தமிழகம்

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

400views
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரேமலதா தலைமையில் உலக எய்ட்ஸ் தின பேரணி நடந்தது. அதனை தொடர்ந்து உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் எஸ்.எஸ். ராஜேஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சை பிரிவு பேராசிரியர் மருத்துவர் எஸ். அமலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா பேசுகையில், தன் பணியின் போது அதிக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை செய்தமைக்காக மாநில விருது பெற்றதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார். அதேபோல் தென்காசி மாவட்டத்திலும் அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் அனைத்து விதமான சிகிச்சையும் தடையின்றி கிடைக்க அனைத்து மருத்துவர்களும் பணியாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பேசுகையில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பிரசவம் மற்றும் பிரசவ அறுவை சிகிச்சையும், எலும்பு முறிவு மற்றும் பொது அறுவை சிகிச்சைகளும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.
மேலும் முறையான பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைகளும் செய்ய தென்காசி அரசு தலைமை மருத்துவமனை தயாராக உள்ளதாக கூறினார். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சை பேராசிரியர் மருத்துவர் எஸ் அமலன் பேசுகையில், தற்போதைய நமது நோக்கம் எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது, எனவே அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் அனைத்து பணியாளர்களும் முறையான பாதுகாப்பு கவசங்களை அணிந்து பணி புரிய வேண்டுமென அறிவுறுத்தினார்.

இவ்விழாவில் ஏ.ஆர்.டி வட்டார மருத்துவ அதிகாரி மருத்துவர் விஜயகுமார், NHM நோடல் ஆபீசர் கார்த்திக் அறிவுடை நம்பி, அனைத்து துறை மருத்துவர்கள், நம்பிக்கை மையம் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைத்து பொது மக்களுக்கும் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளையும் தென்காசி அரசு மருத்துவமனை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!