தமிழகம்

மாணவர்களுக்கு வழங்குவது போல் செயல்பாட்டின் அடிப்படையில் அதிகாரிகளுக்கும் மதிப்பெண் வழங்கப்படுகிறது – மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பேச்சு.

42views
பொதுமக்கள் வழங்கும் மனுவின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொறுத்து மாணவர்களுக்கு வழங்குவது போல் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு மதிப்பெண் வழங்குகிறது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியம் தெற்குவெங்காநல்லூர் ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த முகாமில் ஊராட்சி தலைவர் இசக்கி ராஜா பேசுகையில், தெற்குவெங்காநல்லூர் ஊராட்சி 18 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. ஊராட்சியில் உள்ள 22 உட்கடை கிராமங்களில் 250 தெருக்கள் உள்ளன. அதில் 50 தெருக்களில் மட்டுமே முழுமையான அடிப்படை வசதிகள் உள்ளன. 200 தெருக்களில் கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. அதனால் ஊராட்சியில் சுகாதார வளாகம் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பேசுகையில், ‘முன்பெல்லாம் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று மனு அளித்தனர். ஆனால் தற்போது வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் மனு அளிக்கும் அளவிற்கு தொழில் நுட்பம் வசதிகள் இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளை அதிகாரிகள் நேரடியாக தெரிந்து கொள்வதற்காக இம்மாதிரியான முகாம்களை அரசு நடத்துகிறது. இந்த முகாம் மூலம் ஊராட்சிக்குட்பட்ட சிதம்பராபுரம் கிராமத்தில் நீண்ட காலமாக கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் பிரச்சினை நிலவுவதாக நேற்று காலை அதிகாரிகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். தற்போது அப்பகுதியில் தற்காலிகமாக கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த பட்டுள்ளது. நிரந்தர கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படும்.
இந்த ஊராட்சியில் ரூ.2.5 கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தில் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தெருக்களிலும் சாலை மற்றும் கால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு இரு வாரங்களுக்கு ஒரு முறை அனைத்து ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறது. அதில் பொதுமக்கள் அளிக்கும் மனு மீது அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கை அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது போல ஆட்சியர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.  விருதுநகர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு மேல் எந்த முறையீடு மனுவும் நிலுவையில் இல்லை, என்றார்.
சிதம்பராபுரம் கிராம மக்கள் கழிவு நீர் கால்வாய் ஏற்படுத்தாததை கண்டித்து குடும்ப அட்டையை ஆட்சியரிடம் அளிக்கப் போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நேற்று காலை பகுதியில் தற்காலிகமாக கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டது. முகாம் மேடையிலேயே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்த உத்தரவிட்டார்.
மேலும் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆசிரியர் குடியிருப்பு இஎஸ்ஐ காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை அது குறித்து பஞ்சாயத்து தலைவர் இசக்கிராஜனிடம் மனு கொடுத்தால் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாகவும் குடிநீர் குழாய் இணைப்பு சொத்துவரி உள்ளிட்ட வரிகளுக்கு பஞ்சாயத்து தலைவரை நாடி சென்றால் அதிகளவில் லஞ்சம் கேட்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்து புகார் அளித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!