தமிழகம்

ராஜபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சீருடையில் சட்டை இல்லை எனவும், உயரம் குறைந்த பாவாடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி மாணவிகளுடன் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

84views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் காமராஜர் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 5 முதல் செயல்படும் இப் பள்ளியில் அப் பகுதியை சேர்ந்த 58 மாணவிகள் உள்ளிட்ட 104 மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 3 பருவத்திற்கும் சேர்த்து 6 செட் சீருடைகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு பருவத்திற்கும் ஒரு செட் என இரண்டு செட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் 3ம் பருவத்திற்கான சீருடைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு சட்டை, டவுசர்கள் இரண்டும் சேர்த்து இரண்டு செட் வழங்கப்பட்டுள்ளது. மாணவிகள் 58 பேருக்கு வழங்கப்பட்ட சீருடைகளில் பாவாடை மட்டும் இரண்டு வழங்கப்பட்டது.
சட்டை வழங்கப்படவில்லை. மேலும் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பாவாடைகள் மிகவும் உயரம் குறைந்த நிலையில் இருந்துள்ளது. இது குறித்து மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியர் ஜெயராமனிடம் கேட்டுள்ளனர்.
வட்டார கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்ட சீருடைகளையே தான் கொண்டு வந்து கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் மேலதிகாரிகள் இது குறித்து உரிய பதிலளிக்கவில்லை எனவும் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதனை அடுத்து பள்ளியில் இருந்து மாணவிகளை அழைத்துக் கொண்டு வெளியேறிய பெற்றோர்கள் சரியான அளவில் சீருடை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குட்டையான அளவில் இருந்த பாவாடைகளை மாணவிகள் கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அச் சமயம் பள்ளி முடிந்ததை அடுத்து மாணவிகளை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் புறப்பட்டு சென்றனர்.  விரைவில் சீருடைகள் மாற்றித் தரவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!