சிறுகதை

தரிசனம்

16views
பொ.வெ.ராஜ்குமார்
“டேய், நடராசா! உன்னுடைய பாட்டனார், தாசில்தாராக இருந்த போது, பாழடைஞ்சி இருந்த நம்ம ஊரு காட்சியம்மன் கோயிலோட மூன்றடுக்கு கோபுரத்தையும், பிரகாரத்தையும் சீரமைச்சு, புதுசா டைல்ஸ் போட்டு, கும்பாபிஷேகம் செஞ்சு, புனரமைச்சவருடா! மகா சக்தி வாய்ந்த தெய்வம்டா!
நீ முதல் முதலா, ட்ரெயினிங் முடிச்சு அரசாங்கப் பதவியேற்றதும், நம்ம குலதெய்வமான, அம்பாளை தரிசிச்சு அவ ஆசியோட, உன் வேலையை ஆரம்பிச்சா, அமோகமா உன்னோட வாழ்க்கையில வருவடா! நான் சொல்றதைக் கேளுடா!”
-அம்மா. சென்னையில், IAS ட்ரெயினிங் முடிச்சு, அறநிலையத் துறையில் உதவி ஆணையராப் பதவியேற்ற நாளில் இருந்து, அம்மாவின் தொடர்ந்த நச்சரிப்பு. இன்று, அதைத் தட்டமுடியாமல், சொந்த ஊரான வடக்குப்பட்டி கிராமத்திற்குச் செல்ல முடிவெடுத்து, இதோ, மூன்று கார்களில், குடும்பத்தோடு, உதவியாளர்கள் புடைசூழ புறப்பட்டு விட்டார், சிதம்பரம் நடராசன், IAS.
சென்னையில் காணமுடியாத கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமைசூழ்ந்த வயல்களைக் கடந்து, வடக்குப்பட்டி ஶ்ரீகாமாட்சியம்மன் கோயிலுக்கு அனைவரும் வந்து சேர்ந்தார்கள்.
கோயில் வாசலிலேயே, பூரண கும்ப சலசத்தோடு அர்ச்சகர்களும், அறங்காவலரும், அரசு தனி அலுவலரும், சிப்பந்திகளும், அவர்களை வரவேற்றார்கள். வேத மந்திரங்கள்முழங்க, அர்ச்சகர், பூமாலையை நடராசனுக்கு அணிவித்து, நெற்றியில் திலகமிட, அறங்காவலர், அவருக்கு பட்டுச் சால்வை அணிவிக்க, அனைவரும் கோயிலுக்குள் சென்றார்கள்.
கோயிலின் பிரதான வாயிலுக்குள் நுழைந்தால், துவஜஸ்தம்பம், நேரே உட்பிரகாரம், அதன்பின் கர்ப்பக்கிரகம். உட்பிரகாரத்தில், இடது பக்கம் பக்தர்களின் ப வடிவில், பொது தரிசன வரிசை- வலப்பக்கம், இருவரிசைகள்; ஒன்று ₹50/- சிறப்புக் கட்டண வரிசை, அடுத்து VIP க்கள் செல்லும் வழி.
நடராசன் மற்றும் அவனது குடும்பத்தினரை, VIP வரிசையில், அழைத்துச் சென்றார், அறங்காவலர். நெடுநாட்கள் கழித்து வந்ததால், நடராசனின் தாயார், உணர்ச்சி வசப்பட்டு, உட்பிரகார வாசலைத் தொட்டு வணங்கி உள்ளே காலடி எடுத்து வைத்தார்.
இடப்பக்க பொதுதரிசன வரிசையில், பக்தர்கள் முண்டியடித்து, வேர்வையில், கசங்கி, நெடுநேரமாக நின்று கொண்டிருந்தார்கள். யாருமில்லாத VIP வரிசையில் இவர்களை ராஜமரியாதையோடு அழைத்துச் செல்வதைப் பார்த்த நடராசனுக்குச் சிறிய குற்றவுணர்வு தாக்கும் வேளையில், பொது வரிசையில், பொறுமையாய் நின்றிருந்த அந்த முதியவரைப் பார்த்துவிட்டார். அவர்., அவர்.
