இலக்கியம்

கவிதை நந்தவனமாகிய நந்தனம்: கவிதை நூல் வெளியீட்டு விழா

137views
செங்கற்பட்டைச் சேர்ந்த கவிஞர் ஆ.கிருட்டிணன் எழுதிய ‘மண்  தொடும் விழிகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் தாமரைக் குடியிருப்பிலுள்ள பொதுவுடமை கட்சியின் மூத்த தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் இல்லத்தில் எளிய இலக்கிய நிகழ்வாக கடந்த செப்டம்பர் 10 அன்று நடைபெற்றது.
அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கவிஞர் ஆ.கிருட்டிணன், 2002-ஆம் ஆண்டில் ‘கிழக்கின் சிறகுகள்’ எனும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதியிருக்கும் ‘மண் தொடும் விழிகள்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா எளிமையாய் – உணர்வுபூர்வமாய் ‘தகைசால் தமிழர்’ அய்யா இரா.நல்லகண்ணு அவர்களின் இல்லத்திலேயே நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கலை இலக்கிய பெருமன்ற தலைவர்களுள் ஒருவரான ஜேம்ஸ் தலைமையேற்றார். தோழர் இரா.நல்லகண்ணு கவிதை நூலினை வெளியிட, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை இ.சத்யா பெற்றுக்கொண்டார். கவிஞர் மு.முருகேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
மல்லை இ.சத்யா பேசுகையில், “பொதுவுடமை இயக்கத் தலைவரின் இல்லத்தில் இப்படியொரு கவிதை நூலை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 98 வயதிலும் சோர்வுறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களை இன்றைய தலைமுறை இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கவிதை நூலினை தோழரின் இல்லத்தில் வெளியிடுவதால், இன்றிருந்து இந்த நந்தனம் பகுதி, கவிதை நந்தவனமாகிறது” என்று குறிப்பிட்டார்.
விழாவில், ஓவியக் கவிஞர் நா.வீரமணி, டாக்டர் சாந்தி, மேனாள் தலைமையாசிரியை ஏ.செ.தேவகுமாரி, கவிஞர்கள் செங்கை தாமஸ், மல்லை தமிழச்சி, பாரதி ஜிப்ரான், தமிழ்மதி, குயில்குரல் ராஜேஸ்வரி, திரைக்கலைஞர் ஆ.கி.சரவணபாரதி உள்ளிட்ட
ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!