தமிழகம்

நெல்லையில் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட 36 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு

159views
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோரின் சீரிய முயற்சியால் போலி ஆவணம் முலம் அபகரிக்கப்பட்ட சுமார் 36 இலட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, கே.சி.நகர், பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் ஜுடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து வேறொருவருக்கு இடம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஜுடிக்கு தெரியவரவே, ஜுடி மேற்படி நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதன்படி விசாரணை மேற்கொண்டதில் மேற்படி நிலமானது போலி ஆவணம் மூலம் வேறு நபருக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் இணைந்து நடத்திவரும் நில அபகரிப்பு தொடர்பான முகாமில், மேற்படி நில உரிமையாளர் ஜுடி மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆகியோர் முகாமிற்கு அழைக்கப்பட்டு, மேற்படி மனு விசாரணைக்கு துணை ஆட்சியர் தமிழரசி, வட்டாட்சியர் பகவதி பெருமாள் மற்றும் துணை வட்டாட்சியர்கள் ஆகியோர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நியமித்து, மேற்படி துணை ஆட்சியர் அவர்களின் சீரிய முயற்சியால் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேற்படி ஆவணம் போலி ஆவணம் என உறுதி செய்யப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை மாவட்ட பதிவாளர் பிறப்பித்த மோசடி பதிவு என வழங்கிய செயல்முறை ஆணையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், நிலத்தின் உரிமையாளரான ஜுடி என்பவருக்கு வழங்கினார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 36 இலட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலத்தினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ், காவல் ஆய்வாளர் மீராள்பானு மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் வெகுவாகப் பாராட்டினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!