தமிழகம்

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் – புளியம்பட்டி புத்தக திருவிழாவில் கவிஞர் ஜோ மல்லூரி வேண்டுகோள்

238views
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் ஒன்பதாவது ஆண்டாக புத்தகத் திருவிழா கே. ஜி. மஹாலில் நடைபெற்று வருகிறது.
தினசரி மாலை சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை மாலை நடைபெற்ற கருத்தரங்க நிகழ்விற்கு ஸ்பிரிங்டல் பப்ளிக் பள்ளியின் அறங்காவலர் குருசாமி தலைமை தாங்கினார். விடியல் சமூக நல அறக்கட்டளை செயலாளர் ஜெயகாந்தன் வரவேற்றார். கோவை புளியம்பட்டி அரிமா சங்க நிர்வாகி நந்தகுமார், ஸ்பிரிங்டல் பப்ளிக் பள்ளியின் இயக்குனர் கமல், முதல்வர் பிரியா பட்டிமன்ற பேச்சாளர் சித்ரா சுப்பையன், சிந்தாமணி வித்யாலயா லோகநாதன், காந்தி கல்லூரி விரிவுரையாளர் கார்த்திகேயன், விடியல் அறக்கட்டளை தலைவர் வாணி தருமராசு கே ஜி பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் திரைப்பட நடிகர் கவிஞர் ஜோ மல்லூரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, புஞ்சைபுளியம்பட்டி போன்ற சிறிய ஊரில் தொடர்ச்சியாக புத்தகத் திருவிழா நடத்தப்படுவது பாராட்டுக்குரியது. இவ்வளவு ஆர்வமாக மாணவ மாணவியர்களும், பொதுமக்களும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்பதை பார்த்து மகிழ்கிறேன். நினைத்தால் வருவதல்ல கவிதை. ஆன்மாவின் வியர்வை தான் கவிதை. எப்படி குழந்தையை வளர்க்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களுக்கு ஏழு கட்டளைகள் . வருடத்துக்கு ஒரு முறை உங்கள் குழந்தைகளை ஆதரவற்ற அல்லது முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை எங்காவது பயணம் செய்ய வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை புத்தகத்தை பரிசளிக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு ஒரு முறை குழந்தைகள் மௌன விரதத்தை கடைபிடிக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை உங்கள் வீட்டு கழிப்பறையை அவர்களே சுத்தம் செய்ய வேண்டும். இந்த ஏழு கட்டளைகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லி தந்தால் அவர்கள் வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம். அதேபோல குழந்தைகள் தாய் தந்தையை மதித்து நடக்க வேண்டும். அவர்கள் தரும் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு. எவன் ஒருவன் தாய் தந்தையை மதித்து நடக்கிறானோ உலகில் அவனே தலைசிறந்த மாமனிதனாக உருவாகிறான் ஒவ்வொரு குழந்தையும் தாயின் முகத்தையும் தந்தையின் பாதத்தையும் அடிக்கடி பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் கனவு, உழைப்பு, தியாகம் உங்களுக்கு புரியும். நான் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றபோது ஒவ்வொரு இல்லத்திலும் குழந்தைகள் கையில் 3 பொருட்கள் இருந்தன. ஒன்று சாக்லேட், இரண்டு பொம்மை, மூன்றாவது புத்தகம். அதுபோல இத்தகைய புத்தகத் திருவிழாக்களில் பெற்றோர்கள் நல்ல நூல்களை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி அவர்களை ஞானமுள்ள மனிதனாக உருவாக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், மாணவ மாணவியர்கள், வாசகர்கள் திரளாக பங்கேற்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!