Uncategorized

ராசாத்தி – நாவல் – மதிப்புரை

447views
நூலின் பெயர் : ராசாத்தி
நூலின் ஆசிரியர் : திரு. சிந்து சீனு அவர்கள்
நூலின் வகை : நாவல்
முதற்பதிப்பு : மே 2022
வெளியீடு : லாவண்யா புத்தகாலயம், வேலூர்.
மொத்த பக்கங்கள் : 102
விலை : ரூ. 180 / –
திரு. சிந்து சீனு அவர்களின் இடைவிடாத தொடர்ச்சியான எழுத்துப்பணிக்கு முதல் வணக்கம். ” தொடர்ச்சியாக இயங்குவது தான் வெற்றிக்கு மட்டுமல்ல….. நம் உழைப்பிற்கும் ஒரு அங்கீகாரம் என்பதை திரு. சிந்து சீனு அவர்களிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
சமூகத்தின் செயல்பாடுகளை மிக நேர்மையாக பிரதிபலிக்கும் கண்ணாடி என்று மக்களின் வரலாறுகள் எப்படி கதையாகவும், நாவலாகவும் மாறுகின்றது என்பதை மிகத் துல்லியமாக தனது அணிந்துரையில் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார் தோழர் ஐ. ஜா.ம. இன்பகுமார் அவர்கள். சிறுகதை, நாவல் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருந்துள்ளது ? எந்தெந்த ஆளுமைகள் இதில் கோலோச்சியுள்ளனர் என்று ஒரு ஆராய்ச்சி உரையாகவும் தனது அணிந்துரையை வழங்கியிருப்பது மிகச்சிறப்பு. அதையெல்லாம் படிக்கும் போது மிக நிறைவாக உணர முடியும் நம்மால்.
அந்த உணர்வுடன் அப்படியே ” ராசாத்தி ” நாவலுக்குள் நுழைவோமா ?
முருகேசன், சாந்தா – இவர்களின் பிள்ளைகளாக சிவனாண்டி, பிரகாசம், சுதர்சன், கழனி, கரை, காளை, ஆடு, கோழி என்று அச்சு அசலான ஒரு கிராமம்….. அதுவும் மின் இணைப்பு இல்லாத கிராமம் என்று நம் முன்னே விரிகிற காட்சிகள்…..
காலங்கள் மாற, காட்சிகளும் மாறி ஊருக்கு ஒரு குண்டு பல்புடன் கூடிய போஸ்ட் மரம், அதே போல வீட்டிற்கு ஒரு குண்டு பல்பு என வருகிறது… ஆனால் அதுவும் மிகுந்த அச்சமுடனே அந்த ஒற்றை குண்டு பல்பையும் பார்க்கும் மிக எளிய சனங்கள்.
அதிகமான அன்பு இருக்குமிடத்தில் தான் அதிகமான உழைப்புச் சுரண்டலும் இருக்கும் என்பதை சிவனாண்டி பாத்திரம் வழியே காட்டுகிறார் நாவலாசிரியர். தம்பிகளுக்காக உழைத்து உழைத்து சோர்வறியா அண்ணனாக சிவனாண்டி.
அடுத்த காலகட்டமாக வீரிய விதைகள், செயற்கை உரங்கள் என்று வருகிறது. அதற்கும் ஈடு கொடுத்து உழைக்கின்றான் சிவனாண்டி. சிவனாண்டிக்கு பக்கபலமாக வருகிறவள் தான் நாவலின் தலைப்பாக அமைந்த ராசாத்தி.
இது சினிமாவாக இருந்திருந்தால் …. நாயகியின் காது தோடு அசைவதில் தொடங்கி, நாயகியின் கால் கொலுசின் சப்தம் வரை காட்டி நாயகியின் அறிமுகம் இருக்கும் ….
ஆனால், இது உழைக்கும் எளிய மக்களின் கதை. அதனால் எந்த வித வீண் வருணனைகளுமின்றி ராசாத்தி அறிமுகமாகிறாள் நமக்கு.
தனது கணவனுக்கு முழு பலமாய், தனது மாமியாருக்கு ஆதரவாய், ஊர்க்காரர்களிடத்தில் நல்ல பெண்ணாய்; அவளது சகோதரர்களுக்கு நல்ல தங்கையாக என நாவல் முழுவதும் அழகு பால் பயணிக்கிறாள் இந்த ராசாத்தி.
ராசாத்தியின் மன உறுதிக்கு சான்றாக, மயக்கமுற்ற தனது கணவனை தனது தோளிலேயே 3 மைல் சுமந்து, மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிற அந்த ஒரு காட்சி போதும்.
பிற்பகுதியில் வருகின்ற நந்தகுமார், மகாதினகரன், ஒண்டிவீரன், ரத்தினம் இவர்கள் அனைவருமே மிகச்சிறந்த பாத்திரப் படைப்புகளாக நாவலை அர்த்தப்படுத்துகிறார்கள்.
ஒண்டிவீரனின் படிப்பார்வம் போல இன்றைய இளையோரும் படிக்க ஆரம்பித்தால் அது மிகச்சிறந்த முன்னெடுப்பாக இருக்கும்.
இறுதியில், அந்த “ஒண்டிவீரன் ” யார்? அவரின் தேசப்பற்று எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்றும் விளக்குவது மிகச் சிறப்பு.
இப்படியாக ஒரு நல்ல நாவலை படைத்த திரு. சிந்து சீனு அவர்களுக்கு வாழ்த்துகள்.
அ.ஜெ.அமலா, ஆரணி.

4 Comments

  1. மிக்க நன்றிகள் நான். சிந்து சீனு Sirக்கு வாழ்த்துகள்.

  2. மிகவும் நன்றிகள் சகோதரி அருமையான விமர்சனம் தங்கள் உயர்ந்த இலக்கிய பயணம் என் போன்றோருக்கு ஊக்கம் தருகிறது அன்புடன் சிந்து சீனு வேலூர்.

  3. மிகவும் நன்றிகள் சகோதரி தங்கள் உயர்ந்த அன்பிற்கு அத்தாட்சி ஒரு மாணவனாக தோழ்மையுடன் சிந்து சீனு வேலூர்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!