கட்டுரை

“இன்றைய பொம்மை நாளைய செம்மை ” – நூல் விமர்சனம்

308views
சமுதாய ஆவலும் தமிழ் மீதான காதலும் அதிகம் கொண்ட அன்பு இளவல் பாக்கி, “ஒளித்துவைத்த பொம்மை” என்ற தலைப்பில் தனது கவிதைகளை தொகுத்து தந்திருக்கிறார்.
இத்தொகுப்பில் பல கவிதைகள் ஒளித்துவைத்த பொம்மையாய் இல்லாமல் வெளிப்படுத்தப்பட்ட செம்மையாகவே சிறப்பு சேர்க்கின்றன.
கடலோரத்து நகரமான சுந்தர பாண்டியன் பட்டினத்தில் பிறந்து வந்த பாக்கியின் மனதுக்குள் கவிதையின் அலைகள் ஓயாமல் மோதுகின்றன. அந்த அலைகளின் சுவடுகள் இந்தத் தொகுப்பிற்குள் காணப்படுகின்றன.

மழலை பேசும் மொழிகள் என்பது இலக்கணத்தால் செதுக்கப்பட்ட, சிந்தனைகள் பதுக்கப்பட்ட, இலக்கியமாகத் திகழ்வது இல்லை. ஆனாலும் அவற்றில் கவித்துவம் இல்லாமல் இல்லை.
பாக்கியின் கவிதைகளில் தமிழ் மீது அவர் கொண்ட தாகமும் மோகமும் பாக்கியில்லாமல் பளிச்செனத் தெரிகின்றன.
“Poetry is the spontaneous overflow of powerful feelings” கவிதை என்பது வலிமை மிகு உணர்வுகள் வார்த்தைகள் என்ற வடிவெடுத்து அனிச்சையாய் வெளிப்படுவது என்பான் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்.
“உள்ளத்துள்ளது கவிதை – இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை”
என்பார் கவிமணி தேசிக விநாயகம்.
“பாட்டைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா” என்பார் பாரதி.
“இரட்டைச் சடையில்
இறுக்கிக் கட்டிய
நாடாவின் சுருக்கமாய்
இருக்கிறது
பள்ளிப் பருவ நினைவுகள்”
என்று புதிய உவமை காட்டுகிறார் ஆர்வம் தேக்கி எழுதும் கவிஞர் பாக்கி.

காதலைத் தமிழாக்கியும், தமிழைத் தனது காதலாக்கியும் எழுச்சியோடு நகர்கிறது பாக்கியின் எழுதுகோல்.
மதவாத ஃபாசிஸ்டுகள் மாணவர்களின் அறிவை வளர்க்கும் கல்வியில், பிரிவினைவாத நஞ்சு கலப்பதைக் கண்டு நெஞ்சு பொறுக்காத பாக்கி
அரசியலில்
கல்வியைப் புகுத்துங்கள்
கல்வியில்
அரசியலைப் புகுத்தாதீர்கள்
கல்வித்தாய்
இறந்து விடுவாள்”
என்று கவித்துளிகளால் கண்ணீர் வடிக்கிறார்.
“சென்னையில் பெய்யும்
கனமழை போல்
அவள் திடீரென்று பேரன்பால்
மூழ்கடிப்பாள்”
என்று அவர் எழுதும் போது ஒரே நேரத்தில் அடை மழையில் தத்தளிக்கும் சென்னையையும் அன்பு மழையில் தத்தளிக்கும் தன்னையும் படிமமாக முன் நிறுத்துகிறார்.
பாக்கியின் கவிதை இன்னும் இன்னும் செம்மை பெற வேண்டும். தமிழின் மீதான நேசிப்பும், தடையில்லாத வாசிப்பும் அவர் கவிதைகளை எதிர்காலத்தில் ஒளி பெறச் செய்யும்.
ஓட்டப் போட்டியில் ஓடி வென்றவரைப் போற்றிப் பாராட்டும் உலக உள்ளம், நடைவண்டியோடு தட்டுத் தடுமாறி நடக்கும் தன் மழலையை அள்ளி எடுத்து பாராட்டும் அன்னையின் உள்ளம்.
இளம் படைப்பாளிகளின் படைப்புகளை அன்னை உள்ளத்தோடு மட்டுமே அடியேன் படிக்கிறேன். அவர்களுக்காக வாழ்த்து மலர்களைத் தொடுக்கிறேன்.
தொடக்க நிலையில் தரப்படும் ஊக்கமும் ஆக்கமும், தொடர்ந்து உழைக்கும் படைப்பாளிகளை சிகரங்கள் தொடவைக்கும்.
பாக்கியின் அன்பும், பாசம் தோய்ந்த பண்பும் கவித்துவமானவை. பாக்கியின் எதிர்காலக் கவிதைகள், பாக்கியம் மிகுந்தவையாய் அமையும்.
“ஒளித்துவைத்த பொம்மை” கவிதைத் தொகுப்பு கவிஞர் பாக்கிக்கு கவிதையுலகில் தனி அடையாளத்தை கொண்டு வரலாம்.

1 Comment

  1. தம்பி கவிஞர் அப்துல் பாக்கி அவர்களின் ஒளித்துவைத்த பொம்மை புத்தகத்தை வாசித்தேன்.மிகவும் அருமையான கவிதையின் வரிகள். பள்ளிப் பருவத்திற்கு மீண்டும் சென்றுவிட்டேன். தம்பி பாக்கி அவர்களின் அன்பும் பாசமும் பண்பும் சேர்ந்த கவிதையாய் புத்தகம் இருக்கிறது. தம்பி பாக்கியின் கவிதைகள் மேலும் சிறப்பு பெற வேண்டும்.இவர் எல்லோரிடத்திலுடம் மதிப்பும் , மரியாதை கலந்த பாசமும் உடையவர் . உனது எழுத்துக்கள் பல்வேறு வெற்றிகளை பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்

    சகோதரி ஸ்டெல்லா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!