தமிழகம்

சாத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து சென்னையைச் சேர்ந்த 2 பேர் பரிதாப உயிரிழப்பு

268views
சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், பெத்துரெட்டிபட்டி விலக்கில் இன்று காலை, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஓடையில் பாய்ந்து கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்கரவர்த்தி (57) என்பவர் சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். ராக்லாண்ட் (60) என்பவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சிக்கிய மேலும் இருவர் படுகாயமடைந்து, சாத்தூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில், சென்னையைச் சேர்ந்த சக்கரவர்த்தியின் மகன் அபிஷேக், திருநெல்வேலியில் உள்ள ஐ.ஏ.எஸ். அகடாமியில் படித்து வருகிறார் என்றும், அவரை பார்ப்பதற்காக சக்கரவர்த்தி தனது நண்பர்களுடன் சென்னையிலிருந்து காரில் திருநெல்வேலிக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீசார் விசாரணையில் தெரிந்தது. விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!