… கண் திறந்து சமுதாயத்தில் எப்படி முன்னேற வேண்டும் என நினைப்பது அவசியம் என்பதை நாம் உணர சொல்லி உள்ளது அருமை.

Leave a Reply to Ramya Kalaivani Cancel reply

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!