சிறுகதை

அழுக்கு கால்கள்

33views
மாத்ருபூதேஸ்வரன்
அவனுடைய கால்களைப் பிடித்துக் கொண்டிருந்த அந்த வக்கீலின் கைகளில், நீதிமன்றத்தில் வாதாடும்போது இருந்த அதே நம்பிக்கை இல்லை. அதைவிட அதிகமான ஒரு நம்பிக்கை இருந்தது. அந்தக் கால்கள் அழுக்காக இருந்தன. நகங்களில் மண் படிந்திருந்தது. குதிகால்களில் வெடிப்புகள். பல நாட்களாகத் தண்ணீரைக் கண்டதே இல்லாத கால்கள் போலிருந்தன. ஆனால், அவற்றைத்தான் அந்த வக்கீல் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு கண்களை மூடியபடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் இன்னும் இரண்டு பேர் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் அதே வேலைதான். அந்தக் கால்களைத் தொட வேண்டும். எதற்காக? ஒரு கேஸ் ஜெயிக்க வேண்டுமா? சொத்துத் தகராறு தீர வேண்டுமா? வீட்டில் சண்டை நிற்க வேண்டுமா? அல்லது வாழ்க்கையில் ஏதோ ஒன்று சரியாகிவிட வேண்டும் என்ற நம்பிக்கையா? எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அந்த மனிதன் எதுவும் பேசவில்லை. அவன் எப்போதுமே எதுவும் பேசுவதில்லை.
ஆனால் அந்தக் கால்களுக்காக டீ வந்தது. போண்டா வந்தது. பீடி வந்தது. சில சமயம் பழங்களும் வந்தன. மழை பெய்தால் கூரை வந்தது. வெயில் அடித்தால் நிழல் வந்தது. பெரிய மனிதர்கள் வந்தார்கள். வக்கீல்கள் வந்தார்கள். சாதாரண மக்கள் வந்தார்கள். எல்லோரும் வந்தார்கள். அவன் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தான். பீடியைப் பிடித்துக் கொண்டு, யாருக்கும் புரியாத ஒரு திசையைப் பார்த்தபடி. அவன் சாமியா? பைத்தியக்காரனா? பிச்சைக்காரனா? அல்லது மற்றவர்கள் நம்பத் தொடங்கியதால் சாமியாகிவிட்ட ஒரு சாதாரண மனிதனா? அந்தக் கேள்விக்கான ஆரம்பம், பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் தொடங்கியது.
நாங்கள் வேலை பார்த்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு பெரிய கண்ணாடி ஜன்னல் இருந்தது. அந்த ஜன்னலுக்கு முன்னால் நின்றால் கீழே இருக்கும் பேருந்து நிலையமே ஒரு சினிமா திரை மாதிரி தெரியும். பேருந்துகள் வந்து போகும். மக்கள் ஓடுவார்கள். கண்டக்டர்கள் கத்துவார்கள். டீக்கடைகளில் டம்ளர்கள் உரசும் சத்தம் கேட்கும். சில நேரங்களில் சண்டையும் நடக்கும். சில நேரங்களில் காதலும் நடக்கும். எல்லாவற்றையும் நாங்கள் மேலிருந்து பார்க்கலாம்.
அன்று மதியம் நாங்கள் மூவரும் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பேருந்து நிலையத்தில் வழக்கத்திற்கு மாறாக ஏதோ பரபரப்பு தெரிந்தது. “என்ன அங்கே?” என்று நான் கேட்டேன். “மெட்ரோ வேலைக்காக அந்த ரோட்டை மூடப் போறாங்களாம்,” என்றான் நண்பன். “அப்படியா? அப்போ நாளையிலிருந்து நம்ம ஜன்னலுக்கு கீழே பேருந்து வராது!” என்றேன். “பேருந்து வராதது பரவாயில்லை. நமக்குப் பொழுது போகுமா? ” என்று மூன்றாவது நண்பன் கேட்டதும் நாங்கள் சிரித்தோம்.
