433
“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றிய மூத்த குடி’’
– கூறும் போதே எத்தனை பெருமிதம் ஊற்றெடுக்கிறது. யார் தான் இதனை மறுப்பர்? ஆனால், ஐயம் என்று எழுந்துவிட்டால் நிரூபிக்க வேண்டுமே. அதற்குத் தேவை சான்றுகளும், ஆதாரங்களும். யாவருமே புரிந்து அறியா வண்ணம் இலக்கியங்களிலும், எளிதில் புரிந்து கொள்ள முடியாத எழுத்துகளாய் கல்வெட்டுகளிலும் ஆதாரங்கள் எங்கெங்கோ புதைந்து கிடக்கின்றன. அவற்றால் பயன் தான் என்ன? நடைமுறை வாழ்வில் யாரும் தமிழ்ப் பாரம்பரியம் சொல்லிக் கொடுப்பதில்லை. பாரம்பரியப் பெருமை அறியா மனிதன் எப்படி தாய்மொழியை மதிப்பான்?
’’தமிழிலிலா பிறதுறை நூல்கள்
தமிழில் ஆக்குவோம்’’
– என்றான் பாரதிதாசன்.
தமிழில் இல்லாதது எது? அதை தேடிச் சொல்ல அவனும் மறந்தான். அறிவியல் முதல் ஆரூடம் வரை அனைத்தையும் ஆண்டு வந்தது அன்னை மொழியே. இன்று தொழில் நுட்பமும் , அறிவியலும் ஓங்கிச் செழித்திருக்கும் நாடுகளில், மனிதன் வனவசியாய் ஆடையின்றி வாழ்ந்த போதே , நம் தமிழன் காடு திருத்தி, கழனியாக்கி, ஏடு துக்கி , கலை படைத்து, நகர் அமைத்து, அரசமைத்து நாகரிகம் கண்டிருந்தான். உலகிற்கு வாழக் கற்றுத் தந்தவன் தமிழன். இன்று கத்துக் குட்டிகளிடம் கற்று வரிசையில் நிற்கிறான்.
எங்கே தொலைத்தோம் நம் வரலாற்றை? பெற்ற தாயைப் பிள்ளைகள் கூறுபோட்டுத் தின்னும் கொடுமைக் கண்டதுண்டா? தாய் ,பிள்ளைகள் வளர்வதை கண்டு களிப்புற்று பார்த்திருந்தாள். பிள்ளைகளோ நன்றி கெட்டு, தாயை நாதியற்று அலையவிட்டனர். தமிழ் பெற்ற பிள்ளைகளாம் பிறமொழிகளை தரணி போற்ற வளர்த்தது யார் தவறு ?பெற்ற தாய் தவித்திருக்க , மாற்றானுக்கு மகுடம் சூட்டி அரியணை தந்தோம். ஈன்ற தாயின் வலி மறந்தோம். கடந்து வந்த வழியையும் மறந்தோம்.
’’ தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா ‘’
– என கர்வம் மேலோங்க பாடினான் நாமக்கல் கவிஞன். ஆனால், அவனோ தமிழ் காக்கும் சூட்சுமத்தை சொல்லாமல் போனான்.
தமிழுக்கு கதியாம், கம்பனும் , திருவள்ளுவனும் . இருவரின் வரலாறும் கட்டுகதையாகி போனாது யார் செய்த குற்றம்? எங்கே தொலைத்தோம் அவர் தம் வரலாற்றை ? அறிவு ஜீவிகள் உலவிய தமிழகத்தில் அவர்களது வரலாற்றை பேணிக்காக்க மறந்து போனோம். எங்கிருந்தோ வந்தான் ; எடுத்தான்; படித்தான்; மொழி பெயர்த்தான்; (பிறநாட்டு தமிழறிஞர்கள்) கம்பராமயாணத்தையும் திருக்குறளையும். அதன் பின்னே தேடினோம் அவர்தம் வரலாற்றை…..வெட்கக்கேடு! வரலாறு தெரியாத காரணத்தால் புனைந்து கொண்டோம் புதிய வரலாற்றை தடுமாறித் தான் நிற்கின்றோம் .
வரலாற்றைத் தொலைத்த தமிழனாய் . ’‘நஞ்சுண்டமைவர் நனி நாகரிகர்’’ நற்றிணையின் கூற்று இது.
நஞ்சை மட்டுமே ஊட்டி ஊட்டி நீலம் பாய்ந்து போன தமிழ்த் தாய்க்கு ஒளியுட்ட முன் வருபவர் தான் எவரோ? இலக்கியகங்களால் அணி செய்த தாயை முகவரியின்றி மூலையில் அமர்த்தியிருக்கிறோம். தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாய் படித்து , மதிப்பெண்ணுக்காக மட்டும் மனப்பாடம் செய்விக்கும் காலமிது. இலக்கியங்கள் வழி தமிழ் வரலாற்றை ஓதினோமா? இலக்கியங்கள் நம் வரலாற்றின் சான்றுகள் என்பதை நாம் உணரவில்லை.
‘’யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல்
இனிதாவது எங்கும் காணோம் ‘’என்றான் பாரதி.
அவனோ பன்மொழிப்புலவன். நாமோ இன்று தாய்மொழியையும் அரைகுறையாய், பிற மொழியும் (ஆங்கிலம்) மிகக் குறையாய் கற்றுத் தற்குறிக்களாகவே இருக்கிறோம். சாகக்கிடக்கும் மனிதனை உயிர்பெற்று எழச்செய்ய அறிவியலால் முடியும் .
‘’தமிழ் இனி மெல்லச் சாகும்’’ என்றானே பாவி. அவன் மொழியைப் பொய்யாக்க நம்மால் தான் முடியும். தமிழ் மொழியின் இலக்கியத்தை வரலாற்றோடு இணைத்துப் பார். தமிழனின் தொன்மை வரலாறும் பாரம்பரியமும் தமிழோடே உன்னை கட்டி போடும். வேரினைத் தேடிச்செல். அங்கு தான் விருட்சத்தின் உயிர் உள்ளது. சிதலெல்லாம் வேரினை அரிக்கும் முன் வேலியிடு. வந்தான் ; வென்றான்; சென்றான் என்று எவனெவனோ வாழ்ந்த கதை பேசியது போதும். தமிழினின் வரலாறு தடுமாறி நிற்கிறது.
தமிழினத்தின் உண்மை வரலாற்றைத் தேடு.
தமிழ் மொழியைக் காக்க உன் சிந்தைக் கொடு.
தமிழன் என்று பெருமிதம் கொள்.
தமிழோடு நீயும் உயர்ந்து நில்.
இலக்கியங்களின் சூட்சும முடிச்சுகளை அவிழ்.
தமிழனின் பாரம்பாரியம் எட்டுத்திக்கும் புகல்.
உண்மையை உணரப் புறக்கண் போதாது.
அகக்கண்ணைத் திறந்திடு . அறிவுக்கண் திறக்கட்டும்.
உலகம் என்றுமே தமிழனின் கைக்குள் தான்.
இதை எட்டுத்திக்கும் முழங்கிடு . உலகம் ஒரு முறை குலுங்கட்டும்.
மலரும் தலைமுறையேனும் பாரம்பாரியம் அறியட்டும்.
தமிழ்தாய் இனியேனும் அவன் மடியில் அமைதி கொள்ளட்டும்.
வாழ்க தமிழ். வெல்க தமிழ்.
அ.ஜெகதீஸ்வரி
முது நிலை ஆசிரியர், அந்தியூர்.
பவானி
add a comment