162views
பெங்களூருவில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட பாஞ்சாலி குறும்படம் கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்திலும் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பிடித்தது.
ஆடு மேய்க்கும் தாத்தா தன் பேரனை தன்னைபோல் ஆடு மேய்க்க வரவிடாமல் கல்வி கற்க வைப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சியும், கல்விதான் மனிதனை மனிதனாக்கும் என்பதும் தான் குறும்படத்தின் கதையாகும்.
இப்படம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தாதனேந்தலில் படமாக்கப்பட்டது. இவ்வூரைச் சேர்ந்த திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் தீபக், இதில் பேரனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
குறும்பட இயக்குநர் சுப்ரமணிய பாரதி, மேலாளர் நிஜாம் அலி, இணை இயக்குநர் தங்கமித்ரன் ஆகியோர் திருப்புல்லாணி பள்ளிக்கு நேரில் வந்து மாணவர் தீபக்கை பாராட்டினர். தலைமை ஆசிரியர் சண்முகநாதன், மாணவரின் வகுப்பு ஆசிரியர் ராஜகுரு உடனிருந்தனர்.





