588
சாதனையாளர்கள் பிறக்கிறார்கள். இந்த சமூகத்தை வெற்றியாளர்களாக அவர்கள் உருவாக்குகிறார்கள்.
எளிமையாக ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் நேர்மையும், தரமும் , நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயமாக அந்த செயல் வெற்றி பெறும்.
இப்படி வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறி இன்று சாதனையின் உச்சத்தை அடைந்திருக்கிறார் பிரபல தொழிலதிபர் டாக்டர்.A S இளவரசன் அவர்கள்.
துபாய், ஷார்ஜா, அபுதாபி, பஹரைன், ஓமன், கத்தார், சிங்கப்பூர், லண்டன், இந்தியா -இப்படி எல்லா நாடுகளிலும் வியாபித்திருக்கிறது இவரின் ASP நிறுவனம்.
தொழில் துறையில் இன்றைய போட்டிகளை சமாளித்து வெற்றியடையும் ரகசியத்தை நீண்ட பயணத்தில் கைவர பெற்றிருக்கிறார்.
ஒரு பொன் மத்திய பொழுதில் துபாயில் அவரை சந்தித்தோம்.
அமீரகத்தில் ஒரு சிறந்த தொழில் அதிபராக இருக்கிறீர்கள். நீங்கள் கடந்துவந்த பாதை…
நான் மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழி கிராமத்தை சேர்ந்தவன். கிராமத்தில் ஆரம்பப்பள்ளி முடித்து விட்டு அங்கிருந்து பொறையார் TBML கல்லூரியில் இளங்கலை முடித்தேன்.
மயிலாடுத்துறையில் பட்டயக்கணக்காளருக்கான பயிற்சியை திரு. ‘ஆடிட்டர்’ பெர்னாட் என்பவரிடம் பெற்றுவிட்டு சென்னை வந்து என் நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை தொடங்கி பட்டையாக கணக்காளர் என்கிற பட்டத்தை 1996 ஆம் ஆண்டு பெற்றேன்.
1997-98 ஆம் ஆண்டுதான் இந்த வளைகுடாவில் நான் கால்பதித்தது. 1999திலிருந்து ஆறு ஆண்டுகள் இரண்டு நிறுவனங்களில் முதன்மை மேலாளராக பணிபுரிந்துவிட்டு 2004 ஆம் ஆண்டு என்னுடைய பிராக்டிஸாகிய சாட்டர்ட் அவுண்ட்டண்ட்டை துபாயில் தொடங்கினேன்.
நான் புரிந்த நிறுவனங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் தான் என்னை இப்படி ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த உதவியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. கணக்கு வழக்குகள், மார்க்கெட்டிங், டெவலப்மென்ட், நிர்வாகம் இப்படி பல நிலைகளில் நான் அடைந்திருக்கும் இன்றைய நிலைக்கு அங்கு கிடைத்த அனுபவங்கள் தான் மூலக் காரணம்.
இரண்டாயிரத்திற்குமேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் நிறுவனமாக இன்று நாங்கள் வளந்திருக்கிறோம் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்கிறேன்.
வெற்றி – தோல்வி இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்…
வெற்றி என்பதற்கு கமாவையும், தோல்வி என்பதற்கு முற்று புள்ளியையும் தான் என்னால் சொல்ல முடியும்.
தோல்வி என்கிறபோது துவளாமலும், வெற்றி வருகிற போது நிதானம் இழக்காமலும் இருக்கிற நேரங்களில் நமது வளர்ச்சியை யாரும் தடை போட முடியாது. தோல்விகளால் நிறைய பாடம் கற்றிருக்கிறேன். தோல்வி என்பது ஒரு அனுபவம். நாம் செய்யும் தொழிலுக்கு அதை ஒரு முதலீடாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கருங்கல்லை ஒரு சிற்பி செதுக்கி செதுக்கி சிலையாக்குவது போல வெற்றியடைந்தவர்கள் தோல்விகளில் இருந்து பாடம் கற்றவர்களாக இருப்பார்கள்.
அடுத்தவர்கள் அடைந்த தோல்வியில் இருந்து அதன் காரணம் கண்டறிந்து அதை தவிர்க்கும் யாரும் தோற்றவர்கள் இல்லை என்பது என் எண்ணம்.