ஆ! இவரா? அந்தமுதியவர் இவருடைய குரு, முதன்முதலாக ட்ரெயினிங் முடித்து, இளநிலை அதிகாரியாகப் பயிற்சி கொடுத்த இவருடைய ஆசான், திரு சிவகடாட்சம், IAS அவர்கள். இவர் எப்படி இங்கே? அதுவும் இந்தக் குக்கிராமத்தில்.
கேள்வி மண்டையைக் குடைந்தாலும், பின்னே வந்துகொண்டிருந்த தன்னுடைய உதவியாளரைக் கையசைத்து அழைத்தார், நடராசன். அவன் உடனே, வரிசையின் முன்னால்வர, அவனிடம், “குமரேசா! பொதுதரிசன வரிசையில், என்னுடைய குருநாதர், அதோ, வியர்வையில் கசங்கிய வெள்ளைச்சட்டையும், அழுக்கு வேட்டியும் கட்டிக்கொண்டு நிற்கிறாரே, அவரைக் கூப்பிட்டுக் கொண்டு இந்த VIP வரிசையில் வரச்சொல். பாவம் முதிய வயதில் தள்ளாடிக் கொண்டு நிற்கிறார். போ! போய் அவரை அழைத்துவா!” என உத்தரவிட்டார்.
உடனே அவனது உதவியாளர், பின்னே போய், பொது தரிசன வரிசைக்குச் சென்று, இரும்புக் கம்பிகள் போட்ட அந்த வழியின் வெளியே நின்று, அந்த முதியவரிடம் பேசுவதைக் கவனித்தார், நடராசன். கூட வந்து கொண்டிருந்த அறங்காவலர், “ சார் நாம் முன்னே செல்லலாம். சிறப்பு பூஜைக்கு ஏற்பாடுகள் தயார்!” எனக் அவரின் காதில் மெல்லச் சொன்னார்.
வேறு வழியில்லாமல், அவரோடே சென்ற நடராசன், திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே முன்னே சென்றார். உட்பிரகாரம் கடந்து, கர்பபக்கிரக வாயிலை அடைந்ததும், அதன் வாசலைத் தொட்டுக் கும்பிட்டார். நிமிர்ந்து பார்த்தபோது, அம்பாள், வைர மூக்குத்தி ஜொலிக்க, பச்சை நிறப் பட்டுப் புடவையில், பொன்னிறக் கிரீடத்தோடு, கருணைப் பொங்கும் பார்வையோடு, ‘வா! என் மகனே’ என ஆதுரத்துடன் சிரித்தபடி அருள் பாலித்தாள்.
அவளின் இருதோள்களைச் சுற்றி, மல்லி, கதம்ப மாலைகள் படமாக விரிந்து, போர்த்தியிருக்க, திருக்கரங்களில், பாசம், அங்குசம், கரும்புவில், மற்றும் மலர் அம்புகளுடன், சாந்தமாக அமர்ந்தபடி, திருவடி காட்டி, புன்முறுவல் பூத்துக் காத்துக் கொண்டிருந்தாள், ஶ்ரீகாமாட்சி!
அம்பாளின் பரிபூரணத் தரிசனக் காட்சியை கிட்டத்தில் நின்று பார்த்து, கண்கள் குளமாக, தான் வாழ்க்கையில் எட்டிய வெற்றியின் முதல்படிக்குத் தலைவணங்கி, ஆசிர்வாதம் வேண்டி நின்றார், நடராசன். சிறப்புப் பூஜைகள் ஆரம்பமாயின. தனது தாயார் கொண்டு வந்திருந்த பட்டு வஸ்திரம், பழங்கள், பூக்கள் அடங்கிய தட்டை வாங்கிய அர்ச்சகர், நேர்த்தியாக, அந்தப் புடவையைப் பிரித்து, நீவி, மூன்று மடிப்புகளாக அடுக்கி, அம்பாளின் மடியில் சாத்தினார்.
வேத மந்திரங்கள் ஓங்க, கோயில் மணி இசைக்க, தீபாராதனை காட்டப்பட்டது. கற்பூர ஜ்வாலையைக் கண்களில் ஒற்றிக் கொண்டு, அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தை வாங்கியபடியே, பின்னால் திரும்பிப் பார்த்தார். அந்த முதியவரை எங்கும் காணவில்லை. குமரேசனைத் தேட, அவன் அருகில் வந்து காதில் ஏதோ கிசுகிசுத்தான். அதைக் கேட்ட நடராசனின் முகம் சட்டென மாறிப் போனது.
