“பெண்களின் வருகையினால் தமிழ்க் கவிதையில் புதிய எழுச்சி உண்டாகியுள்ளது” நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு
83
உத்திரமேரூர் : காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூரில் அரசுப் பள்ளித் தலைமையாசிரியரும் கவிஞருமான பெ.விஜயலட்சுமி எழுதிய ‘புத்தரின் ஒற்றைப் புன்னகை’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் மு.முருகேஷ், “பெண்களின் வருகையினால் தமிழ்க் கவிதையில் புதிய எழுச்சி உண்டாகியுள்ளது” என்று தெரிவித்தார்.
இவ்விழாவில், வட்டாரக் கல்வி அலுவலர் (3) தெ.ரூபி ஞானதீபம் நூலை வெளியிட, பன்னாட்டு சுழற்சங்கத்தைச் சேர்ந்த க.பெருமாள் பெற்றுக்கொண்டார். விழாவில், கவிஞர் சா.கா.பாரதி ராஜா, பன்னாட்டுச் சுழற்சங்கத் தலைவர் டி.செயின்ராஜ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க காஞ்சி மாவட்டச் செயலாளர் கு.ஆறுமுகம், தலைமையாசிரியர் வ.தணிகைவேல், பட்டதாரி ஆசிரியர் ஏ.பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிதை நூலைத் திறனாய்வு செய்து கவிஞர் மு.முருகேஷ் பேசியதாவது: “பல்லாயிரமாண்டுக்கால நீண்ட வரலாற்று மரபையுடைய தமிழ்க் கவிதைகளில் சங்கக் காலந்தொட்டே பெண்களும் கவிதைகளை எழுதி வருகிறார்கள். 20-ஆம் நூற்றாண்டில் பெண்களும் கல்வியறிவுப் பெற்று, ஆண்களுக்கு நிகராகப் பல துறைகளிலும் உயர்ந்த பதவிகளுக்கு வந்தனர். என்றாலும் இலக்கியத்தில் பெண்களின் பங்கேற்பும் படைப்புகளும் குறைவாகவே இருந்துவந்தன. தற்போது 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட நவீன அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக, சமூக ஊடகங்கள் பெண்கள் எழுதுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. முகநூல் குழுக்களில் ஏராளமான பெண்கள் இன்றைக்கு உற்சாகத்துடன் பல்வேறு படைப்புகளை எழுதி வருகிறார்கள். அதிலும், குறிப்பாகத் தமிழ்க் கவிதையில் பெண்களின் வருகையினால் புதிய எழுச்சி உண்டாகியுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது.
கவிஞர் பெ.விஜயலட்சுமி எழுதியுள்ள ஹைக்கூ கவிதைகளில் தாய்மையின் அன்பும், பெண்களைப் பற்றிய சமூகப் பார்வையும் மிக அழுத்தமாக இடம்பெற்றுள்ளன. பல புதிய பெண் கவிஞர்கள் இன்னும் எழுத வருவார்கள் என்பதற்கான திறப்பாக இந்நூல் அமைந்துள்ளது” என்று பேசினார்.
விழாவினை ம.ராஜசேகர் தொகுத்து வழங்க, நூலாசிரியர் கவிஞர் பெ.விஜயலெட்சுமி ஏற்புரையாற்றினார். முன்னதாக, தலைமையாசிரியர் பா.கதிரேசன் வரவேற்க, நிறைவாக, தமுஎகச காஞ்சி மாவட்டத் தலைவர் த.ஜெயக்குமார் நன்றி கூறினார்.
படக்குறிப்பு:
உத்திரமேரூரில் அரசுப் பள்ளித் தலைமையாசிரியரும் கவிஞருமான பெ.விஜயலட்சுமி எழுதிய ‘புத்தரின் ஒற்றைப் புன்னகை’ ஹைக்கூ கவிதை நூலை வட்டாரக் கல்வி அலுவலர் (3) தெ.ரூபி ஞானதீபம் நூலை வெளியிட, பன்னாட்டு சுழற்சங்கத்தைச் சேர்ந்த க.பெருமாள் பெற்றுக்கொண்டார். அருகில், கவிஞர் மு.முருகேஷ், சா.கா.பாரதி ராஜா, நூலாசிரிய பெ.விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.
add a comment