மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.
முன்னதாக தாஹியா தொடக்க சுற்றில் கொலம்பியாவின் டைக்ரரோஸ் அர்பனோவை 13-2 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தினார். அடுத்ததாக காலிறுதியில் பல்கேரியாவின் ஜியார்ஜி வாலென்டினோவ் வாங்கெலோவை 14-4 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதில் கஜகஸ்தானின் நுரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார் ரவி தாஹியா.
கடைசி நேரத்தில் 2-9 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த தாஹியா, அதிரடியாக தனது பலத்தை பிரயோகித்து “டபுள் லெக் அட்டாக்’ மூலம் சனாயேவை கட்டுப்படுத்த, “விக்டரி பை ஃபால்’ முறையில் தாஹியா வென்றதாக அறிவிக்கப்பட்டார். இறுதிச்சுற்றில் தாஹியா, நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் ஜாவுர் உகுயேவை எதிர்கொள்கிறார்.
தீபக் புனியா: மற்றொரு இந்தியரான தீபக் புனியா 86 கிலோ பிரிவில் போட்டியிட்டு அரையிறுதிச்சுற்றில் வீழ்ந்தார். அடுத்ததாக அவர் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் களம் காண்கிறார்.
தீபக் தனது முதல் சுற்றில் நைஜீரியாவின் எகெரெகிமே அஜியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். காலிறுதியில் சீனாவின் ஜுஷென் லின்னை 6-3 என்ற கணக்கில் வீழ்த்திய தீபக், அரையிறுதியில் அமெரிக்காவின் டேவிட் மோரிஸ் டெய்லரிடம் 10-0 என்ற கணக்கில் வீழ்ந்தார்.
மகளிருக்கான 57 கிலோ பிரிவில் பங்கேற்ற அன்ஷு மாலிக், தனது தொடக்க சுற்றில் பெலாரஸின் இரினா குராச்கினாவிடம் 2-8 என்ற கணக்கில் தோல்வி கண்டார். எனினும், குராச்கினா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளதன் அடிப்படையில் அவரிடம் தோற்ற அன்ஷு மாலிக் “ரெபிசேஜ்’ எனப்படும் மறுவாய்ப்பு சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.