கட்டுரை

வெண்ணிற இரவுகளில் நான்

1.18Kviews
இரவு என்பது தனி அழகுடையது. நீண்ட மலைப்பாம்பை போல அது ஊர்ந்து செல்லும் பாங்கு…… அதனுள்ளே நம்மை அத்தனை அழகாய் பொருத்தி விடுகிற இயல்பு…… என அத்தனையுமே இரவிற்கான தனி சிறப்புகள் என்றே சொல்லலாம்.
இரவு என்பது குறைந்த ஒளி என்றும் சொல்வார்கள். சில இரவுகள் நீண்டதாய் இருக்கும்; சில இரவுகள் சட்டென்று முடிந்து விடும் ; சில இரவுகள் கதைகளாய்; சில இரவுகள் சிந்தனையாய் என என்றும் இனிமைகளாய் நம்முள் நீங்கா இடம் பிடித்தவை இரவுகள்.
இரவுகளை இரசிக்கின்றவர்களே உணர்வார்கள் அந்த இரவின் சுகந்தத்தை. அப்படி இன்பம் நல்குகிற நான்கு இரவுகளையும் ஒரு பகலையும் உள்ளடக்கிய இவ்வுலகின் தலைசிறந்த அற்புத காதல் கதையான *வெண்ணிற* **இரவுகளுக்குள்* போய் வரலாமா ?
*பீட்டர்ஸ்பர்க்கின்* அழகையும், ருஷ்ய நாட்டு இளைஞர்களின் ஆன்மாவையும், தனிமனிதனின் ஒழுங்கையும், கழிவிரக்கத்தையும், அன்பையும், காதலையும், ஒவ்வொருவரும் கடக்கும் தனிமையான குளிர் நிறைந்த இரவையும் நமக்கு கடத்துகிறார்  ரஷ்ய இலக்கியத்தின் பிதாமகனான ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி.

மனித குலத்தின் வரம்பில்லாக் கொடுஞ் சோகங்களை எல்லாம் இம் மாமேதை தமது எழுத்துகளில் வடித்தெடுத்துத் தர வேண்டுமென திட்டமிட்ட இவரின் கனிந்த மனதினால் முகிழ்ந்த அழகிய எழுத்துக்களால் காதலால் நிறைந்ததுதான் இந்த *வெண்ணிற* *இரவுகள்*.
உணர்ச்சிவயப்பட்ட காதற் கதை. கனவுலக வாசியின் நினைவுகளிலிருந்து என்கிற அடைமொழியுடன் துவங்கி ” நின் காதல் நிழல்தன்னில் நின்று மகிழ்வோம்.
மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதெனினும் போதுமது என்றெண்ணிப் பிறந்தானோ ?”
இவான் துர்கனேவின் வரிகளில் தொடர்ந்து பயணித்து நாம் உள்ளே போனால் பீட்டர்ஸ்பர்க் என்கிற அழகிய நகரையும், ஃபன்தான்கா ஆற்றங்கரையையும் இரசித்து பார்க்கலாம். வாய்ச்சொல்லாய் வெளிப்படாமல் உள்ளத்தினுள் ஒளிர்ந்த உள்ளன்புடன் ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் அந்த இருவர்……. அதில் ஒருவர் வயதானவர் . பிறிதொருவர் நம் கனவுலகவாசி. அந்த இருவரில் ஒருவருக்கு அந்த நகரத்தின் வீடுகள் மிக நெருங்கிய நண்பர்கள். சிறிய வீடுகளின் அழகு, வண்ணம் என்று நாமும் அந்த வீடுகளை பார்த்துக்கொண்டே செல்லலாம் அவருடன்.
கண்ணிற்கே தெரியாத தீநுண்மியின் பரவல் இன்று உலகின் அனைத்து நாடுகளையும் கலக்கமுற செய்துள்ளது. நம் தலைநகர் சொல்லும் ……. உழைத்து உழைத்து சோர்ந்து உலர்ந்த பாதங்களின் இரத்த வாசனையை. நாம் வாழும் காலத்திலேயே இந்த துயரை கண்ணுற்று கலங்கினோம். அவரும் அது போலான துயரத்தை அனுபவித்திருக்கிறார் அன்று. பீட்டர்ஸ்பர்க் நகரம் கிராமக் குடில்களுக்கு புலம் பெயர்வதை.
