196
ஆ சொல்லு
சோறு ஊட்டினாய் நசுக்கிப் பிசைந்து
குழைந்து கலந்து கால இடைவெளிகளோடு
நாவில் பூசியதன் நாமங்கள் பல
ஈரம் வடித்து வெந்த அச்சோற்றில்
இத்தனைப் பூசணிக்காய்களையா மறைப்பாய்
பொறுமை அமைதி தத்துவம் தீர்வு
என்ற பெயரில் விலகல்
புறக்கணிப்பு ஏமாற்று துரோகம்
உனதான தப்பித்த வழங்கலை
மென்று முழுங்குவேன்
சோறல்ல முகத்தில் பூசிய சேறென்று
தெரிந்த பின்னும் புழுவாகிய நான்
ஆதிவாசியின் சிறுசுடர்
நீயாகவே விலகினாய்
அனல் பொழியும் ஏழு மலை
புயல் சுழலும் ஏழு கடல்
தாண்டி வந்த பின்
கூசும் விண்மீன்களின் வெளிச்சங்களோடு
குலாவும் பௌர்ணமி நாளில்
அடர்வன வாயிலில் தீப்பந்தம் ஏந்தி வரவேற்கிறாய்
நீயில்லா வாழ்வுக்கு என்னைப் பழக்கியபோதே
தலைவனல்ல தந்தை என்றாகிவிட்ட
உன்னை அதே புளித்த அமிர்தத்துளி காதலோடும்
சிறுபொறிக் காமத்தோடும் எதிர்கொண்டு
சிலந்திவலைகள் படிந்த பாழடைந்த
அச்சிறு வலைக்குள் நிச்சயம் நுழைவேன் என்று
எப்படி நீ இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறாய்
மாயா தரு
தோல்வியில் துவளும் போதெல்லாம்
காற்றின் கரமொன்று தேடி வருகிறது
உரிய இடம் உண்டென இதமாய்ப் பற்றுகிறது
என்னவென்று சொல் ஜகமே எதிர்த்தாலும்
நின்று கொல்வேன் எனும் அது
நெருக்கக் கட்டாதாயினும்
தலையில் வைத்துக் கொண்டாடாதாயினும்
பறிக்கக் கூட நினைக்காது
பாதம் கடந்த வழித்தடக் காட்டுமல்லியின்
ஈரமழையுலர் நாளாய்த் திறந்து பேசும்
வாசம் நெஞ்சை அறையும் அடைக்கும்
சரியும் போதெல்லாம் மீட்க வரும்
அது தேவவரமல்ல
சரியுமுன் பிடித்துக் கொள்ளும்
மாயமரம் அதன் பூக்கள்
சொரிந்து கொண்டிருக்கும்வரை
கவ்வும் கபட சூதும் காயம் செய்யவேயியலாது
கேட்டதுண்டோ மாயக்குரல் கண்மூடிக் கேட்டுப்பார்
உனக்கும் சிம்மாசனம் வைத்திருக்குமது
நிசப்தவரம் நீ பெறத் தவமிருக்கும்
நீ மறந்து போயிருக்கக்கூடும்
பின்பனித்திரை விலக்கி வாங்கு
அச்சுடர் மணம் மனசாட்சியாகவோ
மனதை ஆட்சி செய்வதாகவோ இருக்கும்
அங்கே ஒப்படை இனியது வென்றாளும்
அத்துணை அதர்ம பாரங்களையும்
அன்புத்தோழி ஜெயஸ்ரீ
add a comment