உங்களுக்கு கிடைக்கும் முதல் வெற்றியின் களிப்பில் திளைத்துவிடாமல் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தால் உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் சந்ததிகளுக்கும் அந்த வெற்றி தொடரும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்…
மனைவி. ஒரு மகன் ஒரு மகள். ஒரு சிறிய குடும்பம் எங்களுடையது. என் தந்தை திரு. சௌந்திரராஜபிள்ளை. அவர் ஒரு ஆசிரியர். தற்போது அவர் எங்களுடன் இல்லை. இன்னும் நாங்கள் கிராமத்தில் தான் வசிக்கிறோம். எங்கள் குடும்பத்தின் ஆணிவேர் அந்த கிராமம் தான். எனது மகள் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார். மகன் தற்போது பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு என் துறை நோக்கி வர தயாராகிக்கொண்டிருக்கிறார்.
உங்கள் பொழுது போக்கு …
தொழிலில் தோற்ற நண்பர்களை இயல்பாக சந்தித்து அவர்களுடன் உரையாடி மனதை இலகுவாக்கும் முயற்சியை செய்கிறேன். இது என் முக்கிய பொழுது போக்கு. நான் சிறிய கிராமத்தில் இருந்து வந்தவன். ஆகவே சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாளைக்கு நான்கு ஷோ பார்க்கும் என்னை கிராமத்தில் இருக்கும் என் வயதொத்தவர்கள் இது எங்கு உருப்பப்பட போகிறது என்று சொல்வதுண்டு. இன்று நிலைமை வேறு. பொழுது போக்கை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல் அது உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்பதை நம்புபவன் நான்.
நேர மேலாண்மை குறித்து உங்கள் பார்வை என்ன சார்…
ராபின் ஷர்மாவை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம். அவர் சொல்வார் காலதாமதம் என்பது ஒருவரின் இறப்பைப் போன்றது. ஒன்பது மணிக்கு வரவேண்டிய ஒருவர் ஒன்பது ஒன்றிற்கோ அல்லது அதற்கு பிறகோ வர நேர்ந்தால் அவர் இறந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்பார்.
காலதாமதம் எனபது ஒரு நோயை போன்றது.
டைம் மேனேஜ்மெண்ட் என்பது உங்களை சார்ந்தது மட்டும் இல்லை உங்களுக்கு தொடர்புடையவர்களையும் சார்ந்ததாகவே இருக்கிறது.
முதலாவது அந்தந்த நேரத்தில் அந்ததந்த வேலையை செய்யவேண்டும். கொஞ்சம் மாறினாலும் இழப்பு உங்களுக்கு தான் . அடுத்தது வாய்ப்புகள். வாய்ப்புகள் வரும் போது அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். டைம் மேனேஜ்மென்ட் ஆல்வேஸ் பிளக்சிபுள். நான் இப்படித்தான் இருப்பேன் என்கிற பிரின்ஸிபிள் அங்கு வேலைக்கு ஆகாது.
ஒரு வேலையை எவ்வளவு மணிநேரம் செய்ய வேண்டும் என்பதை கணக்கிட தெரிந்திருக்க வேண்டும்.
நேரமேலாண்மையில் இடையில் உண்டாகும் தடைகளுக்காகவும் நேரம் ஒதுக்கி செயல்படவேண்டும். டைம் அப்டேட் அவசியம். வேண்டிய நேரங்கள், தேவைப்படுகின்ற நேரங்கள், தடைப்படுவதற்கு உண்டாகும் நேரங்கள் இதையெல்லாம் கருத்தில் கொண்டால் நிச்சயம் நிறைய இழப்புகளை நம்மால் தவிர்க்க முடியும்.
உங்களை போன்றவர்கள் அரசியல் நோக்கி வருவது ஆரோக்கியமான ஒன்று. அரசியலில் வர எண்ணம் இருக்கிறதா ….