ஆனால் மறுநாள் அந்தப் பேருந்து நிலையத்தில் எங்கள் கவனத்தை ஈர்த்தது பேருந்தோ, மெட்ரோ பணியோ அல்ல. ஒரு மனிதன். இடுப்பில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய துணி மட்டுமே. தலைமுடி கலைந்து கிடந்தது. முகத்தில் தாடி. கால்களில் செருப்பு இல்லை. உடம்பில் அழுக்கு. அவன் யாரையும் பார்க்காமல் உட்கார்ந்திருந்தான். “பைத்தியக்காரனா இருக்குமோ?” என்றான் நண்பன். “பிச்சைக்காரனாக இருக்கலாம்.” “இல்லை… வழி தவறி வந்தவனாக இருக்கலாம்.” “வழி தவறி வந்தவனுக்குஒரே இடத்திலேயே எப்படி இருக்க முடியும்?” அந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
முதலில் அவனை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவனைக் கடந்து செல்பவர்கள் ஒருமுறை திரும்பிப் பார்த்தார்கள். சிலர் சற்றுத் தள்ளியே நடந்தார்கள். ஒரு குழந்தை அவனைப் பார்த்து பயந்து தாயின் பின்னால் ஒளிந்து கொண்டது. ஒரு பெரியவர், “பாவம்… மனசு சரியில்ல போல,” என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் அந்தப் பகுதியிலிருந்த டீக்கடைக்காரர் மட்டும் அவனைப் பார்த்து பரிதாபப்பட்டார். “டீ குடிக்கிறீங்களா?” என்று கேட்டார். அவன் பதில் சொல்லவில்லை. டீக்காரர் ஒரு டம்ளர் டீயை அவன் அருகில் வைத்தார். அவன் எடுத்துக் குடித்தான்.
அடுத்த நாள் ஒரு போண்டா. மூன்றாவது நாள் இரண்டு போண்டா. நான்காவது நாள் டீக்காரரே கேட்டார்: “இன்னைக்கு டீயா… போண்டாவா?” அவன் அமைதியாக அவரைப் பார்த்தான். “சரி… ரெண்டுமே!” என்று டீக்காரர் தானாகவே முடிவு செய்து கொண்டார். அதை பார்த்துக் கொண்டிருந்த எங்கள் நண்பன், “ இவனுக்குக் கொடுப்பதால டீக்காரருக்கு நல்ல பிசினஸ் போல!” என்றான். நாங்கள் சிரித்தோம்.
அதற்குள் இன்னொரு மாற்றம். பெட்டிக்கடைக்காரரிடம் அவன் ஒரு பீடி கேட்டான். “பீடியா?” என்று கடைக்காரர் கேட்டார். அவன் தலையசைத்தான். கடைக்காரர் ஒன்றைக் கொடுத்தார். அடுத்த நாள் கடையைத் திறந்தவுடன், “இதோ… உங்க பீடி!” என்று அவனே எடுத்துக் கொண்டு போய் வைத்தார். “அடடா!” என்றேன் நான். “இவனுக்கு இங்கே டீக்கடை, பெட்டிக்கடை எல்லாம் ஹோம் டெலிவரி ஆரம்பிச்சுடுச்சே!” என்று நண்பன் சொன்னான். நாங்கள் சிரித்தோம்.
ஆனால் சில நாட்களில் அந்தச் சிரிப்பு ஆச்சரியமாக மாறியது. அவன் உட்கார ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அது யார் கட்டிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அவன் மட்டும் வழக்கம்போல அதில் உட்கார்ந்திருந்தான். அடுத்த நாள் காலை டீக்கடை திறப்பதற்கு முன்பே அவனுக்கு டீ. அதற்குப் பிறகு போண்டா. பெட்டிக்கடை திறந்ததும் பீடி. காலை உணவு. மதிய உணவு. மாலை டீ. அவன் கேட்பது ஒன்றுமே இல்லை. ஆனால் அவனுக்கு என்ன வேண்டும் என்பதைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் தெரிந்து வைத்திருந்தார்கள்.
ஒருநாள் பெரிய மழை. அவன் மழையில் நனைந்து கொண்டிருந்தான். அடுத்த நாள் அவனுடைய மேடைக்கு மேலே ஒரு கூரை. மூன்று நாட்களில் அது ஒரு சிறிய குடிசை போல ஆகிவிட்டது. “நம்ம வீட்டுக்கு இவ்வளவு வசதி இல்லையே!” என்றான் என் நண்பன். “இவனுக்கு மக்கள் கட்டித் தர்றாங்க. நம்ம வீட்டுக்கு நாமே கட்டிக்கணும்!” என்று நான் சொன்னேன். “நம்மளும் அங்கே போய் உட்காரலாமா?” என்று மூன்றாவது நண்பன் கேட்டான். “நீ முதல்ல அங்க போய் மூன்று நாள் இருக்கப் பாரு. அப்புறம் சாமி ஆக்குறாங்களா பார்ப்போம்!” என்றேன். மீண்டும் சிரித்தோம்.
