தமிழகம்

டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு

235views
மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதெமி ஆண்டுதோறும் 22 இந்திய மொழிகளில் வெளியாகும் நூல்களுக்கு சாகித்திய அகாதெமி விருதினை வழங்கி வருகிறது. 2022-ஆம் ஆண்டிற்கு விருது தமிழில் வெளியான டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ எனும் நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள மு.ராஜேந்திரன், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வடகரையில் பிறந்தவர். மதுரை உயர்நீதிமன்றத்தில் மூன்றாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், பின்னர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர், தமிழக வேளாண்மைத் துறை ஆணையர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
வேளாண்மைத் துறை ஆணையராக இருந்தபோது தமிழகத்தின் மிக அதிகமான உணவு உற்பத்திக்கான பாரதப் பிரதமர் வழங்கிய விருதினை (ரூ.9 கோடி) மூன்றாண்டுகள் தொடர்ந்து பெற்றிருக்கிறார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து ‘கிரிஷி கர்மான் விருதினை’ப் (19 பிப்ரவரி – 2015) பெற்றுள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 2011-ஆம் ஆண்டிற்கான இந்திய ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பரிசினையும் பெற்றுள்ளார்.
சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் காலச் செப்பேடுகளை எளிய மொழியில் தந்ததோடு, வடகரை, 1801, காலா பாணி, மதாம் ஆகிய 3 நாவல்களையும், பாதாளி எனும் சிறுகதைத் தொகுப்பையும், வெயில் தேசத்தில் வெள்ளையர்கள், யானைகளின் கடைசி தேசம், வண்ணச் சீரடி ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். தனது 30 ஆண்டுகால அனுபவங்களைத் தொகுத்து ‘செயலே சிறந்த சொல்’ எனும் தன்வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். திருக்குறளில் உள்ள சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்து. ‘சட்டவல்லுநர் திருவள்ளுவர்’ எனும் ஆய்வு நூலையும் எழுதியுள்ளார். கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து புதுச்சேரியில் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளையின் தினப்படி சேதிக்குறிப்புகளை 12 தொகுதிகளாகப் பதிப்பித்துள்ளார்.
வடகரை நூலுக்காக எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம் வழங்கும் ‘புதுமைப்பித்தன் விருதி’னையும் (ரூ.1,50 இலட்சம் பரிசுத்தொகை – 2019), 1801 நூலுக்காக மலேசியாவின்  நிலநிதி கூட்டுறவுச் சங்கம் வழங்கும் டான்ஸ்ரீ சோமா விருதினையும் (ரூ. 7 இலட்சம் பரிசுத்தொகை – 2018), தமிழக வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசினை மூன்று முறைகளும் பெற்றுள்ளார்.

தற்போது கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்திலுள்ள மெடிக்கல் மிஷன் மருத்துவக் கல்லூரியின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இந்திய சிலம்பாட்ட அமைப்பின் தேசியத் தலைவராகவும், கம்பம் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டியாகவும் செயலாற்றி வருகிறார்.  சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றிருக்கும் ‘காலா பாணி’ நூலை வெளியிடிருக்கும் அகநி வெளியீடு, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் செயல்பட்டு வரும் பதிப்பகமாகும். அகநி வெளியீட்டில் மு.முருகேஷ் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ சென்ற ஆண்டு ‘பால சாகித்திய புரஸ்கார்-2021’ விருதினைப் பெற்றது. இந்த ஆண்டு ‘காலா பாணி’ நாவல், சாகித்திய அகாதெமி-2022 விருதினைப் பெற்றுள்ளது.
தொடர்புக்கு:
டாக்டர் மு.ராஜேந்திரன் – 99620 20012
அகநி வெளியீடு – 94443 60421

Right Click & View Source is disabled.

error: Content is protected !!