தமிழகம்

நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் மாதிரி ஆய்வு முகாம்

123views
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வட்டாரத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் மாதிரிகள் ஆய்வு முகாம் நடந்தது. வேளாண் உழவர் நலத்துறை சார்பில் மண்டபம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வான வெள்ளரிஓடை, கோரவள்ளி ஊராட்சிகளில், பரமக்குடி நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை முகாம் நடந்தது.
விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிப்பதன் அவசியம், விவசாயிகள் தங்களது நிலங்களில் மண் மாதிரி சேகரிக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், களர் உவர் நிலங்களை கண்டறிந்து சீர்திருத்தம் செய்யும் முறைகள் குறித்து ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு)
நாகராஜன் பேசினார். மண் மாதிரி ஆய்வுக்கு பின் வழங்கப்படும் மண் வள அட்டை, உர பரிந்துரை படி பயிர்களுக்கு உரமிடுதல் குறித்து திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குநர் அமர்லால் பேசினார்.
கோரவள்ளி, வெள்ளரிஓடை கிராம விவசாயிகளின் 60க்கும் மேற்பட்ட மண் மாதிரிகளை உடனடி ஆய்வு செய்து மண் பரிசோதனை படி உர பரிந்துரை மண்வள அட்டைகளை விவசாயிகளுக்கு பரமக்குடி நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள், மதுமிதா, ஐஸ்வர்யா ஆகியோர் வழங்கினர். உச்சிப்புளி வட்டார வேளாண் அலுவலர் ஜெயமணி நன்றி கூறினார். உதவி வேளாண் அலுவலர்கள் முகமது யூசுப், சிரஞ்சீவி ஆகியோர் பயிற்சி ஏற்பாடுகளை செய்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!