அந்த மாதிரியான துயரமான பொழுதிலே தான் இனிமையான உருவாய், இனிமையின் உருவாய் கருநிற முடியாளாய், கண்ணிமைகளின் கருமுடிகளில் கண்ணீர் பளிச்சிட நின்றாள் அவள்.
அவளைக் கண்ட அந்த நேரத்தில் தான் அவரும் தன்னை உணருகிறார்; தன் இளமையை உணருகிறார்; தான் இதுவரை எப்படிப்பட்ட தனிமையில் இருந்துள்ளோம் என்பதை உணருகிறார்.
உன்னுடைய கையைப் போன்ற நேர்த்தியான, மென்மையான கையால் பிடிக்கப் பட்டதில்லை; பெண்களுடன் எப்படி பழகுவது என்பதையே மறந்துவிட்டேன்; இல்லையில்லை, என்றுமே அவர்களுடன் பழகி அறியாதவன் நான். தன்னந்தனியாய் இருந்து வருகிறேன்.
இந்த வரிகளின் துயரம் அத்தனை எளிதில் கடப்பதல்ல….. அன்றிலிருந்து இன்று வரை ஆண்கள் – பெண்களுக்கும் , பெண்கள் – ஆண்களுக்கும் ஈர்ப்பை தருபவர்களாக இருந்தாலும் எளிதில் பேசிப் பழக முடியாத ஒரு வட்டத்திற்குள்ளேயே இருக்கிறார்கள். கனவு என்கிற ஒன்று மட்டும் இல்லையெனில் இந்த வெறுமை, தனிமை நம்மை மிக மிக துன்புறுத்தும். அதனால் தான் இவருக்கும் கனவுகள் மீது அலாதி ப்ரியம் போல.
இவளும் கனவு தானோ என்று நாம் நினைக்க தொடங்குகிற கணத்தில் தான் அவள் பேச ஆரம்பிக்கின்றாள். அவனைப்பற்றி கேட்கின்றாள். அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்றும் சொல்கிறாள் அவள். அவள் சொல்வதைக் கேட்டு வியயப்படைகிறார் அவர். சமர்த்துப் பெண்ணாய இருக்கிறாளே, சாமர்த்தியமும் அழகும் இப்படி ஒன்று சேர்வது அரிதாயிற்றே என்று அவர் மகிழ்வது அவரின் சிறு குறும்புத்தனத்தைக் காட்டுவதாய் உணர்கிறேன் நான்.
இப்படியே அறிமுகமாகி இரண்டொரு வார்த்தைகள் பேசி விடை பெறுகிறார்கள் முதல் நாள் இரவில். இரண்டாம் நாள் இரவிற்காக அவளும் காத்திருக்க, அவரும் காத்திருக்க அந்த ஆற்றங்கரையில் அவர்களுக்காகவே மலர்ந்தது போல இருக்கிறது அந்த இரவு. அன்று தான் அவளின் பெயரும் நமக்கு தெரிகிறது. 17 வயது *நாஸ்தென்கா* எத்தனை அழகான பெயர். உச்சரிக்கும் போது அத்தனை இனிமை.
தன்னைப் பற்றியும், தன் கனவில் வருகிற சீனத்து அரசிளங்குமரனைப் பற்றியும் பாட்டியின் சேலையில் தன் உடையை முடிச்சிட்டு அமர்ந்திருக்கும் சோகக்கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறாள் நாஸ்தென்கா.
நாஸ்தென்காவிடம் தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கின்றார் அவர். தன் கனவுகளை, தன் தனிமையை சொல்லி நான் தனி ரகம் என்று அவர் சொல்லும்போது நாஸ்தென்காவைப் போல நாமும் திறந்த வாயை மூடாது அதை கவனித்துக் கொண்டே வருகின்றோம் சுவாரஸ்யமாய்.
