இலக்கியம்

பெரம்பூர் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில் நடைப்பெற்ற ‘மகளின் மகள்’ கவிதைநூல் ஆய்வரங்கம்

245views
பெரம்பூர் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில், கவிஞர் உமா சுப்பிரமணியனின் கவிதைத் தொகுப்பான ‘மகளின் மகள்’ பற்றிய புத்தக விமர்சனமும் உரையாடலும் ஆய்வரங்கமாக நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே ஆரம்பமானது. கல்லூரி முதல்வர் டாக்டர் ஸ்ரீதேவி விழாவிற்கு தலைமை ஏற்க, நூலகர் முனைவர் சுமுகி பத்மநாபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சோலைபதிப்பகம், இலக்கிய சோலை ஆசிரியர் சோலை தமிழினியன் விழா அறிமுக உரையில் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி இந்த நூல் எதற்காக எழுதப்பட்டது என்பதை காரணங்களுடன் விளக்கி பேசினார்.
தொழிலதிபர் ஈகை டாக்டர் கே.கருணாகரன் வாழ்த்துரை வழங்கி பேசும்போது அதிகம் படிக்காத தான் இன்று இந்த நிலைக்கு வர தன் கடின உழைப்பு தான் காரணம் என்றும், ஆகாய விமானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்த தான் இன்று உலகின் பலநாடுகளுக்கு சென்றிருப்பதற்கு தன் உழைப்புதான் துணை செய்தது என்றும் கூறி இந்த நூல் அடுத்த தலைமுறை பெண்களுக்கு ஒரு வழிக்காட்டி. நீங்கள் சிறந்த பெண்ணாக இருக்கவேண்டும் அதைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் ‘மகளின் மகள்’ புத்தகத்தை விழாவில் பங்கேற்ற மாணவிகளுக்கு அவரவர் இருக்கைக்கு சென்று வழங்கி ஆச்சர்யப்படுத்தினார்.
அடுத்து பேசிய திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி பெண்களுக்கு இருக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு தேவையில்லாத ஒன்று என்றும், பெண்கள் சுயமாக சிந்திக்க வேண்டும். திருமணம் மட்டுமே வாழ்வின் உச்சம் கிடையாது அதையும் தாண்டி பெண் சாதிக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் பி.சி.ஏ. துறையை சேர்ந்த மாணவி விவேகா நூலை மதிப்பீடு செய்தார். பெண்மையின் ஆதியெழுச்சி, அதன் உள்ளார்ந்த பண்பும் சோதனையும் குறித்து கவிதைகள் எவ்வாறு பேசுகின்றன என்பதை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக நூலிலிருந்து இரண்டு கவிதைகளை வாசித்து பெண்களின் பிறவி சமூக நோக்கங்களுக்காக மட்டுமல்ல, ஒரு தனி அடையாளமாகவும் இருக்கவேண்டும் என்பதே நூலின் அடிப்படை சிந்தனையெனக் கூறினார்.
நூலாசிரியர் கவிஞர் உமா சுப்ரமணியன் தனது ஏற்புரையில், அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் இந்த புத்தகம் எல்லோரின் கையிலும் இருக்கவேண்டும் குறிப்பாக பெண்களிடத்தில் என்று நினைத்தேன். அது தற்போது உங்கள் கையில் இருக்கிறது. வாசியுங்கள். தயங்காமல் என்னிடம் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று மாணவிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மாணவி சுதர்ஷினி நிகழ்வை தொகுத்து வழங்க நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!