ஆனால் அந்த மனிதனைச் சுற்றியிருந்த விஷயம் இப்போது நகைச்சுவையைக் கடந்து வேறொரு திசைக்குச் சென்று கொண்டிருந்தது. அருகில் நீதிமன்றம் இருந்ததால் அங்கு வரும் மக்கள் அவனைப் பார்க்க ஆரம்பித்தார்கள். முதலில் ஒருவர் வந்தார். பிறகு இருவர். பின்னர் கூட்டம். ஒரு வக்கீல் அவன் அருகில் வந்து செருப்பைக் கழற்றி வைத்தார். அவன் முன் உட்கார்ந்தார். “சாமி… ஒரு விஷயம் இருக்கிறது…” அவன் எதுவும் பேசவில்லை. “என் கேஸ்…” அமைதி. “ஜெயிக்கணும் சாமி…” மீண்டும் அமைதி. வக்கீல் அவன் கால்களைத் தொட்டார். அதை பார்த்த அடுத்தவர் தானும் கால்களைத் தொட்டார். அடுத்தவர் அதை விடாமல் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டார்.
அதைக் கண்ட என் நண்பன் என்னைப் பார்த்து, “இவனுக்கு சட்டம் தெரியுமோ தெரியாதோ… சட்டத்துக்கு அப்பாற்பட்ட தீர்ப்பு மட்டும் கொடுக்கிறான் போல!” என்றான். நான் சிரிக்கவில்லை. ஏனென்றால், அந்தக் காட்சியில் ஏதோ விசித்திரம் இருந்தது. அந்த மனிதன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவனைச் சுற்றியிருந்தவர்கள்தான் அவனுக்குப் பல அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
சிலர் டீ வாங்கிக் கொண்டு வந்தார்கள். சிலர் பழங்கள். சிலர் போண்டா. சிலர் பீடி. ஒருவர் சுருட்டு கூட கொண்டு வந்தார். “சாமிக்கு சுருட்டு பிடிக்குமாம்!” என்று அவர் பெருமையாகச் சொன்னார். அதைக் கேட்ட என் நண்பன் மெதுவாக, “சாமிக்கு பிடிக்குமா? இல்ல சாமியைப் பிடிக்கிறவர்களுக்குத்தான் தெரியுமா?” என்று கேட்டான். எங்களுக்கு சிரிப்பும் வந்தது. சிந்தனையும் வந்தது.
ஒருநாள் நாங்களே அவனை நேரில் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். மூவரும் கீழே இறங்கினோம். அவனிடமிருந்து சுமார் முப்பது மீட்டர் தூரத்தில் நின்றோம். அவன் எங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. கையில் பீடி. அருகில் டீ. இரண்டு போண்டா. பார்வை மட்டும் எங்கோ தொலைவில்.
“போய் பேசலாமா?” என்று ஒருவன் கேட்டான்.
“நீ போ.”
“நீ ஏன் போகக்கூடாது?”
“நான் வந்ததே உன்னைப் பார்த்துத்தான்.”
“அவன் நம்மைக் கூப்பிட்டா?”
“கூப்பிட்டால் போயிடலாம்.”
ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் மூவரும் பின்னால் நகர்ந்தோம். அவன் அசையவில்லை. நாங்கள் அவனிடம் பேசாமலேயே திரும்பி வந்துவிட்டோம்.
ஆனால் அந்த மனிதனைச் சுற்றியிருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருந்தது. சிலர் அவனுடைய கால்களைத் தொட்டார்கள். சிலர் கும்பிட்டார்கள். அவன் ஒன்றுமே பேசவில்லை. அதுதான் என்னை அதிகமாக யோசிக்க வைத்தது.
அவர்கள் எதற்காக அவனிடம் வந்தார்கள்? ஒரு வழக்கு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவா? தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான சொத்துத் தகராறு தீர வேண்டும் என்பதற்காகவா? அண்ணன்–தம்பிகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகவா? கணவன்–மனைவி சண்டை தீர வேண்டும் என்பதற்காகவா? அல்லது வாழ்க்கையில் தங்களுக்குப் புரியாத ஏதோ ஒரு பிரச்சினைக்கு ஒரு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா? எங்களுக்குத் தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அவர்கள் யாரும் தங்கள் சொந்தத் தந்தையின் காலையோ, தாயின் காலையோ இப்படிப் பிடித்து வணங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் இவனுடைய கால்களைப் பிடித்தார்கள். ஏன்? அவனிடம் என்ன இருந்தது?