கனவு காண்கிற அந்த நேரம் தான் அவருக்கான நேரமாக இருக்கின்றது. தொல்லை தரும் தனது அன்றைய அலுவல்கள் முடிவுற்று விட்டன. விடியும் வரை இனி கவலையில்லை என்று அவர் மகிழும் போது நமக்கும் உடனே தூங்கி கனவு காண வேண்டும் போல தோன்றுகிறது.
திரும்பப் பெற முடியாத படி மறைந்துவிட்ட கடந்த காலத்திற்கு தனது நிகழ்காலத்தை இசைவு படுத்திக் கொள்ள விரும்பும் கனவுலகவாசியின் எண்ணமும் நமது எண்ணமும் கூட இப்படியே தான் இருக்கின்றது சில நேரங்களில். கடந்து போனதை எண்ணியெண்ணி வருந்துவது, இப்படி நடந்திருக்கலாம், நான் மட்டும் அங்கே இருந்திருந்தால் இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று நிகழாத விஷயங்களை பேசி மகிழ்வதில் ஏதோ ஒரு சுகம் நமக்கு.
இக் கதையையும் கனவுகளையும் கேட்டு நாஸ்தென்கா கண்ணீர் விட்டுக் கொண்டே தனது கதையையும் காதலையும் சொல்ல ஆரம்பிக்கிறாள்.
மரத்தாலான பழைய பெரிய வீட்டில் பாட்டியுடன் கீழ் தளத்தில் வசித்து வருகிறாள். மச்சு அறையை வாடகைக்கு விடுகிறார்கள். அந்த வருமானமும், பாட்டியின் பென்ஷனும் அந்த குடும்பத்தை சற்று நிம்மதியாக வாழ வைக்க போதுமானதாக இருக்கின்றது. அப்படி மாடிக்கு குடி வருகின்ற ஒரு இளைஞனிடம் தனது மனதைப் பறிகொடுக்கும் நாஸ்தென்கா, ஒரு நாள் அவனுடன் சேர்ந்து அந்த வீட்டை விட்டு செல்வதாய் முடிவெடுக்கிறாள். முடிவை செயல்படுத்தவும் துணிகிறாள். ஆனால் அந்த இளைஞன் மிக மிக நல்லவனாக இருக்கின்றான். தான் முதலில் அங்கே சென்று வேலையில் சேர்ந்து பிறகு வந்து அழைத்துப் போவதாக கூறுகின்றான். இந்த இடைவெளியில் அவளுக்கு திருமணம் நடந்தாலோ, அல்லது வேறு காதல் வந்தாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றும் சொல்கிறான். எத்தனை பக்குவமான மனது.
இவ்வரிகளை படிக்கும்போது ஏனோ எனக்கு இன்றைய காதலும் , காதலர்களும் நினைவிற்கு வந்தனர். அதிக உரிமை எடுத்துக் கொண்டு அடுத்தவர் சுதந்திரத்திலும், தனிநபர் கருத்திலும் மூக்கை நுழைத்து அவர்களைத் துன்புறுத்தி, தானும் துன்பம் அடைந்து காதல் என்பதையே மறந்து உடைமையாகக் கருதி கொல்லும் அளவிற்குக் கூட செல்கிறார்கள். *காதல்* *என்பது* *நேசிப்பதும்* *நேசிக்கப்படும்* என்பது மாறி என் உரிமை, உன் உரிமை என்று அல்லல்படுகிறார்கள்: படுத்துகிறார்கள்.
ஆனால் அன்று, அப்படிப்பட்ட காதலன் ஊருக்கு திரும்பி வந்து இருப்பதாகவும் ஆனால் தன்னை வந்து பார்க்கவில்லை என்றும் அதை நினைத்தே தான் அழுது கொண்டிருப்பதாகவும் கூறுகிறாள் நாஸ்தென்கா.
