தமிழகம்

நிலம் கையகப்படுத்தியதும் ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய ரயில் பாதை பணிக்கு டெண்டர் : தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

83views
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார். ரூ.90 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். திட்ட பணி தொடர்பான வரைபடங்களை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை அமையும் தனுஷ்கோடியில் 1964 ஆண்டு புயலில் சேதமான ரயில்வே ஸ்டேஷனில் எஞ்சிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது பயன்பாட்டில் உள்ள பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்தார். பாம்பன் ரயில் நவீன பாலம் கட்டுமான பணிகள் தொடர்பாக ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அவர் கூறியதாவது: ராமேஸ்வரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் இன்னும் 2 மாதத்தில் துவங்கும். இப் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது . ராமேஸ்வரம் போன்ற பெரிய சுற்றுலாதலத்திற்கு பயணிகள் வருகை, புறப்பாடு என தனித்தனி முனையங்கள் அமைய உள்ளன. வாகன நிறுத்தும் விசாலமான இடங்கள், இரண்டு மாடி ரயில் நிலைய கட்டடத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் ஆகியவை அமைய உள்ளன. புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும். ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய ரயில் பாதைக்கான நில ஆர்ஜித பணி நடைபெற்று வருகின்றன.

நிலம் கிடைத்தவுடன் ஒப்பந்த புள்ளி கோரப்பட உள்ளது. இந்திய கடற்படை உச்சிப் புளி ஐஎன்எஸ் பருந்து விமான தள விரிவாக்கத்திற்கான ரயில் பாதை மாற்றத்திற்கு பிறகு மேஸ்வரம் வரை மின்மயமாக்கல் பணிகள் துவங்கும் என்றார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் ஜிங்கர், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் திட்ட அதிகாரி கமலாகர ரெட்டி, முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி, துணை முதன்மை பொறியாளர் ரதி ஆகியோர் கலந்து கொண்டனர். ராமேஸ்வரம்-மதுரை வழியாக திருச்சி சிறப்பு ரயில் மூலம் ரயில் பாதையை ஆய்வு செய்தார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!