சிறுகதை

காணிக்கை

30views
பொ.வெ.இராஜகுமார்
தமிழ்கூறும் தென்னகத்தில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்தின் கீழைநாடுகளையும் ஆட்கொண்டு, தமிழனின் புகழ் பரப்பிய, வீர, தீர சோழப்பரம்பரையின் பரகேசரி, இராஜராஜ சோழன், அன்றையநாளின் ராஜாங்க காரியங்களை முடித்துக் கொண்டு, தன்னுடைய அந்தப்புர பாசவறைக்குச் சென்று கொண்டிருந்தான்.
மூன்றடுக்குகளைக் கொண்ட பகட்டான அரண்மனையின் முதல்மாடிக்கு, படிக்கட்டுகளில்ஏறிச் சென்றான். முதல் தளத்திற்கு வந்ததும், பலகணியில் நுழைந்த காவிரிப் படுகைத் தென்றல், அவனின் வீரத்தழும்புகளைத் தாங்கிய மார்பைத் தழுவி, நாணிச் சென்றது.
அவனின் உளங்கனிந்த வானவன் மாதேவியின் பள்ளியறைக்குச் செல்லுமுன், திரும்பி சாளரமூடே, சோழப்பேரரசின் வான்புகழை, வரும் ஆயிரமாயிரமாண்டு காலமும், இயற்கைப் பேரழிவுகளைத் தாங்கி, உயிர்ப்போடு நிற்கப் போகும், உலகையாளும் பெருவுடையாரின் திருக்கோயிலின் உன்னத கோபுரத்தைக் கண்டு, கணநேரம், மெய் சிலிர்த்து நின்றான்.
ஆயிரமாண்டுகளுக்கு மேலாக, சோழப்பரம்பரை, தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தாலும், கரிகால் பெருவளத்தான், காவிரியின் குறுக்கே கட்டிய கல்லணை, உலகின் அதிசயம் எனப் போற்றப்பட்டாலும், தாம் கட்டி முடித்து, சம்பரோட்சணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு, தமிழர் பெருமையை உலகுக்கு அறிவிக்க, உயர்ந்து நிற்கும், உலகரட்சகனின் திருக்கோயிலின் பெருமையை எண்ணி மனங்கசிந்தான், ராஜராஜன்.
சட்டென்று, தம்முடைய கண்களை, இரு வளைக்கரங்கள் மூடுவதை உணர்ந்தான்; அவை, தம்முளங் கவர்ந்த பிராட்டியின் மலர் விரல்கள் எனக் கண்டு கொண்டான்.

