தமிழகம்

மன்னார் நீதிமன்றம் விடுவித்த விசைப்படகு ராமேஸ்வரம் வருகை

81views
இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்று மன்னார் நீதிமன்றம் விடுவித்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த விசைப்படகை மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் கொண்டு வந்து சேர்த்தனர்.  ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தங்கச்சிமட கிறிஸ்டோபர் சிங்கம் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்கள்  கடந்தாண்டு 5 ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றனர். வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பின்னர் மீனவர்களை விடுத்த  மன்னார் நீதிமன்றம் விசைப்படகை விடுவிக்கவில்லை.  இதையடுத்து கடந்தாண்டு டிச. 13ல் மன்னார் நீதிமன்றத்தில் படகு குறித்த விசாரணை நடந்தது. இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி வரக்கூடாது என படகின் உரிமையாளரிடம் உறுதிமொழி பத்திரத்தில் பெற்று படகை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மன்னார் நீதிமன்றம் விடுவித்த விசைப்படகை மீட்க மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசின் அனுமதியை தொடர்ந்து ராமேஸ்வரத்திலிருந்து 3 விசைப்படகு, 1 நாட்டுபடகில் 21 மீனவர்கள் மார்ச் 19 ஆம் தேதி மன்னார் கடற்படை முகாம் சென்றனர். அங்கு கடந்த 4 மாதமாக பராமரிப்பின்றி கிடந்த விசைப்படகை கடும் சிரமத்திற்கு இடையே மீட்டு விசைப்படகுகள் மூலம் கட்டி இழுத்து கொண்டு ராமேஸ்வரம் தென் கடற்கரை வந்தடைந்தனர். மீட்கப்பட்ட படகுடன் திரும்பிய மீனவர்களை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையில் மீன்வளத் துறையினர் வரவேற்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு பின் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த விசைப்படகை நீதிமன்றம் விடுவித்து தாயகம் திரும்புவது இது முதன்முறையாகும். மீட்கப்பட்ட விசைப்படகின் மதிப்பு ரூ. 50 லட்சம் என கூறப்படுகிறது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!