தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே, ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா பிடிபட்டது. 4 பேர் கைது

44views
விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில், கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆபரேசன் 3.0 கஞ்சா தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு, ஆந்திரா மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அருப்புக்கோட்டை அருகேயுள்ள தொட்டியங்குளம் ரயில்வே பாலம் சந்திப்பு பகுதியில், ஏ.எஸ்.பி. கருண்கரட் தலைமையிலான போலீசார், நேற்று நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் வேகமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் 22 கிலோ கஞ்சா கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என்று தெரிய வந்தது. காரில் கஞ்சா கடத்தி வந்த பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜயன் (33), சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (23), ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த சிரஞ்சீவி (36) ஆகிய 4 பேரையும் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கஞ்சா எந்தப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட இருந்தது, மேலும் இதில் தொடர்புள்ளவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் கஞ்சா கடத்திவரப்பட்ட சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!