கட்டுரை

காவல் சுவடுகள் – நூல் விமர்சனம்

311views
இருளைச் சுற்றியிருக்கும் பெரு வெளிச்சம் : காவல் துறை.
அவரவர்களுக்கான துயரங்களை அவரவர்களே எழுதித் தீர்க்க வேண்டும். அதிலும் காவல் துறை சார்ந்த துயரங்களை ஒரு காவல் துறைப் பணியாளரே கவிதையில் எழுதுவதென்பது இதுவரை சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. இப்போது அதனை மா.ஆனந்தன் (வசந்தன் )சாத்தியமாக்க முயற்சித்துள்ளார். அது பாராட்டுக்குரிய ஒன்று.
ஒரு மாதாந்திர நாள்காட்டியின் சிவப்பு நிற விடுமுறை நாட்களை நம் குடும்பத்தினர் பார்ப்பதற்கும் ஒரு காவல் துறை பணியாளர் அல்லது அவரின் குடும்பத்தினர் பார்ப்பதற்கும் உள்ள மனநிலையிலிருந்து தொடங்குகிறேன் இந்தக் குறிப்பினை. இதர நாட்கள் எப்படி இருப்பினும் நாட்காட்டியின் சிவப்புநிற விடுமுறை நாட்கள் ஒரு சிறு சந்தோச ஒளிக்கீற்றையாவது நம் வாழ்வில் தந்துவிட்டுச் செல்லும். ஆனால் காவல்துறை நண்பர்களுக்கான நாட்காட்டியில் சிவப்பு நிறங்கள் அச்சமூட்டுவதாக இருக்கின்றன. பொது நாட்கள் பணியினையும், சிவப்பு நிற நாட்கள் அதிக பணியினையும் தருகின்றன. வேலை நாட்களில் வரமாட்டார், பொதுவிடுமுறை நாட்களில் வரவே மாட்டார் என்ற மனநிலைக்கு அவர்களின் குடும்பம் பழகிவிட்டது. ”அப்பா எங்கம்மா?” “அப்பா எப்ப வருவாரும்மா?” என்ற இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை சொல்லமுடியாத வாழ்க்கைதான் அவர்களுக்கானது.
நாளெல்லாம்
உறங்கியபின்னரே வரும் அப்பா
ஒருநாள் மதியமாகவே
வந்திருந்தார்
கண்ணாடிப்பெட்டிக்குள்ளாக
என்ற இந்த வரிகள் அந்த குழந்தைகளின் உட்சபட்ச வலிகளைப் பதிவு செய்வதாகவே அமைந்திருக்கின்றன. குடும்பத்தின் அனைவரும் ஒன்றாகக் கூடிய ஒரு தீபாவளி, பொங்கல் காவல்துறை நண்பர்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. நம் சமூகக் கட்டமைப்பு விடுமுறை நாட்களை அதிகமான குற்றங்களுக்கும் அதிகமான விதிமுறை மீறல்களுக்கும் பழக்கிவைத்துள்ளது.
தீபாவளி பொங்கல்
மணநாள் பிறந்தநாள்
ஞாயிற்றுக்கிழமை
எல்லாம்
வந்துகொண்டுதான் இருக்கிறது
…..ஆமாம் வந்துகொண்டுதான் இருக்கிறது என்று நாம் எளிதாக கடந்து போய்விடுகிறோம். அதன் வலியினை உணர ஒருபோதும் முயற்சிக்கவில்லை. ஒரு காவல் துறை பணியாளருக்கு அவரின் வேலையின் நிமித்தமும் அவரின் குடும்பத்தின் நிமித்தமும் இரக்கப்படுவது ஒரு சமூகக் குற்றம் என்ற ஒரு மனநிலைக்குப் பழக்கப்படுத்திவிட்டோம். எனவே அந்த வலி நமக்கு அந்நியமாகிப் போய்விட்டது. 24 மணி நேரமும் உடல்/மன நெருக்கடிக்குப் உட்படுத்திய ஓரு உயிரிடமிருந்து 24 மணி நேரமும் புன்சிரிப்பான உபசரிப்பினை எதிர் நோக்கும் இச் சமூகக் கட்டமைப்பினை ஓர் தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
தற்கொலை செய்துகொண்டு
மார்ச்சுவரியில்
கிடத்திவைத்திருப்பவள்/ன்
இவனுக்கு
யாராக இருக்கும்?
…..என்ற கேள்விக்கு ஒரு நியாயமான பதில் எவரிடமேனும் இருப்பின் தந்து உதவுங்கள். கொடூரமாக சிதைக்கப்பட்ட பிணங்களினூடான அவர்களின் வாழ்க்கையை அருகிலிருந்து உணர்ந்திருக்கிறேன்.

