தமிழகம்

சிவகாசி அருகே, பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் – காவல் நிலையத்தில் புகார்

72views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவராக கவிதா பாண்டியராஜன் பதவி வகித்து வருகிறார். அனுப்பன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியாபுரம் பகுதியில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. நூலகத்தின் சாவி வார்டு உறுப்பினர் சத்தியமூர்த்தி என்பவரிடம் இருந்து வருகிறது. நூலக கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக, கட்டிடத்தின் சாவியை கேட்டபோது சாவி வேறு ஒரு நபரிடம் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் நூலகத்தின் சாவியை கேட்டபோது கொடுக்க மறுத்து சிலர் தகராறு செய்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த, தலைவர் கவிதா பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள், நூலக கட்டிடத்தை ஆய்வு செய்தபோது அந்தப்பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள் சிலர் நூலக கட்டிடத்தை மது குடிக்கும் இடமாகவும், சமூக விரோதச் செயல்களுக்கு பயன்படுத்தும் இடமாகவும் உபயோகித்து வந்தது தெரிந்தது. உடனடியாக ஆக்கிரமிப்பு நபர்களின் பொருட்களை, நூலக கட்டிடத்திலிருந்து அதிகாரிகள் அகற்றினர். ஊராட்சிமன்ற தலைவர் தான் இதற்கு காரணம் என்று நினைத்த சமூக விரோதிகள் சிலர், ஊரின் வரவேற்பு பலகையில் இருந்த ஊராட்சிமன்ற தலைவரின் பெயரை அழித்துள்ளனர். மேலும் அவரது வீட்டின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கவிதா பாண்டியராஜன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!