அரசியலில் நிற்கவேண்டும் அல்லது அதற்காக செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டு நான் எதையும் செய்யவில்லை . இயல்பாக என் பணியை செய்கிறேன் அவ்வளவுதான். எல்லா கட்சியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். நான் அரசியல் பின்புலத்தில் செயல் படவில்லையென்றாலும் கட்சியும் கொள்கையும் அரசியல் சார்ந்த அறச்சிந்தனையும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பவன் நான்.
வளரும் தொழில்முனைவோருக்கு உலக நாடுகளில்ஒரு சிறந்த தொழிலதிபராக இருக்கும் உங்களின் ஆலோசனை
நீங்கள் உற்பத்தியை உள்நாட்டில் தொடங்குங்கள். வெளி நாடுகளில் சந்தைப்படுத்துங்கள். ஒரு தொழில் தொடங்குவதற்கு இரண்டுதான் தேவை ஒன்று சோர்ஸ். மற்றொன்று மார்க்கெட்டிங். நீங்கள் வெளிநாட்டில் சந்தைப்படுத்தலில் பலம் வாய்ந்தவராக இருக்கிறீர்கள் என்றால் ஒரு இண்டஸ்ட்ரி பொருளாக இருக்கட்டும் அல்லது புட் ஐட்டமாக இருக்கட்டும் டெக்ஸ்டைலாக இருக்கட்டும் கோல்ட் இண்டஸ்ட்ரியாக இருக்கட்டும் உங்களால் மார்க்கெட்டிங் செய்ய முடியும் என்றால் பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் மார்க்கட் நாலெட்ஜ், புராடக்ட் நாலெட்ஜ் இரண்டும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் உற்பத்தியாளர்களை அணுகி அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கி சந்தைப்படுத்தலை செய்யலாம். அடுத்து புராடக்ட் நாலெட்ஜ் எங்கு வாங்கலாம், எப்படி வாங்கலாம், அதன் ஆயுட்காலம் எவ்வளவு, சந்தைப்படுதலைவிட அந்த பொருளின் மதிப்பை எப்படி கூட்டுவது என்று தெரிந்து செயல்பட்டால் அதிக லாபத்துடன் வெற்றியை ஈட்டலாம். வெளிநாடுகளில் தொழில் தொடங்கி நடத்த நீங்கள் முற்படும் போது ஏற்கனவே அங்கு அதே துறையில் இயங்கிக்கொண்டிருப்பவர்களை சந்தித்தது ஆலோசனை பெற்று ஆரம்பிப்பதும் நல்ல பலனைக் கொடுக்கும்.
உங்களுக்கு மார்க்கெட்டிங் நாலெட்ஜ் இல்லையென்றால் அது இழப்பை தான் உங்களுக்கு உண்டாக்கும். இதனால் நல்ல ஆலோசகர்களை அணுகி சிறப்பாக தொடங்குங்கள். இதற்காகத்தான் இந்த துபாயில் நாங்கள் இணைந்து சில அமைப்புகளை ஏற்படுத்தி நடத்தி வருகிறோம்.
Emirates Tamil Entrepreneurs Network என்கிற ஒரு அமைப்பை இங்கு நாங்கள் நடத்தி வருகிறோம். இதையெல்லாம் நீங்கள் கவனித்து செயல்படதொடங்கினால் நிச்சயம் உங்களாலும் வெற்றிகரமாக ஒரு நிறுவனத்தை நடத்தமுடியும்.
சமூக சேவையில் ஆர்வம் இருக்கிறதா…
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் சமூக சேவையில் ஆர்வமும் அதற்கான அர்ப்பணிப்பும் தேவை. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்- இது என் கொள்கை. செய்வதை சொல்வதோ அதை பட்டியலிடுவதோ எனக்கு உடன்பாடில்லை. சமூக அக்கறையில் நானும் இருக்கிறேன்.
பரபரப்பு வாழ்க்கையில் ஜெயித்தவர்களின் அனுபவங்கள் பலருக்கு பாடம். அப்படி தன் அனுபவத்தை எந்த ஒளிவுமின்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ASP குழும நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் A.S இளவரசன் அவர்கள்.
வெற்றியின் நிழலில் சிறிது நேரம் இளைப்பாறிய மனநிறைவுடன் விடைபெற்றோம்.
add a comment