எல்லோரும் திரும்பக் கோயிலின் உட்பிரகாரத்தை அடைந்தனர். அங்கே அம்பாளுக்குச் சாற்றப்பட்ட மாலையை அணிவித்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நடராசனின் முகம், தன்னுடைய குருவிற்கு அபகீர்த்தியை செய்துவிட்டது போல, குற்ற உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
அவர்கள் யாவரும் கோயில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி வந்த போதும், அவரைத் தேடினார். எங்கும் அவரைக் காணவில்லை. பின்னர், கோயில் அலுவலகத்திற்கு வந்து, அறங்காவலரும், அரசு அலுவலரும், கோயிலுக்கு செய்து வரும் கைங்கரியங்களை விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தனர். தன்னுடைய வேண்டுகோளை மறுத்து வராமல் இருந்த குருவின் செயல் அவரின் மனதை வருத்த, ஒன்றும் விளங்காமல், கேட்டுக் கொண்டிருந்தார், நடராசன்.
மதிய உணவு அருந்திச்செல்ல, அர்ச்சகர் வேண்டியபோது, மறுத்த நடராசன், சென்னைக்குத் தான் அவசரமாக திரும்ப வேண்டும் என்றும், அற்புதமான தரிசனத்தை ஏற்பாடு செய்தமைக்கு நன்றிகள் கூறியும், அவரும், அவருடைய தாயாரோடு, கோயிலுக்கு வெளியே வந்தார்கள்.
அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அவர் காரில் ஏறும் சமயம், சற்றே தூரத்தில், தன்னுடைய ஆசான், திரு சிவகடாட்சம் IAS ., ஒரு டீக்கடையில் அமர்ந்தபடி தேநீர் அருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார். உடனே தன்னுடைய தாயாரிடம் “நீங்கள் யாவரும் வண்டியில் ஏறுங்கள், நான் போய் ஒரு முக்கியமான நபரைச் சந்தித்துவிட்டு வருகிறேன். ஐந்தே நிமிடங்கள் தான்”, என்று கூறிவிட்டு, அந்த டீக்கடையை நோக்கி விரைந்தார்.
“ஐயா! வணக்கம். நான் நடராசன்”, என் அறிமுகப்படுத்திக் கொண்டார். டீத்தண்ணியின் சுவையில் திளைத்திருந்த அந்த முதியவர், கண்களை உயர்த்தி அவரைப் பார்த்தார். யாரென்று அடையாளம் தெரியாமல், குழம்பி, நெற்றியை சுருக்கியபோது, “தங்களிடம் இரண்டு வருடங்களுக்கு முன்னால், மக்கள் நலத்துறையில் தாங்கள் மேலதிகாரியாக இருந்த போது நான் IAS ட்ரெயினிங் முடித்து, தங்களிடம் பயிற்சி எடுக்க வந்திருந்தேன்.
என்னோடு, மூன்று அதிகாரிகளுக்கும், தாங்கள் தான் நேரிடையாக மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை நீக்கும் பயிற்சியை, ஆறுமாதங்களுக்குத் தாங்கள் வழங்கினீர்கள்”, என்று கூப்பிய கைகளை விலக்காமல், நெகிழ்ச்சியோடு விவரித்தார்.
“ஓ! அப்படியா! நல்லது தம்பி! ஏதோ சற்று ஞாபகம் வந்தாற் போல இருக்கிறது. நீங்க இப்போ.., அறநிலையத் துறையில் இருக்கீங்களோ?” என்றார். “ஆமாம் சார், உதவி ஆணையராக சென்னையில் ஒரு வாரத்திற்கு முன்பு தான் பதவியேற்றுக் கொண்டேன். தங்களை, எங்களுடைய குலதெய்வக் கோயிலில் சந்தித்தது, அம்பாளின் கருணை!” என்று கூறினார், நடராசன்.
