பட்டியல் இனத்தவரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரம்; நடிகை மீரா மிதுன் சிறையில் அடைப்பு: வீடியோவை வெளியிட உதவியதாக நண்பரும் கைது
பட்டியல் இனத்தவரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, வீடியோவை வெளியிட உதவியதாக அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் வசிப்பவர் நடிகை மீரா மிதுன். மிஸ் தென் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உள்ளிட்ட அழகிப் பட்டங்களை வென்றவர். மேலும், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்திய பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு, பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், நடிகை மீரா மிதுன் அண்மையில் யூ-டியூப்பில் பதிவிட்டிருந்த வீடியோவில், பட்டியல் இனத்தவர் குறித்தும், அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் குறித்தும் இழிவான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது....