பேராசிரியர் நா. இராமச்சந்திரனின் “துடியான சாமிகள்: வில்லுப்பாட்டும் சமூகச் சிக்கல்களும்” : நூல் அறிமுகம்
179
பல்லாண்டுகளுக்கு முன் சென்னையிலிருந்து மக்கள் வெளியீட்டின் வெளியீடாக வந்த இந்த நூல் மீண்டும் என்.சி.பி.எச். வெளியீடாக ஒருசில ஆண்டுகளுக்கு முன் தமிழுலகுக்குக் கிடைத்தது. என் சி பி எச் வெளியீடாக வந்தபோதே இந்நூலை நான் படித்திருந்தேன். அண்மையில் இந்நூலை மறுபடியும் வாசிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. மீண்டுமொருமுறை வாசித்தபோது அது உண்மையில் ஒரு மறு வாசிப்பாக அமைந்ததுவிட்டது. இதனால்தான் இந்நூலைப் பற்றிய அறிமுகத்தை எழுதுமாறு என் மனம் தூண்டியது.
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழியல் உலகில் ஒரு தலைகீழ் மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டுவந்தது நாட்டார் வழக்காற்றியல் துறை என்பதை நாமெல்லோரும் அறிவோம். தமிழ் நாட்டார் வழக்காற்றியலின் தந்தை எனப் போற்றப்படும் பேராசிரியர் நாவாவின் பெருமுயற்சிகள் முன்னோடி முயற்சிகளாக அமைந்தன. நாவாவின் நெருங்கிய நண்பரும் தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த் துறை தலைவருமான நாட்டார் வழக்காற்றியல் அறிஞருமான பேராசிரியர் தே. லூர்து அவர்கள் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறையை நிறுவி வளர்த்தெடுத்தார். இந்த இரு பெரும் ஆளுமைகளின் நேரடியான அரவணைப்பில் வளர்ந்த ஒரு ஆய்வு மாணவர்தான் இந்நூலின் ஆசிரியர். மட்டுமல்ல. பேராசிரியர் தே.லூர்து அவர்களின் நேரடி வழிகாட்டுதலில் செய்யப்பட்ட நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளின் ஒரு அறுவடைதான் நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கும் “துடியான சாமிகள்” என்னும் ஆவணம்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ் முதுகலை படித்துத் தேறி, நாட்டார் வழக்காற்றியலில் முனைவர் பட்டமும் பெற்று, பேராசிரியர் தே. லூர்து தலைமையில் இயங்கிய நாட்டார் வழக்காற்றியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி, பின்னாளில் அந்தத் துறையின் தலைவராகவும் பணிநிறைவு செய்தபின்னரும், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையத்தின் இயக்குநராக இன்றும் பணிபுரிந்துகொண்டிருக்கும் முனைவர் நா. இராமச்சந்திரன்தான் இந்நூலின் ஆசிரியர்.
பேராசிரியர் நா. இராமச்சந்திரன்
இந்நூலை நான் மறுவாசிப்பு செய்யும்போது, ஒரு ஆய்வுநூல் என்பதையும் மீறிய ஆழமான அடிப்படைகளைக் கொண்ட அற்புதமான நூல் என்பதை நான் உணர்ந்தேன். ஒரு ஆய்வுமாணவரின் ஆய்வேடு என்ற எல்லைக்கு அப்பாலும் இந்நூல் பயணம் செய்கிறது என்பதை நான் உணர்ந்தபோதுதான் இந்நூலின் உருவாக்கப் பின்னணியையும், அந்தப் பின்னணியில் இருபெரும் மேதைகள் ஒளிர்கிறார்கள் என்பதையும் என்னால் உய்த்துணர முடிந்தது. இதன் விளைவே இந்த எளிய அறிமுகம்.