உள்ளுக்குள் சில்லு சில்லாக சிதைந்து போகிறார் அவர். தன் மனதில் நினைத்ததை எதுவும் வெளியில் சொல்லாமல் நாஸ்தென்காவின் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காணலாம் என்று யோசிக்கிறார்.
பிறகு , அதற்கு தீர்வாக நாஸ்தென்காவை கடிதம் எழுதித் தரச் சொல்கிறார். அவனிடம் தான் கொண்டு சேர்ப்பதாய் உறுதி கூறுகிறார். அவளும் மிக மகிழ்ச்சியாக சம்மதித்து கடிதம் எழுதி நாளை தருவதாக கூறி இரண்டாம் நாள் இரவில் பிரிகிறார்கள் இருவரும்.
மூன்றாம் நாள் இரவு மழை பெய்கிறது. சந்திக்க மாட்டார்களோ என்று நாம் சிந்திக்கின்ற போதே அவர்களின் சந்திப்பு நிகழ்கிறது.
“இன்பமும் மகிழ்ச்சியும் எப்படிப்பட்ட அழகை உண்டாக்கிவிடுகின்றன உங்கள் இதயத்தில்  எப்படி அன்பு பொங்கி வழிகிறது இந்த அன்பு அனைத்தையும் நீங்கள் இன்னொரு இதயத்தில் பாய செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள்” எத்தனை அர்த்தப்பூர்வமான வரிகள் இவை.
மனதில் துளிகூட விஷமம் இல்லாத பரிபூரணமாய் அன்பு நிறைந்து இருந்தால் மட்டுமே வெளிவரும் இது போன்ற தூய வார்த்தைகள்.
நாஸ்தென்காவின் மனதும் அத்தகைய அன்பால் தான் நிறைந்திருந்தது. கனவுலக வாசியின் மனதும் அப்படிப்பட்ட அன்பால் தான் நிறைந்திருந்தது.

அதனால்தானே நான் காதலுக்கு உதவுவதாய் சொல்கிறார்.

என் மீது நீ காதல் கொண்டு விடாமல் இருப்பதால் தான் உன்னிடம் இவ்வளவு பாசமாக இருக்கிறேன். வேறு யாராவது உன்னிடத்தில் இருந்தால் என்னை நச்சரித்து பாடாய்படுத்தி இருப்பானே; பெருமூச்செறிந்தும் முனகியும் இருப்பானே. ஆனால் நீ இனிமையிலும் இனிமையாய் நடந்து கொள்கிறாய். இதைச் சொல்லி அவள், அவன் கையை பலமாய் அழுத்தி ஒரு நசுக்கு நசுக்கினால்  அருமையிலும் அருமையான நண்பன் நீ என்று அமைதியாய் அர்த்தத்துடன் சொல்கிற இந்த காட்சி நம் மன கண்களுக்குள் விரியும்போது அடடா எத்தனை உணர்வுபூர்வமான இடம் இது என்று நமக்குள்ளேயே நிச்சயம் ஏதோ ஒன்று பொங்கித் ததும்பும்.
நாஸ்தென்காவின் மீதும், கனவுலகவாசியின் மீதும் நமக்கு வருகிற அந்த அபரிமிதமான அன்பு எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.
ஓ ! நாஸ்தென்கா, நீ வேறு யாரையோ காதலிப்பதாக சொல்வதெல்லாம் பொய் தானே நீ இவரை தானே காதலிக்கிறாய் என்று நமக்குக் கேட்கத் தோன்றும் போது காலடி ஓசை ஒன்று கேட்கிறது அவர் ஓசையை கேட்டு துணுக்குற்ற நாமும் திரும்பி பார்த்தால் வேறு யாரோ?
அந்த கணம் கனவுலகவாசியின் மனதில் தோன்றும் ஒருவித உணர்வு நிச்சயம் இந்த கணம் அவர் மீது நமக்கே காதல் வந்து விடும். அப்படியான உணர்வு நாஸ்தென்காவின் கையை விட்டு விட்டு நகர்ந்து நிற்கும் அந்த நாகரீகம்.
