தமிழகம்

மக்கள் தொடர்பு முகாமில் பெற்ற 96 மனுக்கள் மீது துரித நடவடிக்கை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

96views
ராமநாதபுரம் மாவட்டம்  கமுதி அருகே நீராவி கிராமத்தில்  வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பேசினார்.  பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட முன் மனுக்கள் தொடர்பாக மேற்கொண்ட  நடவடிக்கை மூலம்  157 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் பெறப்பட்ட 96 மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வருவாய், சமூகநலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகள் நலம், குழந்தைகள் பாதுகாப்பு நலம், மகளிர் திட்டம், பொதுசுகாதாரம், வேளாண், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலம் ஆகிய துறைகள் அரசின் திட்டங்கள் குறித்த சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார்.
வருவாய் பேரிடர் மேலாண் துறை மூலம், 9 மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, 23 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 18 பேருக்கு இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை, 50 பயனாளிகளுக்கு வீட்டு மனை ஒப்படைப்பு, 11 பேருக்கு பட்டா மாறுதல், 8 பேருக்கு உட்பிரிவு பட்டா மாறுதல், வேளாண்மைத்துறை மூலம் 5 பேருக்கு விதைகள் மற்றும் இடு பொருள்கள், 2 பேருக்கு தோட்டப்பயிர் விதைகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 6 பேருக்கு தையல் இயந்திரம், 15 பேருக்கு சலவை பெட்டி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மூலம் 4 பேருக்கு இலவச தையல் இயந்திரம், ஒருவருக்கு சலவை பெட்டி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒருவருக்கு காதெலிக்கருவி, இருவருக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, 2 பேருக்கு தக்க செயலிகளுடன் கைப்பேசி என 157 பேருக்கு ரூ.13.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா , சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் கந்தசாமி, யூனியன் தலைவர் தமிழ்செல்வி, வட்டாட்சியர் பவிதா, மாவட்ட கவுன்சிலர் வாசு, நீராவி ஊராட்சி தலைவர் வாழ்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!