அவனிடம் எதுவுமே இல்லை. அதுதான் அவனிடம் இருந்த மிகப் பெரிய விஷயமாக இருக்கலாம். அவன் எதையும் கேட்கவில்லை. எதையும் உறுதி செய்யவில்லை. எதையும் மறுக்கவும் இல்லை. மக்கள் தங்கள் தேவையை அவன் மீது வைத்தார்கள். தங்கள் நம்பிக்கையை அவன் மீது வைத்தார்கள். அவன் அமைதியாக இருந்தான். அந்த அமைதியே அவர்களுக்கு ஒரு பதிலாக மாறிவிட்டது.
காலம் சென்றது. அவனுடைய மேடை ஒருநாள் காணாமல் போனது. பிறகு தெரிந்தது—அவனை வேறு இடத்தில் உட்கார வைத்திருந்தார்கள். அங்கேயும் டீ. அங்கேயும் போண்டா. அங்கேயும் பீடி. அங்கேயும் மக்கள். அவன் எங்கே போனாலும் அவனுக்கான வசதி மட்டும் முன்கூட்டியே வந்து சேர்ந்தது.
ஒருநாள் நாங்கள் அலுவலக ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அவன் அங்கேயும் இல்லை. மேடை இல்லை. குடிசை இல்லை. அவன் இல்லை. அவன் எங்கே போனான்? என்ன ஆனான்? யாருக்கும் தெரியவில்லை. எங்களுக்கும் தெரியவில்லை.
நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
“சாமி வேறு இடத்துக்கு போயிட்டாரோ?” என்றான் நண்பன்.
அவன் சிரித்தான். ஆனால் என் மனதில் அந்தக் கேள்வி அப்படியே தங்கிவிட்டது.
இன்று இத்தனை ஆண்டுகள் கடந்தும் அந்த மனிதனைப் பற்றிய நினைவு எனக்கு இருக்கிறது. அவன் உண்மையில் யார் என்று தெரியவில்லை. பைத்தியக்காரனா? பிச்சைக்காரனா? சித்தரா? சாமியாரா? அல்லது ஒன்றுமே இல்லாத ஒரு சாதாரண மனிதனா? இன்றுவரை தெரியவில்லை.
ஆனால் அவனைச் சுற்றியிருந்த மக்கள் அவனுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கிவிட்டார்கள்.
அவனைச் சுற்றியிருந்தவர்களுக்கு அவனிடம் அதைவிடப் பெரிய ஏதோ ஒன்று தேவைப்பட்டுக் கொண்டிருந்தது.
எனக்கு ஆர். கே. நாராயணனின் The Guide நினைவுக்கு வருகிறது. ஒரு சாதாரண மனிதனைச் சுற்றி உருவாகும் நம்பிக்கை, அவனை எப்படியெல்லாம் வேறொரு மனிதனாக மாற்றுகிறது!
நாங்கள் பார்த்த அந்த மனிதனும் அப்படித்தான். அவன் எதையும் சொல்லவில்லை. எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. யாருக்கும் வாக்குறுதி கொடுக்கவில்லை. ஆனால் மக்கள் அவனிடம் அற்புதத்தைப் பார்த்தார்கள். அவன் அமைதியாக இருந்தான். அந்த அமைதியில் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான பதிலைத் தேடிக் கொண்டார்கள்.
இப்போது நினைத்துப் பார்த்தால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. சாமியார்கள் எல்லோரும் சாமியார்களாகப் பிறப்பதில்லை. சிலரைச் சுற்றி மக்கள் நம்பிக்கையை உருவாக்குகிறார்கள். அந்த நம்பிக்கையே அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையையும், ஒரு புதிய அடையாளத்தையும் கொடுக்கிறது.
அந்த மனிதன் காணாமல் போன பிறகும், அவனைப் பற்றிய ஒரு காட்சி மட்டும் என் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது.
ஒரு வக்கீல்…
இரண்டு கைகளாலும்…
அவனுடைய அழுக்குப் படிந்த கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
அந்தக் கால்கள் எந்த வழக்கையும் தீர்க்கவில்லை. எந்த தீர்ப்பையும் சொல்லவில்லை.
ஆனால் அந்த வக்கீலுக்கு மட்டும், அந்தக் கணத்தில், அந்தக் கால்கள்தான் நீதிமன்றத்தைவிடப் பெரியதாக இருந்திருக்க வேண்டும்.
அதுதான் மனித நம்பிக்கையின் விசித்திரம்.
நம்பிக்கை எங்கே இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!