இந்நூல் மேசைகளில் பனுவல்கள் வழி நடந்த ஆய்வின் வரவு அன்று. மாறாக, நூலாசிரியர் ஒவ்வொரு கதைப்பாடலையும் அது நிகழ்த்தப்படும் சூழலில் தானும் இணைந்து சேகரித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நூலினை ஆக்கியுள்ளார். இது இந்நூலின் தனிச்சிறப்பு எனலாம்.
இவர் தனது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட குமரி மாவட்டக் கதைப்பாடல்கள் பின்வருமாறு: 1. மருதநாயகம் பிள்ளை கதை
2. பிச்சைக்காலன் கதை 3. சின்னத்தம்பி கதை, 4. முத்துப்பட்டன் கதை 5. தோட்டுக்காரி அம்மன் கதை, 6. சின்னணைஞ்சி கதை. இந்த ஆறு சமூகக் கதைப் பாடல்களும் சேகரிக்கப்பட்ட முறை , அது வழங்கப்படும் சமூகச் சூழல், வழிபடும் ய மக்கள், கதைப்பாடல் புழங்கும் ஊரின் சிறப்பு மற்றும் மக்கள் சிறப்பு போன்றவற்றையும் நுணுக்கமாக கள ஆய்வு செய்து தன் ஆய்வினைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
அவர்கள் எழுதியுள்ளார். இந்நூலில் கதைப்பாடல் குறித்தஆய்வினை மேற்கொண்டுள்ளார். கதைப்பாடல் குறித்து ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்கள் இந்நூலினை அரிச்சுவடியாக கொள்ள வேண்டும். ஏனென்றால் கதைப்பாடல் குறித்து வெளிவந்த நூல்களில் இந்நூல் தனிச்சிறப்பு மிக்கது.
இங்கே நான் குறிப்பாகச் சொல்லவிரும்பும் மற்றோர் அம்சம் இந்நூலுக்கு அசலான ஆற்றலையும் வழங்குகிறது. இதுவரையிலும் தமிழகச் சூழலில் கதைப்பாடல்கள் குறித்து ஆய்வு செய்தவர்கள் கதைப்பாடல்களுக்கென்று ஒரு வரையறையை வழங்கியதாகத் தெரியவில்லை. ஆனால் முதன்முறையாகக் கதைப் பாடல்களுக்கு என்று தனித்ததொரு வரையறையை முனைவர் நா.இராமச்சந்திரன் இந்நூலில் வழங்கியுள்ளார்.
இந்த ஆய்வு நூல் முன்னுரை முடிவுரை நீங்கலாக நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டு ஆய்வுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன:
1. சமூகக் கதைப் பாடல்கள் ஒரு வரையறை 2. கதைப்பாடல்- தெய்வ வழிபாட்டு சூழல், பின்புலம், தோற்றம் 3. சமூகக் கதைப் பாடல்களின் அக இயல்புகள் 4. கதைப்பாடல்களில் சமூகச் சிக்கல்கள். இந்த 4 இயல்களிலும் இவர் காத்திரமான வாதங்களையும்
முன்வைக்கிறார். ஒவ்வொரு கதைப் பாடல்களும் எவ்வகையான சமூகச் சூழல்களில் தோற்றம் பெற்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளார். கதைப் பாடலின் வழி சமூகச் சிக்கல்களையும் ஆராய்ந்துள்ளார். எனவே இந்நூல் சமூகத்தைப் பற்றிய, சமூக நிலை குறித்த வரலாற்றுப் பார்வைக் கொண்ட ஒரு ஆய்வு வெளிச்சம் எனலாம். எனவேதான் இந்நூல் தமிழ் நாட்டார் வழக்காற்றியலில் ஒரு அரிச்சுவடியாக இருக்கிறது என ஆய்வாளர்கள் பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள்.
இந்நூல் ஆய்வாளர்களுக்கு ஒரு அரிச்சுவடி என்றால், சமூக வரலாற்றின் அசைவுகளை அறிய விரும்பும் எல்லா வாசகர்களுக்கும் ஒரு அறிவு விருந்தாக அமையும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
முனைவர் கனிமொழி செல்லத்துரை
add a comment