தமிழகம்

சிவகாசியில் துணிகரம் – பட்டப்பகலில் ரேசன் கடையில் இருந்து அரிசி மூடைகளை கடத்திய, பெண் ஊழியர் உட்பட 2 பேர் கைது

60views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பராசக்தி காலனி பகுதியில் உள்ள ரேசன் கடையில் முஸ்லீம் தெரு பகுதியைச் சேர்ந்த மும்தாஜ்பேகம் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை குறிப்பிட்ட இந்த ரேசன் கடையின் அருகில் மினி சரக்கு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு, ரேசன்கடையில் இருந்து ரேசன் அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை கடை ஊழியர் மும்தாஜ்பேகம் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் ரேசன் கடையிலிருந்து மூடை, மூடையாக அரிசி கடத்தப்படுவதைப் பார்த்து கடையின் பெண் ஊழியர் மற்றும் வாகன ஓட்டுநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சிலர், சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், ரேசன் கடை ஊழியர் மும்தாஜ்பேகம், மினி வேன் ஓட்டுநர் கார்த்திக் (27) இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ரேசன் கடையிலிருந்து கடத்தப்பட்ட, சுமார் 2 டன் அரிசி மூடைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ரேசன் கடையிலிருந்து கடத்தப்பட்ட அரிசி மூடைகள் கோவில்பட்டி பகுதியில் உள்ள அரிசி ஆலைக்கு கொண்டு சென்றதாக தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பெண் ஊழியர் உட்பட 2 பேரை, பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!