‘தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது’ பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ் நம்பிக்கை
156
நாகர்கோவில் :
நாகர்கோவிலை அடுத்த நெய்யூரிலுள்ள இலட்சுமிபுரம் கலை – அறிவியல் கல்லூரியில் வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமமைப்பின் 16-ஆம் ஆண்டு விழா, கவிஞர் மீராவின் 86-ஆவது பிறந்த நாள் விழா, நூல்கள் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா அக்டோபர் 10 வியாழனன்று கல்லூரியின் இலக்குமி சிற்றரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி கவிஞர் உமாபாரதி தலைமையேற்றார்.
ஹோலிகிராஸ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி.ஆன்சி மோள் அனைவரையும் வரவேற்றார். வளரி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் அ.சகாயமேரி தொடக்கவுரையாற்ற, முதன்மை ஒருங்கிணைப்பாளர் அருணாசுந்தரராசன் நோக்கவுரையாற்றினார். இலட்சுமிபுரம் கலை – அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.சங்கரி, வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமமைப்பின் தமிழ் மாநிலத் தலைவர் கவிஞர் சுதா மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
குமரி மாவட்ட படைப்பாளர்களின் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய வளரி சிறப்பு நூலினைப் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ் வெளியிட, சென்னை ஆசான் நினைவு கலை – அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.கிரிஜா பெற்றுக்கொண்டார்.
நூலை வெளியிட்ட கவிஞர் மு.முருகேஷ் பேசியதாவது; “இன்றைக்கு பெண்கள், கல்வி, அறிவியல், வேலைவாய்ப்பு என சகல துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். புதிய தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் பெறும் கல்வியானது அவர்களுக்கான சுய சிந்தனையையும், பொருளாதார உறுதியையும் அளித்துள்ளது. ஆணோ, பெண்ணோ இருபாலருக்கும் கல்வி மிகவும் அவசியம் எனும் விழிப்புணர்வு பெற்றோர் மத்தியில் அதிகரித்துள்ளது. பெண்கள் படித்தால் மட்டும் போதாது, வேலைக்கும் செல்ல வேண்டுமென்கிற பொருளாதார தேவையும் புரிதலும் உண்டாகியுள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்னால் வரை குறைந்த எண்ணிக்கையிலான பெண்களே கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால், நவீன அறிவியல் தொழில்நுட்பம் வழங்கியுள்ள சமூக ஊடகங்கள் வழியே ஏராளமான பெண்கள் இன்று எழுத்துத்துறையிலும் புதிய தடம் பதித்து வருகின்றனர். கவிதை, சிறுகதை. நாவல், விமர்சனம், சினிமா, யூ-டியூப்பர் என பல தளங்களிலும் சிறப்பான முத்திரையைப் பதித்து வருகின்றனர். தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளதைப் பாராட்டி வரவேற்க வேண்டிய நல்ல சூழல் உருவாகியுள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விழாவில், கவிஞர்கள் சுதா மாணிக்கம், ரெஜினாபேகம், அ.சகாய சுசி எழுதிய கவிதை நூல்களின் வெளியீடும், கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சிறப்புக் கவியரங்கமும் நடைபெற்றன. குமரி மாவட்டக் கவிஞர்களின் கவிதைகள் குறித்து ஆய்வு செய்து சென்னை மாநிலக் கல்லூரி இணைப்பேராசிரியர் முனைவர் சு.செல்வகுமாரன் உரையாற்றினார்.
நிறைவாக, கவிஞர் அ.இரஜூலா நன்றியுரையாற்றினார்.
படக்குறிப்பு: இலட்சுமிபுரம் கலை – அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் குமரி மாவட்ட படைப்பாளர்களின் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய வளரி சிறப்பு நூலினைப் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ் வெளியிட, சென்னை ஆசான் நினைவு கலை – அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.கிரிஜா பெற்றுக்கொண்டார். அருகில், பாரதியின் கொள்ளுப்பேத்தி கவிஞர் உமாபாரதி, வளரி முதன்மை ஒருங்கிணைப்பாளர் அருணாசுந்தரராசன், கவிஞர் சுதா மாணிக்கம், முனைவர் சு.செல்வகுமாரன் ஆகியோர் உள்ளனர்.
add a comment