தமிழகம்

சிவகாசி மகளிர் கல்லூரியில், மின்சார சேமிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

80views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில்,  மின்சார சிக்கனம் மற்றும் மின்சார சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர், பெட்காட் அமைப்பின் மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி முன்னிலையில், சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் பாபநாசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதிகாரி பாபநாசம், மாணவிகள் மத்தியில் பேசும்போது, மின்சாரத்தை சரியாகவும், முறையாகவும் பயன்படுத்தினால் மின் கட்டணம் வெகுவாக குறையும். மின்சார சேமிப்பும் இருக்கும். பெரும்பாலானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், ஆட்கள் இல்லாத அறைகளில் விளக்குகளை எரியச் செய்வதும், மின் விசிறிகளை ஓடச் செய்வதையும் ஒரு வழக்கமாகவே வைத்திருப்பார்கள். அறைகளில் இருந்து வெளியே செல்லும் போது, கண்டிப்பாக மின்சார சுவிட்சுகளை அணைக்க வேண்டும்.
இன்று செல்போன் மற்றும் லேப்டாப்களுக்கு சார்ஜ் போடும் தேவை அதிகமாக இருக்கிறது. மின் சாதனங்களில் சார்ஜ் நிரம்பியவுடன் சுவிட்சை அணைக்காமல், மின்வயரில் இருந்து செல்போனையும், லேப்டாப்பையும் மட்டும் எடுத்துச் செல்லும் பழக்கம் அதிகப்பேரிடம் உள்ளது. நீங்கள் செல்போனை, மின் வயரிலிருந்து எடுத்து விட்டதால்  மின்சாரம் சிக்கனமாகி விடும் என்று நினைப்பது தவறு. பிளக்கில் இருக்கும் சுவிட்சுகளை அணைக்க வேண்டும். அதே போல தேவையற்ற இடங்களில் விளக்குகளை எரியச் செய்வதாலும், மின்விசிறிகள் இயங்குவதாலும் மின்சாரம் அதிகமாக விரையமாகும். மேலும் மின் கட்டணமும் அதிகரிக்கும். எனவே மின் சாதனங்களின் பயன்பாடுகள் முடிந்தவுடன் சுவிட்சுகளை அணைக்கும் வழக்கத்தை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பேசினார்.
மேலும், தங்களது பகுதிகளில் மின்தடை, மின் கம்பங்கள் சேதம் போன்ற பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், 94987 94987 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் பிரச்சினைகள் உடனடியாக சரிசெய்யப்படும் என்று, செயற்பொறியாளர் பாபநாசம் கூறினார். கருத்தரங்கில், உதவி செயற்பொறியாளர் முருகேசன், பேராசிரியர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கல்லூரி நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மேகலா நன்றி கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!