ஆனால் அடுத்த நிமிடம் நாஸ்தென்கா கூறுவது தான் அத்தனை சிறப்பு. ஏன் என் கையை விட்டுவிட்டு நகர்ந்தாய் ? இருவருமாய் சேர்ந்து அவனை சந்திக்கலாம் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை அவன் பார்க்க வேண்டும்.
என்ன!!! என்ன!!! சொன்னாய் நீ …….
நாஸ்தென்கா!!  ஒரே ஒரு சொல்லைக்கொண்டு  நீ அளவின்றி எவ்வளவோ சொல்லிவிட்டாயே!! இப்படிப்பட்ட காதல் இதயத்தை  உறைய வைத்து ஆன்மாவை ஒழுங்கு செய்து விடுமே உன்னுடைய  கை  ஜில்லிட்டு குளிர்ந்திருக்க என்னுடைய  கை நெருப்பு போல சுடுகின்றதே…….
அடடா …..அடடா….. அடடா…… எத்தனை இனிமையான காதல்!! எத்தனை கவித்துவ வரிகள். காலத்திற்கும் நமக்கு இதமளிக்கும் வார்த்தைகளன்றோ இவை.
இந்த வெண்ணிற இரவுகள் இந்த இடத்திலேயே விடிந்து இருந்தால் எப்படியிருந்திருக்கும் ? ஒரு வேளை நம்முடைய வழக்கமான தமிழ்சினிமா பணியாக இருந்திருக்குமோ ……..????
ஆனால்,  இது உலகத்தின் அதிசிறந்த காதல் கதை என்றும். அதனால்தான் காலத்தைக் கடந்து இன்றும் நம் மனதில் காதலையும், உண்மையான அன்பையும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன இந்த *வெண்ணிற* *இரவுகள்* . ஆம், அதை உணர நான்காம் இரவை நீங்கள் படித்து மகிழுங்கள்…… இல்லையில்லை உணருங்கள்; அனுபவியுங்கள் அந்த உன்னதத்தை.
கனவுலகவாசியின் பிரார்த்தனையான அவ்வரிகள் என்றும் நிகழட்டும் என நாமும் நாஸ்தென்காவிற்காக பிரார்த்தித்து வாழ்த்துக் கூறுவோம்.
” அவனுடன் சேர்ந்து நீ மணமேடைக்கு சென்ற போது உனது கருங்குழலில்  நீ  சூடி இருந்த அந்த இன்னரும் மலர்களில் ஒன்றையேனும் கசங்கி விழச் செய்யமாட்டேன் மாட்டவே மாட்டேன்.  உன் வானம் என்றும் நிர்மலமாய் ஒளிர்வதாக;  உனது இனிய புன்னகை துன்பத்தால் தீண்டப் பெறாது என்றும் ஒளி வீசுவதாக;  தனிமையான,  நன்றி நிறைந்த ஓர் இதயத்திற்கு கணப்பொழுது ஆனந்தமும் இன்பமும் அளித்தாய் அல்லவா,  அதற்காக என்றென்றும் இறைவன் உனக்கு அருள் புரிவாராக!!!
பரிசுத்தமான வார்த்தைகளைக் கூறும் இந்த மனது இருக்கிறதே..
மிகச்சிறப்பான முறையில் மொழி பெயர்த்துள்ள பாங்கு இதற்கு கூடுதல் சிறப்பு.
எத்தனை முறை படித்தாலும் சலிக்க வைக்காமல், புதிதாகவே இருப்பது போலவே தோன்ற வைக்கின்ற வசீகர எழுத்துக்களைக் கொண்ட இந்த ” *வெண்ணிற* *இரவுகளுக்குள்* நீங்களும் ஒரு உலா போய்வாருங்கள்.
திரும்பி வருவீர்கள் மனம் கொள்ளா காதலுடனும், விழியோரம் அரும்பும் சில ஆனந்தத் துளிகளுடனும்.
அ.ஜெ.அமலா, ஆரணி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!