சமீப காலங்களில் சென்னை பெருநகரத்தில் ஜெமினி மேம்பாலம் மேம்பாலத்தை கடக்க நேரிடும் என் பேருந்து பயணங்களில் ஜன்னலோர இருக்கையினைத் தவிர்த்துவிடுவேன். அங்கே நானறிந்த வலியினை வசந்தன் உணர்ந்தும், உணர்ந்ததைக் கேட்டும் இப்படி எழுதியிருக்கிறார்.
பூட்சுகால்களுடன்
மாநகர பாலத்தின்மீது
பசியும் உடலுக்கு
எச்சிலை விழுங்கிகொண்டு
நிற்பவனுக்கு
எளிதில் வைத்துவிடலாம்
தோரணை
என்கின்ற மாயப்பெயரை
என்னிடம் நிறையக் கேள்விகள் இருக்கிறது சுவாசிக்கவும் முடியாத ஓர் இறுக்கமான உடையை எவ்வளவு நேரத்திற்கு உங்களால் உடுத்திக் கொள்ள முடியும்? உங்களின் பாதங்களை காற்றுக்குப் பழக்காமல் எத்தனை மணி நேரம் பூட்ஸ்க்குள் மறைத்து வைத்திருக்க முடியும்? இப்படியாக. என் வகுப்புத் தோழனிடம் இருமுறை பேசிக்கொண்டிருந்த போது பகலில் வழக்கமான பணி… இரவில் ரோந்துப் பணி… குற்றம் எந்த நேரத்திலும் நடக்கலாம்… எப்போது வேண்டுமானாலும் உன் தூக்கம் கலைக்கப் படலாம்… எனவே.. நீ கடைசியாக நீண்ட நேரம் தூங்கியது எப்போது என்று கேட்டேன்? விரக்தியாகச் சிரித்தான்… வேறென்ன செய்யமுடியும்?
நமக்கான இரவு ஓய்வுக்கானது அவர்களுக்கான இரவு அப்படி அமைக்கப் பட்டிருக்கவில்லை. எனவே ஒவ்வொரு இரவும் நான் ஆழமாய் தூங்கிக் கொண்டிருக்கிறேன்/ நாம் ஆழமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறோம். நம் தூக்கம் இருள் நிறைந்தது அந்த இருளுக்கு பின்னால் ஒற்றை விளக்கின் ஒளி ஒளியாக ஏதோ ஒரு காவல் நண்பர் நமக்காக விழித்துக் கொண்டிருக்கிறார். விருப்பப்பட்டு தானே இந்த வேலைக்கு வந்தார்கள் என்பது உங்கள் பதில் எனில் உங்களுடனோ உங்கள் சமூகத்திடனோ இனியும் பேசிவிட என்ன இருக்கிறது.
மஞ்சள் சிவப்பு பச்சை
சில நேரங்களில்
நீலமும் சிவப்பும் கலந்த
நிறங்களிலேயே
தொலைத்து விடுகிறான்
அவனுக்கான நிறங்களை
வண்ணத்துப் பூச்சிபோன்ற
குழந்தைகளின் கைகளில் உரசி
தொலைத்த நிறங்களை மீட்டுப்பதற்கேனும்
வேண்டும்
அவனுக்கும் ஒருநாள்
…..அந்த நாளை எப்போது தரப்போகிறோம். தரும் போது இந்த சமூகம் இன்னும் மேம்படும். அதுவரை நீங்களும் நானும் காவல் என்கிற நம் சமூகத்தின் ஒரு பகுதியை எரித்தே வெளிச்சம் பெறுவோம்.
ஆண்டன்பெனி

2 Comments

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!