23views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
மந்திரங்களை
நம்புகிற கூட்டம்
எந்திரங்களை நம்புகிறது…
மந்திரங்கள் சிலைகளின் காதோடு
யாருக்கும் கேட்காமலும் போகலாம்…
எந்திரங்கள் நாகரிக
கண்டுபிடிப்புகள்…
அனேக நேரங்களில்
உளறி வைக்கிறது…
ஆய்பவர்
ஆய்வுகளுக்குத் தக்கபடி
அது பல்வேறு
தகவல்களைத் தருகிறது…
முரண்பாடுகளின்
மொத்த விதிகளைப் போல…
பொய்மைகளாகவும் புளுகுகளாகவும்
போலிக் கணக்குகளாகவும்…
ஒன்று மட்டும் புரிகிறது
எவையும் உண்மை அல்ல…
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்
சிலைகள்
கிணற்றில் போட்டாலும்
கல்லாகக் கிடக்கிறது
வாயே திறப்பதில்லை…
இவை அப்படியல்ல…
உரிக்க உரிக்க
தங்கமுலாம் பூசப்பட்ட பொய்கள்
ஒவ்வொன்றாக
வெளி வருகின்றன…
நேர்மையற்றவர்களைக் கொண்டல்ல…
இப்போது நேர்மையானவர்களே
அதனை சந்தேகிக்கிறார்கள்..
எனவே அதன் வீரியம்
கொஞ்சம் ஆட்டம் காணத்
துவங்கி இருக்கிறது…
அதனை எதிர்த்தவர்கள் எண்ணிக்கை
ஒன்றிரண்டு ஆயிரம் என்பது மாறி
இலட்சங்கள் கோடிகளாய்
திரண்டு இருக்கிறது…
சகுனிகளின்
பகடைகள் பறித்த
பாண்டவர்களின் எந்திரங்கள்
மீண்டும்
கைகளுக்கு வருகின்றன…
அதனால் இம்முறையும்
கௌரவர்கள்
தோற்று விடுகிறார்கள்…
ஆனால் இந்த
புதிய போராளிகள்
பாண்டுவின் புத்திரர்கள் அல்லர்…
வாக்குச் சீட்டுகளோடு வரும்
கரப்பான் பூச்சிகள்…
add a comment