“விளையாட்டாக, கண்களை மூடிய பாகம்பிரியாளின் செயலால், ஈரேழுலகும் ஸ்தம்பித்ததைக் கண்டு, வெகுண்ட, மாதொருபாகன், நானில்லையே! சோழ சாம்ராஜ்யத்தின் நன்மக்களுக்கான முதல் தொண்டனல்லவோ, நான்!” எனக் கூறி இழுத்து, வலக்கையால் அணைத்தபடியே, வானவன் மாதேவியை ஏறிட்டு நோக்கினான், முறுவலுடன்.
“உண்மைதான்! நீங்கள் சோழநாட்டின் மக்களுக்குத் தொண்டர்! ஆனால், மக்களின் பாசத்திற்கு கட்டுப்படும் பரமேஸ்வரனுக்கே, திருமாளிகை எழுப்பிய சிவபாதரசேகரனல்லவோ நீவிர்! என்ன ஒரு திருவினை! தங்களை என் தலைவனாக நான் அடைந்தது, யாம் பெற்ற பாக்கியம்!”, என்றாள், மகாராணி.
மீண்டும், அவளைக் கட்டியணைத்து, “அன்று, நஞ்சையுண்டு மூவுலகைக் காத்தவன், பெரிய நாயகியோடு, பெருவுடையாராய், தென்னகத்தை காக்கும் முக்கண்ணனுக்கு, திருக்கோயிலை எழுப்ப, அவனருளாலே, அவன் ஆணையிட்டு, இச்சிறியேன் நிறைவேற்றிய அருந்தவ முயற்சி! அனைத்தும் அவன் செயல்!” என்ற மாமன்னர், மீண்டும் பெருமையோடு, குளிர் நிலவைச் சூடி, மேகங்களின் ஊர்வலத்தில், நீந்தியபடி திளைத்திருந்த பெருங் கோபுரத்தைக் கண்கள் கசிய, ரசித்தான்.
அன்றிரவு, மாமன்னன் ஆழ்ந்த உறக்கம் கொண்டான். உலகரட்சகன், அவன் கனவில் தோன்றி, “சோழநாட்டின் அதிபதியே! எமக்குத் திருக்கோயில் எழுப்பியதாக பெருமை கொண்டாயே! உண்மையில், ஒரு ஏழை மூதாட்டியின் கைங்கரியத்தால் தான், நான், திருக்கோயிலின் கருவறையில் அருள் பாலிப்பதற்குக் மேல் விதானம் கிடைத்திருக்கிறது. உன்னால் அல்ல!” எனக்கூறி மறைந்தார்.
திடுக்கிட்டு எழுந்த மாமன்னன், தம் கனவில், கயிலாபதியே வந்து, தம்முடைய அகங்காரத்தைக் குத்திக் காட்டி, அறிவுறுத்தியதை நினைத்து, இரவெல்லாம் கண்ணுறங்காமல், பரமேஸ்வரனின் கோயிலுக்கு கூரை அமைத்தது தானில்லையா, ஒரு ஏழை மூதாட்டியால் தான் அமைக்கப் பெற்றதா – எப்படி அது சாத்தியம் எனப் பலவாறு குழம்பியபடியே சிந்தித்து, தூக்கம் வராமல் தவித்தான்.
அடுத்த நாட்காலை, திருக்கோயிலை அடைந்து, தலைமை ஸதபதியை அழைத்து, தன் கனவைப் பற்றிக் கூறி, அந்த ஏழை மூதாட்டி யார், அவர் எப்படி கோயிலின் கூரையை அமைத்திட உதவினார் எனக் கேட்டான்.
மாமன்னரின் கனவைக் கேட்ட்டுத் திகைத்த தலைமை ஸ்தபதி, அதன் பின்னணியை விவரித்தார். “மாமன்னரே! தாங்கள் கூறுவது உண்மைதான். என்னே சர்வேச்சுரனின் பெருங் கருணை! தாங்கள் குறிப்பிட்ட அந்த ஏழை மூதாட்டி, இங்கு மோர் விற்கும் வயதான பெண்மணி. நாம் இத்திருக்கோயிலை நிர்மாணிக்கும் தவப்பணியை ஆரம்பித்த நாள் முதலாக, அப்பெண்மணி, இங்குள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும், ஒரு கோப்பை மோரை இலவசமாக தந்து உதவி செய்து வருகிறார்.
‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? வயதான காலத்தில், மோரை விற்று சம்பாதிக்காமல், இலவசமாகத் தானமிடுகிறீர்களே!’ எனக்கேட்டபோது, ‘என்னால், இத்திருக்கோயிலை எழுப்பும் அடியவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்கிறேனப்பா! என்னிடம் காசு பணம் இல்லை! அதனால், இச்சிறிய உதவியைச் செய்து மனச்சாந்தி அடைகிறேன்’ என்பார், அந்த மூதாட்டி.
திருக்கோயிலை நிர்மாணிக்கும் போது, பிரம்மாண்ட கோபுர விமானத்தின் உச்சியில், பொருந்தும் ஒற்றைக் கல்லை, பொருத்த வேண்டும். ஆனால் அதற்கேற்ற சரியான அளவிலான ஒற்றைக் கல்லை எங்கெங்கோ தேடினோம், கிடைக்கவில்லை.
அப்போது மோர் விற்கும் அந்த மூதாட்டி, தாம் கோயிலின் முன், ஒரு பாறாங்கல்லின் மேல் அமர்ந்து மோர் விற்பதைப் பற்றிச் சொல்லி, அந்தக் கல்லின் அளவு சரியாக இருக்குமா எனக் கேட்டார்.
என்ன ஆச்சரியம்! அந்தக் கல்லின் அளவு மேல் விதானத்திற்கு சரியாகப் பொருந்தியதைக் கண்டு நாங்கள் அதிசயத்தில் ஆழ்ந்து போனோம்.
அந்தக் கல்லை, கருவறை விமானத்தின் மேல், கலசகுண்டத்தைத் தாங்கும் மேல்விதானமாக, செதுக்கி வடிவமைத்து, பொருத்தினோம். பேராச்சரியம் என்னவென்றால், அந்தக் கல் கனகச்சிதமாக, அந்த இடத்தில் பொருந்தியது தான். அதைக் கண்ட மூதாட்டியும் பரம ஆனந்தம் அடைந்தார். இந்த பேரதிசய நிகழ்வைத் தான், விச்வேச்சுரனும், தங்களின் கனவில் வந்து சொல்லியிருப்பார், போலும்!
என்னே அந்த பரமாத்மனின் பெருங்கருணை! ஒரு ஏழை மூதாட்டியின் மெய்யன்பை ஏற்றுக் கொண்டு, அவர் செலுத்திய சிறு காணிக்கையைக்கூட உலகறியச் செய்யவேண்டும் என பேருளங்கொண்டு, இத்திருவிளையாடலை, நிகழ்த்திக் காட்டிய பெருவுடையாரின் திருவருளை எண்ணி மெய்சிலிர்க்கிறேன், மாமன்னரே!” என நாத்தழுத்துப் பேசினார், தலைமை ஸதபதி.
“ஆகா! ஆகா! அசைவன, அசைவற்றன என எல்லாவற்றிலும், உயிரோடு உயிராகக் கலந்து, உணர்வோடு பக்தியில் திளைத்து, எக்கணமும், எங்கும், இமைப்பொழுதும் நீங்காது, தம்மேல் அன்பு செய்வோரை, அரவணைத்துத் தம் திருவடி ஈந்து, காத்திடும், பொற்சபையில் நர்த்தனமாடும், என் ஈசனே! தனிப்பெருங்கோவே! என்னே உன்னுடைய திருவருள்! என்னே உன்னுடைய தனிப்பெருங்கருணை!
பொதுமக்கள் எமக்களித்த வளர்செல்வமும், படையும், குடையும், சேவகரையும் கொண்டு, உன்னுடையத் திருக்கோயிலை, நான் நிர்மாணித்ததாய், ஆணவங்கொண்டு சொல்லித் திரிந்தேனே! ஒரு ஏழை மூதாட்டியின் சிறிய காணிக்கையை ஏற்று, உன் சிரசைக் காக்கும் விதானமாகக் கொண்டாயே! சர்வேசா! ஏழுலகையும் படைத்துக் காக்கும் உனக்கு நான் இல்லத்தை எழுப்பியதாய் மமதை கொண்டேனே! என்னை மன்னித்து அருள் செய், அடியார்க்குநல்லானே! என்னை மன்னித்து அருள் செய்!” என மனம் வருந்தி அரற்றினான், மும்முடிச் சோழன், ராஜராஜன்.

1 Comment

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!