ஓமன் வளைகுடாவில் ஐக்கிய அரபு அமீரகக் கப்பல் கடத்தி புதன்கிழமை விடுவிக்கப்பட்டது. அங்கு ஈரானுக்கும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐக்கிய அரபு அமீரகக் கடல் பகுதியில், பனாமா கொடியேற்றப்பட்ட “ஆஸ்ஃபால்ட் பிரின்சஸ்’ என்ற கப்பல் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை இரவு கடத்தப்பட்டதாக பிரிட்டன் கடற்படை தெரிவித்தது. அந்தக் கப்பல் ஈரானை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் பின்னர் புதன்கிழமை காலை அது விடுவிக்கப்பட்டு மீண்டும் ஓமனை நோக்கித் திரும்பியதாகவும் செயற்கைக்கோள் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகி, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கடல் பகுதியில் அந்த நாட்டுக்கும் இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
அண்மையில் இஸ்ரேல் நிறுவனத்தின் எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இந்தச் சூழலில், ஐக்கிய அரபு அமீரகக் கப்பல் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றஅச்சத்தை ஏற்படுத்தியது.