இலக்கியம்

அன்பெனும் நூலிழைகளால் பின்னப்பட்ட அழகிய அனுபவப் பதிவுகளிவை என் குமார் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் புகழாரம்

128views
திரைப்பட உதவி இயக்குநர், எழுத்தாளர், கவிஞர் என் குமார் எழுதிய ‘காலமே போதி மரம்’ எனும் கட்டுரை நூலின் வெளியீட்டு விழா கடந்த அக்.15 அன்று காலையில் கோடம்பாக்கத்திலுள்ள இடம் எனும் அரங்கில் நடைபெற்றது.  அகநி வெளியிட்டிருக்கும் இந்நூலினை திரைப்பட இயக்குநரும் இசைப்பாடகியுமான ஷோபா சந்திரசேகர் வெளியிட, இயக்குநர் அஜயன்பாலா பெற்றுக் கொண்டார்.  கவிஞர் அ.வெண்ணிலா பேசுகையில், “அன்பெனும் நூலிழைகளினால்  அழகாகப் பின்னப்பட்டுள்ள இந்நூலில் வலம்வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுமே நம் மனதுக்கு மிக நெருக்கமானவராக இருக்கிறார்கள். சக மனிதர்கள் மேல் அன்பைப் பொழியும், அன்பை மட்டுமே பிரதிபலனாகக் கோரும் என் குமாரின் இந்த நூல், சிறந்த  எழுத்தாளராக குமாரை அடையாளப்படுத்தியுள்ளது” என்றார்.
இயக்குநர் கவிதாபாரதி தனது வாழ்த்துரையில், “இதிலுள்ள 15 கட்டுரைகளுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. 15 கதைகளுக்குள்ளும் ஏராளமான கவிதை வரிகள் கொட்டிக் கிடக்கின்றன. திரையுலகில் தான் பெற்ற அனுபவங்களை எல்லாம் இந்த நூலில் அழகியப் பதிவுகளாக்கியுள்ள என் குமார் நமது பாராட்டிற்கு உரியவராகிறார்” என்று கூறினார்.
எழுத்தாளர் பாக்கியம் சங்கர் பேசும்போது, “தான் பார்த்த மனிதர்களைப் பற்றி எவ்வித ஒப்பனைகளுமில்லாமல் இயல்பாக அப்படியே எழுதியுள்ளார் என் குமார். முதல் கட்டுரையே இசைஞானி இளையராஜாவைப் பற்றியதாக இருப்பது நம்மை நூலுக்குள்ளே அழைத்துச் செல்லும் நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது” என்றார்.
இயக்குநர் ஷோபா சந்திரசேகர் பேசியதாவது: “குமாரின் எழுத்துகளைப் படிப்பதற்கு முன்பே, அவரது குரலுக்கான ரசிகை நான். மிக அழகான குரலில் கொஞ்சமும் அதிராமல் ‘விகடகவி’ மின்னிதழில் ‘பட்டாம்பூச்சி பேசுது’ ஆடியோ தொடரில் குமார் பேசுவதை விடாமல் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு தொடர் முடியும்போதும் குமார் சொல்லும் ‘லவ் யூ’ எனக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த கட்டுரை நூலிலும் பல நல்ல வரிகள் என்னை ஈர்த்தன. சில வரிகள் ரொம்பவும் புதுமையாக இருந்தன. இன்னும் நிறைய எழுத என் குமாருக்கு வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் அஜயன் பாலா, பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவினை கவிஞர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார். நூலாசிரியர் என் குமார் ஏற்புரையாற்றினார். இயக்குநர்கள் வசந்த் எஸ் சாய், வடிவேல், இசையமைப்பாளர் சி.சத்யா, திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத் தலைவர் தமிழமுதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
படக்குறிப்பு:
சென்னையில் நடைபெற்ற விழாவில் திரைப்பட உதவி இயக்குநர் என் குமார் எழுதிய ‘காலமே போதி மரம்’ நூலினை இயக்குநர் ஷோபா சந்திரசேகர் வெளியிட, இயக்குநர் அஜயன் பாலா பெற்றுக்கொண்டார். அருகில், கவிஞர் அ.வெண்ணிலா, இயக்குநர் கவிதாபாரதி, எழுத்தாளர் பாக்கியம் சங்கர், கவிஞர்கள் மு.முருகேஷ், நிரஞ்சன் பாரதி, நூலாசிரியர் என் குமார் ஆகியோர் உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!