தமிழகம்

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் ரூ 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை!

114views
விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 9 ஆம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் ரூ 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது.
இதுகுறித்து விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் புன்செய் புளியம்பட்டியில் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. தொடர்ந்து 9 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு புத்தக திருவிழா நவம்பர் 16 முதல் 20 வரை கே ஜி மஹாலில் நடைபெற்றது.
ஐந்து நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.சி.நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ப்ரிங்டல் பப்ளிக் பள்ளி, எஸ் என் ஆர் வித்யா நேத்ர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிறுமுகை அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி வித்யாலயா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி, காந்தி கலை அறிவியல் கல்லூரி நிர்மலா கல்லூரி செயின்ட் ஜோசப் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் , பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இக்கண்காட்சியில் முன்னணி பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில் புத்தகங்களுக்கு 10 % சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டது. 9 ஆவது புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் மொத்தம் 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. 25000 இக்கும் மேற்பட்டோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர்.
ஓவ்வொரு நாள் மாலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் ஆர் வி உதயகுமார், பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம், கவாலியர் மதிவாணன், திரைப்பட நடிகர் – கவிஞர் ஜோமல்லூரி, திரைப்பட நடிகர் தாமு ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள். மேலும் தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், இயற்கை விவசாயிகள், இளம் தொழில் அதிபர்கள், சமூகசேவர்கள், பல துறைகளில் சாதனை படைத்த மாணவ மாணவியர்கள் ஆகியோர் புத்தக திருவிழாவில் கெளரவிக்கப்பட்டார்கள்.
புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் மனமார்ந்த நன்றிகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!