தமிழகம்

மூக்கின் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை, அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டும் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி

47views
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை துவக்கி வைத்தார். மேலும் காரியாபட்டி மற்றும் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்கான இரண்டு ஆம்புலன்ஸ் வாகன சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி தலைமையில், மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 150 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கிகளை அமைச்சர் வழங்கினார். மருத்துவக் கல்லூரியின் தமிழ் மன்றத்தையும் அவர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். பேட்டியின் போது, ஒன்றிய அரசு மூக்கின் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை, தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது. இதனை தமிழக அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 96 சதவிகிதம் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 92 சதவிகிதம் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக கொரோனா தடுப்பூசிகள் சப்ளை செய்வதை ஒன்றிய அரசு நிறுத்தி விட்டது. ஆனாலும், நமது அரசு மருத்துவமனைகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசியும், 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக அரசு, விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று வெற்று அறிவிப்பை மட்டுமே வெளியிட்டது. அது குறித்து எந்த ஒரு அரசாணையும் வெளியிடப்படவில்லை.

பல் மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரி எந்தப் பகுதிகளுக்கு தேவை என்பதை, தமிழக முதலமைச்சர் ஆய்வு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார். விருதுநகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, குடிநீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர்கள் செய்து வருகின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், சுகாதாரத்துறை மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!