டீக்கோப்பையை பெஞ்சில் வைத்துவிட்டு வலது கையைத் தூக்கி அவரை ஆசிர்வதித்தார், முதியவர். “மகிழ்ச்சி தம்பி! வாழ்த்துகள்!” என்றார். “ஐயா! தாங்கள் எங்கே இங்கு..” என நடராசன் வினவினார்.
அதற்கு அவர், “தம்பி, இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் தான் உள்ளது எனது சொந்த கிராமம். வாழப்பந்தல்னு பேரு. அங்கே தான் என்னோட பூர்வகுடி வீடு இருக்கு. உன்னுடைய தாத்தா துரைசாமி நாயக்கர், இந்த அம்பாளின் கோயிலை எப்படி புனரமைச்சுக் கட்டிக் கொடுத்தாரோ, அதே போல, நானும் எங்க குலதெய்வக் கோயில்- வீரட்டேஸ்வரர்- சிவன் கோயிலுக்கு என்னால முடிஞ்ச கைங்கரியங்களை செய்துட்டு வரேன்.
அதிலே எனக்கு ஒரு ஆத்ம சுகம். அதனால, என்னோட பணிக்காலம் முடியறதுக்குள்ளே, விருப்ப ஓய்வு பெற்று, மக்கள் சேவை செய்தது போதும், மகேசனுக்கு சேவை செய்யலாம்னு, என்னோட சொந்த கிராமத்துக்கே வந்து செட்டிலாயிட்டேன்,” என்று சொல்லி சிரித்தார்.
“ஐயா! அதான், கோயில்ல, நீங்க பொது தரிசன வரிசையில், அவஸ்தையோட நின்று கொண்டு இருப்பதைப் பார்த்துத்தான், உங்களை VIP வரிசைக்கு அழைக்க என்னோட உதவியாளரை அனுப்பினேன். நீங்க தான் நிர்த்தாட்சணியமா வேண்டாம்முன்னு சொன்னதா உதவியாளர் சொன்னாரு..” என இழுத்தான்.
“தம்பி! வா இப்படி உட்காரு! டீ சாப்பிடறியா, பாலில்லாம கருப்பட்டி டீ இந்தக் கடையில பிரமாதமா இருக்கும்” என்றபடி, “பாண்டியண்ணே! தம்பிக்கு ஒரு டீ போடுங்க”, எனச் சொல்லிவிட்டு இவர் பக்கம் திரும்பினார்.
“தம்பி! கோயில் என்பது நம்மைப்படைத்து, காத்துக் கொண்டிருக்கிற இறைவன் அல்லது இறைவி உறையும் தலம். என்னைப் போல, உன்னைப் போல, மற்ற சாதாரண சனங்க எல்லோருமே, அந்தத் தெய்வத்திற்கு பிள்ளைகள் தான்! லோக மாதா புவனேஸ்வரிக்கு, இவன் பணக்காரன், இவன் ஏழை, இவன் அதிகாரம் உடையவன், இவன் சாதாரண படிக்காத மூடன், என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை.

அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப அருள் பாலிக்கிறாள் ஶ்ரீதேவி! அப்படி அவள் முன்னால், ஒரு சாதாரண பக்தனாக, பக்தையாக, அவள் முன்னால் சென்று வழிபடுவது தானே முறை. அதுதானே தருமம்! அவளைத் தரிசனம் செய்ய என்னுடைய பதவியைக் காட்டி, அவளின் மற்ற பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்கும் போது, எனக்கு மட்டும் தனி வழியில் பிரத்தியேகமாக தரிசனம் செய்ய நினைப்பது என்பது, அம்பாள் நம்மேல் காட்டிய கருணையை இழிவு படுத்துவது போலிருக்காதா?
அதனால தான் நான் பதிவியிலிருந்த போதும் சரி, இப்போ ரிடையர் ஆனபிறகும், சரி, எப்போதுமே தரும தரிசன வரிசையில் நின்று தெய்வத்தைத் தரிசிப்பதைத் தான் வழக்கமாக வைத்துள்ளேன். நீ தப்பா நினைக்காதேப்பா! எனக்கு அது பழக்கமாயிட்டுது. இந்தச் சின்னக் கோயில் மட்டுமல்ல, திருப்பதிக்குச் சென்றாலும், 24 மணிநேரம் ஆனாலும், பொதுதரிசன க்யூவில் போய்த் தான் பெருமாளைப் பார்ப்பேன்.
