தமிழகம்

சங்கரன்கோவில் மனோன்மணியம் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா; நோபல் பரிசு பெற தகுதியான நூல் “திருக்குறள்” என கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் உரை

102views
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியின் கணிணி அறிவியல் துறை, கணிதத் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகிய துறைகள் சார்பில் தேசிய அறிவியல் தின விழா கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதிர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது தனது தேசிய அறிவியல் தின உரையில் திருக்குறளில் பொதிந்துள்ள அறிவியல் கருத்துக்களை கூறி நோபல் பரிசு பெற தகுதியான நூல் திருக்குறள் என கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் சிறப்பித்து பேசினார்.
இந்நிகழ்வில் கணிணி அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் குருநாதன் வரவேற்றார். வேதியல் துறை பேராசிரியரும், கல்லூரி முதல்வருமான முனைவர் அப்துல் காதிர் சிறப்புரை ஆற்றினார். அதில் தேசிய அறிவியல் தினம் நோபல் பரிசு பெற்ற நமது நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் அவர்களை கௌரவிக்கும் விதமாகவும் நோபல் பரிசு பெற காரணமாக அமைந்த அவரின் ஆராய்ச்சி முடிவான ‘ராமன் விளைவை’ உலகுக்கு அறிவித்த தினத்தை நினைவு கூறும் விதமாகவும் 1987ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது எனக் கூறினார். மேலும், ராமன் விளைவு கண்டறியப்பட்ட பின்னணி குறித்து பேசுகையில், ஒருமுறை கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு ராமன் கப்பல் பயணம் மேற்கொண்ட போது, இயற்கை மீதிருந்த ஆர்வம் காரணமாக வானத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். தான் பார்த்த மத்திய தரைக் கடல் பகுதியின் வானம் ஏன் அவ்வளவு நீல நிறமாக காட்சியளிக்கிறது என்ற அவர் மனதில் எழுந்த சிந்தனைக்கு விடை காணும் ஆராய்ச்சியை இந்தியா திரும்பி வந்தபின் தொடர்ந்தார். அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒளி ஊடுருவக்கூடிய ஊடகம் திடப்பொருளாகவோ, திரவப்பொருளாகவோ அல்லது வாயுப்பொருளாகவோ இருக்கும் நிலையில், அந்த ஊடகங்களில் ஒளி செல்லும் போது அதன் இயல்பில் ஏற்படும் மாறுதல்களின் காரணமாக ‘ஒளியின் மூலக்கூறு சிதறல்’ ஏற்படுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். இந்த சிறப்பான ஆய்வுக்குத் தான் அவருக்கு நோபல் பரிசுக் கிடைத்தது என்றார்.
மேலும் திருக்குறளில் இடம் பெற்றுள்ள அறிவியல் கருத்துக்கள் பொதிந்துள்ள குறள்களை மேற்கோள் காட்டி முதல்வர் அப்துல் காதிர் பேசினார். “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்” என்ற 319 ஆவது குறளை மேற்கோள் காட்டி, 16ம் நூற்றாண்டில் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் தெரிவித்த மூன்றாம் விதியான “ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு” என்பதை 2500 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் தெரிவித்துள்ளார் என்பதையும், “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய துயர்வு” என்ற குறளை எடுத்துக் கூறி 18 ஆம் நூற்றாண்டில் இசபெல்லா அபாட் என்ற பெண் விஞ்ஞானி தெரிவித்த நீர் நிலையில் வளரும் நீர்வாழ் தாவரத்தின் உயரம், நீரின் உயரம் உயர உயர அத்தாவரத்தின் உயரமும் உயரும் என்ற அறிவியல் தத்துவத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் கூறியுள்ளார் எனவும், “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்ற 1031 ஆம் குறளை மேற்கோள்காட்டி இந்த பூமியானது தட்டையானது இல்லை என்றும் பூமி கோள வடிவானது என்பதையும், சூரியனைத் தான் பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் சுற்றி வருகிறது என்ற நிக்கோலஸ் கோபர்நிகஸ் 15ஆம் நூற்றாண்டில் தெரிவித்துள்ள கருத்தை ஒத்ததாக உள்ளது எனவும் கூறி, “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்ற 942ம் குறளை குறிப்பிட்டு, முந்திய பொழுது உண்ட உணவு செரித்த பின் அடுத்த உணவை உட்கொண்டால் நமக்கு நோய் அண்டாது எனவும், அதனால் நாம் மருந்தை தேட வேண்டியது அவசியம் இல்லை என்ற வள்ளுவரின் மருத்துவ அறிவியல் கருத்தை எடுத்துரைத்தார்.
மேலும், “தாம் வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி” என்ற 1191ம் குறளை மேற்கோள்காட்டி, நாம் யாரை விரும்புகிறோமோ, அவரும் நம்மை விரும்பினால் அந்த உறவு எவ்வாறு இருக்கும் என்றால் விதை இல்லா கனியை உண்பது போல சுவையாக இருக்கும் என்பதை திருவள்ளுவர் 2500 ஆண்டுகளுக்கு முன்பு விதையில்லாப் பழங்கள் பற்றி தெரிவித்துள்ளார் எனவும் கூறினார். ஆக, 15ஆம் நூற்றாண்டில் கோபர் நிக்கஸ், 16ஆம் நூற்றாண்டில் நோபல் பரிசு வென்ற சர் ஐசக் நியூட்டன், 18ஆம் நூற்றாண்டில் பெண் விஞ்ஞானி இசபெல்லா அபாட் ஆகியோர் தெரிவித்துள்ள அறிவியல் கருத்துக்களை 2500 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட திருக்குறளில் பொதிந்துள்ள படியால் திருக்குறளும் நோபல் பரிசு பெற ஏற்ற அறிவியல் தத்துவங்கள் நிறைந்த நூல் எனப் பேசினார். மேலும், மாணவர்கள் அறிவியல் கருத்துக்கள் அதிகம் பொதிந்துள்ள தமிழ் இலக்கியங்களைப் படித்து அவற்றின் மேன்மையை உலகறிய செய்ய வேண்டும் எனவும், நமது நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் குருநாதன், கணேசன் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் மைதீன் பட்டாணி, திலீப் ஆகியோர் செய்தனர். கல்லூரி பேராசிரியர்கள் உதயசங்கர், கணபதி மேனகா, அருள் மனோகரி, அமுதா, பொன்னியின் செல்வி உள்ளிட்டரும் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். மாணவர் அருண் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் கணேசன் நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!