தம்பி! உங்களுக்கு ஒன்று தெரியுமா? கோயிலின் உட்பிரகார வாசலின் நிலைப்படியில், மலர்ந்த தாமரையைச் சிற்பமாக வடித்திருப்பார்கள். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? என்னுடைய மனத்தையும் இதோ இந்த மலர்ந்த தாமரையைப் போல வெற்றிடமாக உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். அதில் உன்னுடைய அருளென்னும் அமுதத்தைக் கொண்டு நிரப்பு! என்றும் உன் நினைவினில், உன் அருளில் வாழும் பொருள் பொதிந்த வாழ்க்கையை எனக்கு வரமாக அளி! என வேண்டுவதற்குத்தான்.
அப்படியில்லாமல், அதிகாரம், செருக்கு என்னும் அழுக்குகளோடு அவளைத் தரிசிக்கச் சென்றால், நிறைந்த கோப்பையில், மேலும் நீரூற்றினால், அது, வீணாக வழிந்தோடுவதைப் போல, அகங்காரம் நிறைந்த நெஞ்சினில், அவளின் அருளும் பதருக்கு இறைத்த நீர் போல வீணாகத்தான் போகும்.
அதுமட்டுமல்ல தம்பி! நம்மைப் போன்ற அதிகாரிகளுக்கு வெள்ளைக்காரன் கவுர்ண்மென்ட் சர்வண்ட் (Government servant) ன்னு ஆங்கிலத்துல, பேர் வைச்சான். எதுக்கு தெரியுமா? அதிகாரிங்க நாம எல்லோரும், மக்களுக்கு வேலைக்காரனாத் தான் இருக்கனும் முதலாளியாகக் கூடாதுன்னு சொல்றதுக்குத்தான். நாம மக்களுக்குச் சேவைசெய்யத்தான் அரசாங்கம் நமக்குப் பதவிய தந்திருக்கு, அவர்களை மிரட்டி நமக்கு ஆதாயத்தத் தேடிக்கறத்துக்காக அல்ல!
என்ன தம்பி! உனக்கு அந்த நாள்ல, ட்ரெயினிங் கொடுப்பது போல பிரசங்கமே பண்ணிட்டேனோ! தவறா சொல்லியிருந்தா மன்னிச்சுடுங்க தம்பி!” என சிரிப்புடன் கூறினார்.
கண்ணீர் வழிந்தோட, நடராசன், அது பொதுவிடம் என்று கூடப் பார்க்காமல், அவர் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். சிவகடாட்சம் பதறிப் போய், “தம்பி! என்ன இது தாங்கள் ஒரு அரசு அதிகாரி என் காலில் போய் விழுவதாவது? எழுந்திரிங்க தம்பி! எழுந்திரிங்க!” என்று நடராசனின் தோள்களைப் பற்றி எழுப்ப முயன்றார்.
“ஐயா! தாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்களுக்கு எப்படி சேவை செய்வது எனக் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், இன்று, ஒரு மனிதனாக வாழ்வது எப்படி எனக் கற்றுக் கொடுத்துள்ளீர்கள்., இல்லை நீங்களே அப்படி வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.  மக்களின் உண்மையான சேவகனாக மட்டுமல்ல, இறைவனும் ஏற்கும் பக்தனாகவும் வாழ்வது எப்படி என இன்று நான் கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி சார்!” என நாத்தழுதழுத்து, குரல் உடையப் பேசினார்.
“ஐயோ! என்ன தம்பி இது! இவ்வளவு சீரியஸா, உணர்ச்சி வசப்பட்டு பேசுறீங்க. வாங்க இப்படி உட்காருங்க. டீ சாப்பிடுங்க!” என உபசரித்தார். நன்றிப் பெருக்கோடு டீயை சுவைத்தார், நடராசன். கருப்பட்டியின் இனிப்பாக, தனது குருவின் அறிவுரை அவரின் உள்ளம் முழுவதும் பரவி நிறைத்தது.
தனது மாணவனின் உள்ளம் தெளிவடைந்ததைக் கண்டு, குருவின் மனதும் நிறைந்தது.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!